செய்திகள்

லாட்டரி அதிபர் மார்ட்டின் உதவியாளர் மரணம் பற்றி 15–ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை,மே.9–

லாட்டரி அதிபர் மார்ட்டினின் உதவியாளர் பழனிச்சாமி மரணம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனங்களில் ஏப்ரல் 30ம் தேதி வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அத்துடன் மார்ட்டினின் ஹோமியோபதி கல்லூரியில் காசாளராக பணிபுரிந்து வரும் கோவை வடமதுரையைச் சேர்ந்த பழனிச்சாமியிடம் வருமான வரித்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 3ம் தேதி காரமடை காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளியங்காடு அருகே உள்ள குட்டையில் காசாளர் பழனிச்சாமி பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து, வருமான வரித்துறையினரின் சித்ரவதை காரணமாகவே தன் தந்தை மரணம் அடைந்துள்ளதாகவும், தந்தையின் உடலில் ரத்த காயங்கள் இருப்பதாலும் இது கொலை எனவும் கூறி, இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி பழனிச்சாமியின் மகன் ரோஹின்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் வைத்தியநாதன், சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வில் வந்தது. அப்போது, தன் தந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால், அவருடைய உடலை தங்கள் தரப்பு மருத்துவரை கொண்டு மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது, காவல்துறை காவலிலோ, வருமான வரித்துறை காவலிலோ பழனிச்சாமி மரணமடையவில்லை எனவும் நிபுணர்களை கொண்டு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை வீடியோ பதிவும் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், காரமடை காவல் நிலையத்தில் இருந்த இந்த வழக்கின் விசாரணை மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் , ஆர்.டி.ஓ. விசாரணையும் நடத்தப்பட்டதாகவும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து, மே 15 ஆம் தேதிக்குள் பழனிச்சாமி மரணம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அதுவரை பழனிசாமியின் உடலை கோவை அரசு மருத்துவமனையிலேயே வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *