இந்த வயதில் இப்படி ஒரு வியாபாரத்தில் குருவி கொடிகட்டிப் பறப்பான் என்பது அவனுக்குத் தெரியாது. அவன் எத்தனை வகையான நாய்கள் இருக்கின்றன என்பதை மனப்பாடமாகச் சொல்வான்.
அத்தனை நாய்க்குட்டிகளையும் பேர் சொல்லிக் கூப்பிட்டு நாய்களை அரவணைத்து கேட்கும் மனிதர்களுக்கு உள்நாடு, வெளிநாடு, விமானம், கப்பல், ரயில், பஸ் என்று அத்தனை மூலமாகவும் அனுப்பி வைக்கும் பணியில் இருந்தான் குருவி. பெரிய பெரிய பணக்காரர்கள் ,அரசியல்வாதிகள் நாய் பிரியர்கள் எல்லாம் அவனை போன் செய்து கூப்பிடுவதும் அவனிடம் வியாபாரம் பேசுவதும் குருவியின் அம்மாவுக்கு ரொம்பவே பெருமையாக இருந்தது.
” என்னோட மகன் இவ்வளவு பெரிய எடத்தில பெரிய பெரிய பணக்காரங்க எல்லாம் அவன் கூட பேசுறாங்க. இதெல்லாம் பார்க்கும்போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. இத பாக்க அவங்க அப்பா இல்லையேங்கிற வருத்தம் இருக்கு. அவன்கிட்ட ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் எனக்கு பிடிக்க மாட்டேங்குது. நாய்க்குட்டி எல்லாம் கூட்டிட்டு வந்து வீட்டுக்குள்ள விட்டுர்றான். அது குய்யா …. முய்யான்னு கத்துறது ஒரு மாதிரியா இருக்கு. அதுவும் சில நேரங்கள்ல இயற்கை உபாதை பண்ணிடுதுக . அதை எல்லாம் எடுத்துப் போட்டுட்டு சாப்பிடுறதுக்கு எனக்கு ஒரு மாதிரி இருக்கு . இருந்தாலும் நம்ம பிள்ளைக்கு இது புடிச்சிருக்கு. அப்படி நினைச்சுட்டு அத்தனையும் நான் செஞ்சுகிட்டு தான் இருக்கேன். சில நேரங்கள்ல தூங்கிட்டு இருந்த புள்ள எங்கடா காணாம்னு பாத்தா கத்திக்கிட்டு இருக்கிற குட்டிகளுக்கு ஸ்பூன்ல பால் எடுத்து ஊட்டிட்டு இருப்பான். அப்படி ஒரு அன்பு நாய்க்குட்டிக மேல .
வியாபாரம் தான் பண்றான். ஆனா இந்த நாய்கள பிள்ளை போல பாத்துக்குறான். அது தான் அவனுடைய மனசின் ஈரம் தொழிலின் வெற்றி. அதனாலதான் என் புள்ள செய்ற தொழிலுக்கு நான் தடையா நிக்கிறது இல்ல” என்று சொல்லுவாள் குருவியின் அம்மா.
அன்று அனுப்ப வேண்டிய நாய்க்குட்டிகளை அதற்குரிய பெட்டிகளில் வைத்து அடைத்து மதுரை விமான நிலையத்திற்கு எடுத்துச் சென்றான் .விமான நிலையத்தில் எல்லா சட்டதிட்டங்களையும் முடித்த பிறகு நாய்க்குட்டிகளை ஆகாயத்தில் அனுப்பிவிட்டு திரும்பும் போது அவன் வங்கிக் கணக்கில் அவன் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு ஒரு தொகை ஏறி இருந்தது.
” வேற வேலை பாக்கிறத விட பேசாம இந்த நாய்க்குட்டி வியாபாரம் பண்ணலாம் போல ” என்று தனக்குள்ளே சிரித்துக் கொண்டான் குருவி.
இந்த நாய் நம்மிடம் எப்படி வந்தது? இந்த நாய்கள் நமக்கு எப்படிப் பிடித்தது? இந்த நாய் வியாபாரம் செய்யத் தூண்டியது எது ? என்று அவன் தன் வாழ்வைப் பின்னோக்கி சிந்திக்க ஆரம்பித்தான்.
