செய்திகள்

லாரி உரிமையாளர் கொடூர கொலை: தருமபுரியில் மூன்று பேர் கைது

தருமபுரி, பிப். 5–

தருமபுரி அடுத்த அதியமான்கோட்டை அருகே, தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 1ஆம் தேதி அன்று வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் வாகனத்தில் அடிப்பட்டு தலை, உடல் தனித்தனியாக சிதறிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த தருமபுரி நகர காவல் துறையினர் அவரின் உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்த மர்மான முறையில் இறந்து கிடந்தவரின் உடல் அருகில் ஒரு விசிட்டிங் கார்டு கிடந்துள்ளது. இதனை வைத்து விசாரணை நடத்தியதில், இறந்து கிடந்தவர் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சுண்ணாம்புகாரத் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார், வயது 42 என்பது தெரியவந்தது.

மேலும் நெடுஞ்சாலையில் சடலம் கிடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அந்த காட்சிகளில், இரவு 2 மணியளவில் சென்ற வாகன பதிவெண் கொண்டு பென்னாகரம் பகுதியை சேர்ந்த அரவிந்த்குமாரை விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், சுரேஷ்குமார் கடந்த, மூன்றாண்டுகளுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த அரவிந்தகுமார் என்பவருக்கு நான்கு லாரிகளை வங்கிகள், நிதி நிறுவனங்கள் மூலம் பைனான்ஸ் பெற்று கொடுத்துள்ளார்.

இந்தநிலையில், கொரோனாவால், லாரிகளுக்கு பைனான்ஸ் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நிதி நிறுவனத்தினர் அரவிந்தகுமாரிடம் பைனான்ஸ் கட்டுவதற்கு வலியுறுத்தியுள்ளார். ஆனால் கையில் பணம் ஏதும் இல்லாமல் தவித்து வந்த அரவிந்த குமாருக்கு, லாரி உரிமையாளர் இறந்து விட்டால், பைனாஸ் தொகையில் 60 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

இதையடுத்து, நான்கு லாரிகளையும் தனக்கு சொந்தமாக்கி கொள்ள ஆசைப்பட்ட அரவிந்த்குமார், இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான எல்லப்பராஜ், 21, கோவிந்தராஜ், 28, கார்த்தி, 25 ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.

மது ஊற்றிக்கொடுத்து கொலை

தொடர்ந்து சுரேஷ்குமாரை கொலை செய்ய கடந்த, மூன்று மாதங்களாக அரவிந்த்குமார் தனது நண்பர்களுடன் திட்டம் தீட்டி, பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று மதுபானம் அதிகளவில் வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால் திட்டம் நிறைவேறாமல் போனது.

இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி, மீண்டும் திட்டம் போட்டு, சுரேஷ்குமாரை கர்நாடக மாநிலத்துக்கு காரில் அழைத்து சென்று மதுபானம் வாங்கி கொடுத்துள்ளனர்.

பெங்களூரிலிருந்து தருமபுரிக்கு திரும்பி வந்து, தருமபுரியில் மீண்டும் மதுபானம் ஊற்றி கொடுத்துள்ளனர்.

தொடர்ந்து மதுபோதையில் இருந்த சுரேஷ்குமாரை, தருமபுரி அடுத்த அதியமான்கோட்டை பகுதிக்கு கொண்டு வந்து அடித்து ஆடைகளை கழற்றி, நிர்வாணமாக தேசிய நெடுஞ்சாலையில் வீசி லாரி ஏற்றி சுரேஷ்குமாரை கொடூரமான முறையில் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் அரவிந்த்குமார், எல்லப்பராஜ், கோவிந்தராஜ் ஆகிய, மூன்று பேரை கைது செய்தனர். மேலும், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்ததுடன், தலைமறைவாக உள்ள கார்த்தியை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *