செய்திகள் போஸ்டர் செய்தி

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிதக்கும் ‘கப்பல் ஆஸ்பத்திரி’

Spread the love

கொரோனா பாதிக்காத பிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிதக்கும் ‘கப்பல் ஆஸ்பத்திரி’

லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச்.29-

லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு மிதக்கும் கப்பல் ஆஸ்பத்திரி வந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலின் மையமாக அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மாறி வருகிறது. கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் ஆஸ்பத்திரிகள், கொரோனா பாதித்தவர்களால் நிரம்பி உள்ளன.

அவர்களுக்கு மத்தியில் பிற நோய்களாலும், பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டவர்களும் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இனி கொரோனா பாதித்தவர்கள் வருகிறபோது இட நெருக்கடி உருவாகும். இதை தவிர்ப்பதற்காக அமெரிக்க கடற்படையின் மிதக்கும் ஆஸ்பத்திரியாக செயல்பட்டு வருகிற ‘தி மெர்சி ஹாஸ்பிட்டல் ஷிப்’ லாஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல் ஆஸ்பத்திரியின் சிறப்பம்சங்களை கலிபோர்னியா மாகாண கவர்னர் கெவின் நியுசாம் விளக்கினார். அப்போது அவர், “இந்த கப்பல் ஆஸ்பத்திரியில் 800 மருத்துவ பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள். 12 பெரிய அறைகள் உள்ளன. ஆயிரம் படுக்கைகளை இந்த கப்பல் ஆஸ்பத்திரி கொண்டிருக்கிறது. இது உடனடியாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிற நிலையில் இருக்கிறது” என்று கூறினார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் எரிக் கார்சிட்டி கூறும்போது, “இந்த நகரத்தின் மிகப்பெரிய ஆஸ்பத்திரியாக இந்த மெர்சி மிதக்கும் கப்பல் ஆஸ்பத்திரி திகழும்” என்று குறிப்பிட்டார்.

இந்த மிதக்கும் கப்பல் ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிக்காத பிற நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிப்பது தொடங்கி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *