செய்திகள்

லெபனானில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்: 105 பேர் பலி

Makkal Kural Official

ஒரே வாரத்தில் நஸ்ரல்லா உள்பட 7 முக்கியத் தலைவர்கள் உயிரிழப்பு

பெய்ரூட், செப். 30–

லெபனானில் மீண்டும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 105 பேர் கொல்லப்பட்டனர். 350க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் ஒரே வாரத்தில் நஸ்ரல்லா உள்பட 7 முக்கியத் தலைவர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், இப்போது லெபனானை தளமாக கொண்டுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதும் தாக்குதல் தொடுத்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலை இஸ்ரேல் மீண்டும் லெபனான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் 105 பேர் கொல்லப்பட்டனர். 350க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர் என லெபனான் சுகாதாரத்துறை தெரிவித்தது.

முதன்முறையாக பெய்ரூட் நகரின் மத்தியப் பகுதியான கோலாவில் குடியிருப்புகள் நிரம்பிய இடத்தில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் இறந்தனர். இவர்களில் 3 பேர் பாலஸ்தீன விடுதலை பாப்புலர் முன்னணி என்ற ஆயுதக் குழுவின் முக்கியத் தலைவர்கள் என அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது.

பால்பெக் ஹெர்மல், சிடோன், கலீ, ஹாபியா பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இருந்து தப்பிக்க லெபனான் மக்கள் நாட்டை விட்டு வெளியேற துவங்கி விட்டனர். எங்கள் இலக்கை அடையும் வரை நிறுத்தமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாக உள்ளார்.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை தொடங்கி ஒரு வாரமாக இஸ்ரேல் லெபனான் மீது நடத்திவரும் தாக்குதலில் 87 குழந்தைகள், 156 பெண்கள் உள்பட 1030 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லெபனானின் பெக்கா பிராந்தியத்தில் இன்று காலை வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயுதங்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சில இடங்களைக் குறிவைத்து அழித்துள்ளோம். அந்த இடங்கள் ஹிஸ்புல்லாக்களுடன் தொடர்புடையவை” என்று தெரிவித்துள்ளது.

முக்கிய தலைவர்கள்

ஈரான், சிரியாவின் ஆதரவுடன் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா, லெபனானின் ரகசிய இடங்களில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். ஈரானின் மூத்த தலைவர்கள், ஹிஸ்புல்லாவின் மூத்த தலைவர்களுக்கு மட்டுமே அவரின் இருப்பிடம் தெரியும். இந்நிலையில் அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டது உறுதியானது. முன்னதாக ஹிஸ்புல்லா ட்ரோன் பிரிவுத் தலைவர் உள்ளிட்ட பலரும் கொல்லப்பட்டனர்.

ஹிஸ்புல்லாவை வேரோடு அழிக்கச் சூளுரைத்துள்ள இஸ்ரேல் அவ்வமைப்பின் முக்கிய கமாண்டர்களையும் வரிசையாகக் கொலை செய்து வருகிறது. நேற்றைய தினம் ஹிஸ்புல்லா உயர்மட்ட கமாண்டர் நபில் கவுக் தங்கள் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. மேலும் ஹிஸ்புல்லாவின் உயர் மட்ட தலைவர்கள் புவாட் ஷுகுர், இப்ராகிம் அகில் உட்பட 7 முக்கிய தலைவர்களை இஸ்ரேல் கொலை செய்துள்ளது.

இதற்கிடையே பெய்ரூட்டில் உயிரிழந்த தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் உடலை ஹசிபுல்லாவினர் மீட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நஸ்ரல்லாவின் உடலில் நேரடி காயங்கள் ஏதும் இல்லை எனவும், குண்டுவெடிப்பின்போது அதிர்ச்சியினால் ஏற்பட்ட அழுத்தத்தால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நஸ்ரல்லா கொல்லப்பட்டதைக் கண்டித்து பாகிஸ்தானில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தை நோக்கி முன்னேறிய போராட்டக்காரர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டத்தைக் கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *