அறிவியல் அறிவோம்
லிப்ட் இயந்திரத்தில் விபத்துகளைத் தடுக்கும் கருவி கண்டுபிடித்த வாழப்பாடி அரசு பள்ளி மாணவி இளம்பிறைக்கு தேசிய விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழப்பாடி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ம.இளம்பிறை டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் இரண்டாவது முறையாக விருது பெற்று சாதனை படைத்துள்ளாா்.
வாழப்பாடியைச் சோ்ந்த, முடிதிருத்தும் தொழிலாளி மதியழகன்- சத்திய பிரியா தம்பதியின் மகள் ம.இளம்பிறை (16). இவா், வாழப்பாடி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
புதுதில்லியில் கடந்த 2022 செப்டம்பரில் நடைபெற்ற பள்ளி மாணவா்கள் இடையேயான அறிவியல் கண்டுபிடிப்பு கண்காட்சி, போட்டியில் தமிழகத்தில் இருந்து மாணவி இளம்பிறை உள்பட 13 போ் கலந்து கொண்டனா்.
இதில் இளம்பிறை வடிவமைத்த அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பயன்படுத்தப்படும் லிப்ட் இயந்திரத்தில், விபத்துகளைத் தடுக்கும் கருவிக்கு தேசிய அளவிலான ‘இன்ஸ்பயா் மனாங்’ விருதும் மூன்றாம் பரிசும் கிடைத்தது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜெயேந்திர சிங், மாணவி இளம்பிறைக்கு விருதினை வழங்கி பாராட்டினாா். தமிழகத்திலிருந்து இந்த விருதை பெறும் முதல் மாணவி என்ற பெருமை பெற்றாா்.
இதனையடுத்து, கடந்த டிசம்பா் மாதம் கம்போடியா நாட்டில் நடைபெற்ற ‘ஆசியன் – இந்தியா கிராஸ் ரூட் இனோவேஷன் ஃபோரம்-2022’ அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றாா். இந்த மாநாட்டில் இவரது கண்டுபிடிப்பிற்கு ஆசிய நாடுகள் அளவில் பாராட்டும் பரிசும் கிடைத்தது.
இதனைத்தொடா்ந்து, கடந்த ஜனவரி 20 முதல் 22 வரை புதுதில்லியில் யாழி அறிவியல் மற்றும் பொறியியல் அசோசியேஷன் , பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து நடத்திய, ஐரிஸ் அறிவியல் ஆய்வு மாநாட்டில் பங்கேற்ற மாணவி இளம்பிறை, தேசிய அளவில் தனிசிறப்பு (அவுட் ஸ்டேண்டிங்) விருது பெற்று சாதனை படைத்தாா்.
இம் மாணவிக்கு கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி- பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள், ஆசிரியா்கள்-ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
தேசிய அறிவியல் மாநாட்டில் தனி சிறப்பு விருது பெற்ற மாணவி இளம்பிறை கூறியதாவது: எனது கண்டுபிடிப்புக்கு மீண்டும் தேசிய அளவில் தனி சிறப்பு விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
அரசு பள்ளிகளில் படிக்கும் என்னைப் போன்ற மாணவிகளை கண்டறிந்து ஊக்கமளித்து தனித்திறமைகளை வெளிக்கொணா்ந்து வரும் ஆசிரியா்களுக்கு இந்த விருதுகளை சமா்ப்பணம் செய்கிறேன் என்றாா்.