சின்ன வயதுக் குருவி எங்கு சென்றாலும் ஓட்டமும் நடையுமாகச் செல்வான். பிரவீன்குமார் என்ற உண்மையான பெயரைத் தன் வாயில் உச்சரிக்க முடியாமல் அவனின் அப்பத்தா மூக்கம்மாள் வைத்த பட்டப் பெயர் தான் குருவி. அதுவே அவனுக்கு நிலைப் பெயராக நின்று விட்டது. பிரவீன் குமார் என்று அவன் பெயரை சொல்வதை விட குருவி என்று அழைத்தால் தான் அவனுக்கு பொருத்தமாக
இருக்கும் ” என்று உறவுகள் சொல்லிக் கொள்வார்கள்.
அந்தக் குருவியின் இதயத்திற்குள் இந்த நாய் எப்படி வந்தது. ஒரு நாள் ஓட்டமும் நடையுமாக ஓடிக்கொண்டிருந்த குருவியை ஒரு நாய் கடித்து விட்டது . குய்யாே முறையாே என்று கத்தினான்.
” நாய் கடிக்கக் கூடாது. அப்பிடிக் கடிச்சா தொப்புளச் சுத்தி ஊசி போடணும்”
என்று சுற்றியிருப்பவர்கள் சொன்னாலும்
” முதல்ல நாய் கடிச்ச வீட்டுக்காரங்க கிட்டப் போய் தண்ணி வாங்கி குடி. அப்படிக் குடிச்சா நாய் விஷம் உடம்புல ஏறாது “
என்று சிலர் சொல்ல நாய் வீட்டுக்காரர்களிடம் தண்ணீர் வாங்கி குடித்தான் குருவி.
“தம்பி, இனி ஒன்னும் செய்யாது. தைரியமாக போங்க ஜக்கம்மா துணை இருப்பா”
என்று நெற்றியில் குருவிக்கு திருநீர் வைத்து அனுப்பினாள் அந்த நாயின் ஓனர்.
” நல்ல வேளை வேற ஆளா இருந்தா, கடிச்ச நாய அடிச்சே கொன்னுருப்பான். இல்ல நம்மள அடிச்சு இருக்கிற காசப் புடுங்கிட்டு போயிருப்பான். இந்தக் குருவி நல்ல பையன் போல “
என்று சிலர் சொன்னது குருவியின் காதில் விழுந்தது. இதை நினைத்துப் பார்த்துக் கொண்டான் குருவி.அதிலிருந்து எந்த நாயைப் பார்த்தாலும் குருவிக்கு பயம் .தன்னை கடித்து விடுமோ ? மறுபடியும் நிறைய ஊசிகள் நாம் போட வேண்டியது இருக்குமோ?
என்று நாயைப் பார்த்தால் காத தூரம் ஓடுவான் .இப்படியாக அவன் காலம் ஓடியது. பள்ளி, கல்லூரியில் படித்து முடித்து, என்ன வேலை செய்யலாம்? என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது தான். இந்த நாய் வியாபாரம் அவனுக்கு கை கொடுத்தது.
” எந்த நாயிடம் கடிபட்டு அழுது புரண்டு ஊசி போட்டு நாய் என்றாலே பயம் என்று இருந்தானோ? அதே நாய் தான் குருவிக்கு இன்று நாய் வியாபாரத்தின் பெருமையாக இருந்தது. நாய் வியாபாரம் தான் அவனுக்கு கோடிக்கணக்கான பணத்தை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது”
என்று தனக்குத்தானே சிரித்துக் கொண்டான் குருவி.
அப்போது அவன் செல்போன் சிணுங்கியது
“ஹலோ வணக்கம் .
” வணக்கம்.சொல்லுங்க “
என்று மிகவும் அன்பாக அழகு தமிழில் கேட்டான் குருவி.
” எங்களுக்கு லாபர்டா நாய் வேணும். ஒரு வாரத்துக்குள்ள அனுப்ப முடியுமா? நீங்க எவ்வளவு பணம் கேட்கிறிங்களோ அதத் தர தயாரா இருக்கோம் “
என்று ஒரு தம்பதி சொல்ல சந்தோஷமாகச் சிரித்த குருவி அவர்கள் கேட்ட நாயை அனுப்பத் தயாரானான்.
எந்த நாயைக் கண்டு பயந்து ஓடி ஒளிந்தானோ அதே நாய் தான் அவனை பெரிய நாய் வியாபாரியாக மாற்றியிருந்தது. அனுப்ப வேண்டிய நாயின் நெற்றியை லாவகமாகத் தடவினான். மேவாயைத் திறந்து குருவியை அன்பாகப் பார்த்துக் கொண்டிருந்தது அந்த லாபர்டா நாய்.
#சிறுகதை