செய்திகள்

டால்ஸ்டாய் வாழ்வை தழுவிய எஸ். ராமகிருஷ்ணனின் ‘மண்டியிடுங்கள் தந்தையே’ நூல் வெளியீடு

ரஷ்யாவை நம் கண்முன் நிறுத்தும் விவரிப்பு, விறுவிறுப்புடன் கூடிய தலைசிறந்த படைப்பு

நாவலை வெளியிட்டு திருப்புகழ் ஐஏஎஸ், பி.தங்கப்பன் புகழாரம்

சென்னை, டிச. 26–

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் “மண்டியிடுங்கள் தந்தையே” நாவலை, திருப்புகழ் ஐஏஎஸ் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

தேசாந்திரி பதிப்பகம் சார்பில் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் வாழ்வைத் தழுவி, எழுத்தாளர் எஸ்.ராமகிருஸ்ணன் எழுதிய ‘மண்டியிடுங்கள் தந்தையே’ நாவல் உள்ளிட்ட 10 புத்தகங்களின் வெளியீட்டு விழா, நேற்று மாலை 6.30 மணிக்கு, சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள ரஷ்ய பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு ரஷ்ய பண்பாட்டு மையத்தின் இயக்குநர் கென்னடி ராகலேவ் தலைமை தாங்கி, லியோ டால்ஸ்டாய் பற்றியும், எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ரஷ்ய பண்பாட்டு மையத்துடன் உள்ள தொடர்பு பற்றியும் எடுத்துரைத்தார்.

டால்ஸ்டாயில் கரைந்தேன்

அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருப்புகழ் ஐஏஎஸ், ‘மண்டியிடுங்கள் தந்தையே’ நாவலை வெளியிட்டு, தனது சிறப்புரையில் பேசியதாவது:–

அண்மை காலமாக தமிழ்நாடு அரசு எனக்கு வழங்கியுள்ள பெரும்பணியில் ஈடுபட்டுள்ள காரணத்தால், யார் எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் மறுப்பு சொல்லும் நிலையிலேயே இருந்தேன். சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையிலான ஏராளமான ஆய்வு நூல்களை தேர்ந்தெடுத்து படித்து, ஆய்வு செய்து குறிப்பு எழுதும் பெரும்பணியில் ஈடுபட்டு உள்ளேன். ஆனால், எழுத்தாளரும் நண்பருமான எஸ்.ராமகிருஷ்ணன் கடந்த 10 நாட்களுக்கு முன்னர், லியோ டால்ஸ்டாய் வாழ்வைத் தழுவி ஒரு நாவல் எழுதி இருக்கிறேன், அதனை வெளியிட வேண்டும் என்று கேட்டபோது, உடனே ஏற்றுக்கொண்டேன்.

காரணம், நான் எனது கல்லூரி காலங்களில் எனது நண்பர் ஒருவர் மூலமாக டால்ஸ்டாயின் எழுத்துக்களை படிக்கத் தொடங்கி, அவருடைய தீவிர வாசகனாக மாறி, அவருடைய புகழ்பெற்ற படைப்புகள் அனைத்தையும் வாசித்து அதில் கரைந்துபோய் இருக்கிறேன். அப்படியான லியோ டால்ஸ்டாய் பற்றிய நாவலை மீண்டும் 40 ஆண்டுகளுக்கு பிறகு, எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துகள் மூலம் படித்தது பெரிய அனுபவம்.

சிறந்த நூலுக்கான 5 அளவுகோள்

உண்மையில் ஒரு மொழி உயர வேண்டுமென்றால், அந்த மொழியின் இலக்கியங்களும் தரமும் உயர வேண்டும். அதற்கு ரஷ்ய இலக்கியங்ளே சான்று. வெறுமனே தமிழ் வாழ்க என்று கூறுவதால் பயனில்லை, அதனால் அந்த மொழி வளராது. பிரஞ்சு மொழியில் படிப்பதையே ரஷ்யர்கள் நாகரிகமாக கருதிக்கொண்டு இருந்த காலத்தில், அதனை மாற்றியவர்கள் ரஷ்ய எழுத்தாளர்கள் என்றால் மிகையில்லை.

