செய்திகள்

லாரியில் நள்ளிரவு ராகுல் பயணம்: ஓட்டுநர்களுடன் உரையாடினார்

புதுடெல்லி, மே 23–

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நேற்றிரவு திடீரென்று தனது காரை நிறுத்தி லாரியில் பயணம் மேற்கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கர்னாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைப்பயணம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

அதேபோல், டெல்லியில் உள்ள சந்தை பகுதிகளுக்கு சென்று மக்களோடு இணைந்து சாலையோர உணவு சாப்பிட்டது, டெல்லி பல்கலைக்கழக விடுதியில் மாணவர்களுடன் இணைந்து உரையாடியது என சமீபகாலமாக அடிக்கடி பல்வேறு தரப்பு மக்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்து உரையாடி வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு டெல்லியில் இருந்து சிம்லாவுக்கு காரில் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, திடீரென்று டெல்லி – சத்தீஸ்கர் நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி, சாலையோர உணவகங்களில் நின்றிருந்த லாரி ஓட்டுநர்களுடன் உரையாடினார்.

அதன்பிறகு, யாரும் எதிர்பாராத விதமாக கார் பயணத்தை தவிர்த்து முர்தலில் இருந்து அம்பலா வரை லாரியின் முன்பகுதியில் லாரி ஓட்டுநருடன் அமர்ந்து பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது, லாரி ஓட்டுநர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் குறித்து நீண்ட நேரம் உரையாடினார்

தொடர்ந்து, அம்பாலாவிலிருந்து கார் மூலம் சிம்லாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *