செய்திகள்

லாலு கட்சி சார்பில் எம்எல்சியாக தலித் பெண் சலவை தொழிலாளி

பாட்னா, ஜூன் 15–

பீகார் சட்ட மேலவை(எம்எல்சி) தேர்தலில் தலித் சமுதாயத்தை சேர்ந்த சலவை பெண்ணான முன்னி ரஜாக்கை ராஷ்ட்ரிய ஜனதாதளம்(ஆர்ஜேடி) கட்சி வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற்றுள்ளது.

பீகாரில் ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக நிதிஷ் குமார் உள்ளார். இந்நிலையில் சமீப காலமாக பாஜக, ஐக்கிய ஜனதாதளம் இடையே உரசல் போக்கு உள்ளது. இங்கு லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் (ஆர்ஜேடி) கட்சி எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் கட்சியை வழிநடத்தி எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.

பீகாரில் 75 உறுப்பினர்கள் கொண்ட சட்ட மேலவை உள்ளது. இங்கு பொதுவாக கோடீஸ்வரர்கள் உறுப்பினராக உள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாயத்து ஒதுக்கீட்டின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்எல்சிக்களும் கோடீஸ்வரர்களாவர். இந்நிலையில் லாலு பிரசாத் கட்சி சார்பில் சலவை தொழிலாளி ஒருவர் சட்ட மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தலித் சலவைத் தொழிலாளி பெண்

இதில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னி ரஜக் பக்தியார்பூரில் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தலித் சமுதாயத்தை சேர்ந்த இவர் சலவை தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வந்தார். மாநிலத்தின் பல்வேறு நிகழ்ச்சி, போராட்டம், தர்ணாவில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் அவர் தற்போது ராஷ்ட்ரிய ஜனதாதளம் சார்பில் சட்ட மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சட்ட மேலவை உறுப்பினராக முன்னி ரஜாக் கூறுகையில், “நான் சட்ட மேலவை உறுப்பினராக மாறியதை நம்ப முடியவில்லை. மே கடைசி வாரத்தில் என்னை லாலு பிரசாத் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு லாலு பிரசாத்தின் மனைவி ரப்ரி தேவி, லாலுவின் மூத்த மகன் தேஜூ மற்றும் குடும்ப உறுப்பினர்களை சந்தித்தேன். என்னை எம்எல்சி(சட்டமேலவை தேர்தல்) ஆக்க முடிவு லாலு முடிவு செய்திருப்பதாக கூறினார். இதை கேட்டு நான் அதிர்ச்சியில் பேசாமல் இருந்தேன். லாலு ஜியும் ராப்ரி தேவியும் எனது பெற்றோரைப் போன்றவர்கள்.

நான் கடந்த 30 வருடங்களாக சலவை தொழிலாளியாக வேலை செய்து வருகிறேன். என் பெற்றோரும் சலவை தொழிலாளிகள் தான். நாட்டில் உள்ள வேலையில்லா திண்டாட்டம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்து அவையில் கேள்வி எழுப்புவேன். பாஜகவின் எதிர்மறை எண்ணங்களை நான் சபைக்குள் சுத்தம் செய்வேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.