தலைமை இயக்குநர் விஞ்ஞானி கலைச்செல்வி
லித்தியம்-அயன் பேட்டரிகளின் குறைகள் குறுகிய காலத்தில் சரியாகிவிடும் என்கிறார் சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் விஞ்ஞானி கலைச்செல்வி.
இதன் விபரம் வருமாறு:–
மீண்டும் மீண்டும் மின்னேற்றம் செய்யக்கூடிய ‘லித்தியம் – அயன் பேட்டரி’ என்பது எடை குறைந்த எளிதில் எடுத்துச் செல்லத்தக்க ஆற்றல் மிக்க பேட்டரி ஆகும். அலைபேசி, லேப்டாப் முதல் எலக்ட்ரானிக் கார்கள் வரையிலான பல தரப்பட்ட மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படுவது இந்த லித்தியம் அயன் ரீசார்ஜபிள் பேட்டரிதான்.
“நாம் தொடர்பு கொள்ளவும் வேலை செய்யவும் படிக்கவும் இசை கேட்கவும் அறிவைத் தேடவும் பயன்படுகிற எளிதில் கொண்டு செல்லும் மின்னணு சாதனங்களுக்கு ஆற்றல் தருவதற்காக இந்த லித்தியம் அயன் மின்கலன்கள் பயன்படுகின்றன” என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிக ‘நீடித்த நிலைத்த’ உலகை உருவாக்க இந்த கண்டுபிடிப்பு உதவியதாக ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் தலைமைச் செயலாளர் கோரன் கே ஹன்சன் தெரிவித்தார்.
மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படுவதைத் தவிர, இந்த பேட்டரிகளைப் பயன்படுத்தி, சூரிய விசை மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களில் இருந்து வரும் மின்சாரத்தையும் சேமித்து வைக்க முடியும்.
2019ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை அறிவித்த பரிசுக்குழு, இந்த லித்தியம் அயன் பேட்டரிகள் ஒரு ‘ரீசார்ஜபிள் உலகத்தை’யே உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. லித்தியம் பேட்டரியை உருவாக்கிய மூவருக்கே அந்த ஆண்டின் நோபல் பரிசும் வழங்கப்பட்டது.
ஆனால் ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி வாகனங்களில் அண்மைக்காலமாக தீ விபத்துகள் அதிகரித்து வருகின்றன என்று கூறப்படுகிறது. எனினும் இந்த பயம் விரைவில் நீங்கிவிடும் என்கிறார் லித்தியம் பேட்டரி ஆய்வியல் நிபுணரும் சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநருமான விஞ்ஞானி கலைச்செல்வி. “தற்போது லித்தியம் பேட்டரி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது தீ விபத்து. எந்த ஒரு தொழில்நுட்பமும் துவங்குகின்ற காலத்தில் அது குறித்து முழுமையான புரிதல் இல்லாத காரணத்தால் இது போன்ற பயம் நம்மை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அதில் லித்தியம் பேட்டரி தொழில்நுட்பமும் ஒன்று.
லித்தியம் பேட்டரி குறித்த புரிதல் அனைத்து நாடுகளிலும் ஒரு மிகப்பெரிய உயரத்திற்கு சென்றுள்ள காரணத்தால் தான் நம் நாட்டில் அதற்கான தேடலும் புரிதலும் வேகமாக அதிகரித்து வருகிறது.
விரைவில் லித்தியம் பேட்டரிகள் பயன்படுத்துவது குறித்த பயம், புரிதலும் குறுகிய காலத்தில் சரியாகிவிடும் என எனக்கு நம்பிக்கை உள்ளது.” என்றும் அவர் தெரிவித்தார்.