ஒரு புத்தகம் நல்லதா இல்லையே என்பதற்கு ஆய்வாளர்கள் 5 அளவுகோள்களை வைத்துள்ளார்கள். வலிமையான தொடக்கம், சிறப்பான முடிவு, தெளிவான பாத்திரப் படைப்பு, விறுவிறுப்பு, வர்ணனை எனப்படும் கதை விவரிப்பு என்ற ஐந்தும் சரியாக இருக்க வேண்டும். எஸ்.ராமகிருஷ்ணனின் ‘மண்டியிடுங்கள் தந்தையே’ நாவலை படித்தேன். கிருஸ்துமஸ் பண்டிகைக்கு 18 நாட்களுக்கு முன்னதாக கேக் செய்வதில் இருந்து நாவல் தொடங்கி, முடிவில் டால்ஸ்டாய் சாமாதியில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்பதில் நாவல் முடிகிறது.

ஒருவர் செய்த தவறை மன்னித்து கோபத்தை விட்டுவிடுவதே மனநிறைவை தருவது. குற்றம் குறைகளோடு ஒருவரை ஏற்பதும், நிபந்தனையற்ற அன்பு செலுத்துவதுமே சிறப்பு என்பதை சொல்லிச் செல்கிறது நாவல். தந்தையை மன்னிக்கும் மனஉறுதி, பாத்திர படைப்புகளில் விறுவிறுப்பு என, ஒரு சிறந்த நூலுக்கான 5 அளவுகோள்களையும் நிறைவு செய்துள்ள சிறந்த படைப்பாக்கம் கொண்ட நாவல் “மண்டியிடுகிறேன் தந்தையே” நூல் என புகழாரம் சூட்டினார்.

எனது 2 ஆண்டு வாழ்வு

நாவல் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது:–

ரஷ்ய பண்பாட்டு மையம் எனது மனதுக்கு நெருக்கமான ஒரு இடம். அங்கு இந்த புத்தகங்களை வெளியிடுவதில் மகிழ்கிறேன். கொரோனா காலகட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் எழுதப்பட்டது இந்த 10 புத்தகங்களும். இவை 10 புத்தகங்கள் என்பதை விட, எனது இரண்டு ஆண்டு வாழ்வு என்று சொல்லலாம். இந்த புத்தகங்களில் உள்ள எனது சொற்கள் வழியாக நான் உங்களை வந்தடைந்திருக்கிறேன் என்பதே உண்மை. இந்திய மொழிகளிலேயே தமிழில் மட்டும்தான் வேற்றுமொழி நாவல்கள் அதிகம் வருகிறது என்று, நண்பரான மலையாள நாவலாசிரியர் ஒருவர் கூறினார். தமிழ் மொழியில் வெளியாகி உள்ள எனது இந்த நாவல், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட வேற்று மொழிகளில் இன்னும் சில மாதங்களில் வெளியாக உள்ளது. அதனைத் தமிழுக்கான பெருமையாக கருதுகிறேன் என்று கூறினார்.

இந்திய ரஷ்ய வர்த்தக மையத்தின் பொதுச்செயலாளர் தங்கப்பன் பேசும்போது கூறியதாவது:–

ரஷ்ய பண்பாட்டு மையத்தின் இந்த அரங்கம், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, இந்த புத்தக வெளியீட்டு விழாவுக்குத்தான் திறக்கப்பட்டுள்ளது. ரஷ்ய இலக்கியங்களுக்கு எஸ்.ராமகிருஷ்ணன் செய்துள்ள பங்களிப்பு அபாரமானது. எனவே, அவருடைய நூல் வெளியிட்டு விழாவில் இந்த அரங்கம் மீண்டும் திறக்கப்பட்டது மகிழ்ச்சிக்குரியது. எஸ்.ராமகிருஷ்ணன் இதுவரை ரஷ்யாவிற்கு சென்றதில்லை. இப்போதுதான் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக, 20 க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற ரஷ்ய இலக்கியவாதிகளின் பல்வேறு நூல்களை மொழிபெயர்த்துள்ளதுடன், விமர்சனக் கட்டுரைகள், சொற்பொழிவுகள் என தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்துள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன். இவருடைய சொற்பொழிவுகளும் உரைகளும் மக்கள் மொழியில் இருக்கும். அதுவே இவருடைய சிறப்பு என்று பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், காந்தியின் நிழலில் நூலை பற்றி சரவணன் பேசினார். நிகழ்ச்சியில் ஏராளமான எழுத்தாளர்களும் வாசகர்களும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *