செய்திகள்

லியோ’ நாளை ரிலீஸ்: காலை 7 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை

உள்துறைச் செயலாளர் அமுதா அறிவிப்பு

சென்னை, அக். 18–

காலை 7 மணிக்கு லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை என்று உள்துறைச் செயலாளர் அமுதா அறிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ள லியோ திரைப்படம் நாளை (வியாழக்கிழமை) வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை நாளை முதல் 24-ந்தேதி வரை காலை 9 மணி முதல் 1.30 மணி வரை 5 காட்சிகள் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.

ஆனால், முதல் நாள் ரசிகர்கள் காட்சியாக அதிகாலை 4 மணிக்கு திரைப்படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும். மறுநாள் முதல் 24-ந்தேதி வரை காலை 7 மணி முதல் 1.30 மணி வரை திரையிட அனுமதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் படத்தை தயாரித்துள்ள செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ‘லியோ’ படத்தை அதிகாலை 4 மணிக்கு திரையிட அனுமதிக்க முடியாது என்றும், காலை 7 மணிக்கு திரையிட அனுமதி கேட்கும் கோரிக்கையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

திரையரங்கு உரிமையாளர்கள்

கோரிக்கை

இந்த நிலையில் ‘லியோ’ சினிமா சிறப்புக்காட்சிகள் நேரம் தொடர்பான பிரச்சினை குறித்து தலைமை செயலகத்தில் சில அதிகாரிகளை நேற்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் சந்தித்து பேசினர். பின்னர் பத்திரிகையாளர்களுக்கு சங்கச்செயலாளர் வி.டி.எல்.சுப்பு அளித்த பேட்டி வருமாறு:-

நாளையில் இருந்து 6 நாட்களுக்கு சிறப்பு காட்சியாக 5 காட்சிகளை திரையிட அனுமதி அளித்த முதல்-அமைச்சருக்கு நன்றி. பொதுவாக தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில்தான் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடைக்கும்.

லியோ படம் பெரிய படம் என்பதால் இடைவேளை நேரத்தை 5 நிமிடமாக குறைக்க திட்டமிட்டு உள்ளோம். தமிழக அரசு சொன்னபடி காலை 9 மணியில் இருந்து நள்ளிரவு 1.30 மணிக்குள் 5 காட்சிகளையும் முடித்துவிடுவோம். ஏற்கனவே முன்பதிவை தொடங்கி விட்டோம். இனி அதை மாற்ற முடியாது. அதனால் 9 மணிக்கு காட்சியை தொடங்க முடிவு செய்துள்ளோம். 19-ந்தேதியன்று (நாளை) மட்டும் இன்னும் முன்பதிவு செய்யவில்லை. அன்றைய தினம் அரசு என்ன உத்தரவிடுகிறதோ அதை செயல்படுத்த தயாராக இருக்கிறோம். அரசு கொடுத்த நேரத்தின்படி படத்தை ஓட்ட தயாராகி விட்டோம். 5 காட்சிகள் திரையிடப் போகிறோம். தயாரிப்பாளர்கள் தரப்பில் காலை 7 மணிக்கு படத்தை தொடங்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் அதை 9 மணிக்கு தொடங்குவதில் என்ன வித்தியாசம் உள்ளது.

காலை 9 மணி என்ற அளவில் முன்பதிவு டிக்கெட் கொடுத்துள்ளோம். அதை மாற்றுவது சரியாக இருக்காது. பிரச்சினை வரும். ஆனாலும் அரசு என்ன அனுமதி கொடுக்கிறதோ அதை செயல்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தநிலையில், லியோ படத்துக்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லை. அரசாணையின்படி நாளை முதல் 25-ம் தேதி வரை லியோ படத்துக்கு காலை 9 மணி காட்சிகளுக்கே அனுமதி என உள்துறை செயலாளர் அமுதா கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *