சிறுகதை

லாக்டவுன் | ராஜா செல்லமுத்து

திரும்பிய திசைகளெல்லாம் உலகமே பூட்டுப்போட்டு உட்கார்ந்திருப்பதைப்போல அத்தனை கதவுகளையும் அடைத்து மனிதர்களையெல்லாம் முடக்கி வைத்திருக்கிறான் இறைவன். அவரவர் வீடுகளில் அத்தனை பேரும் அடைக்கலம். ஆனால் அமலா வீடு மட்டும் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும் அதிகாலை ஐந்து மணிக்கு ஆரம்பிக்கும் அமலா இரவு பனிரெண்டு மணி வரைக்கும் பம்பரமாய் சுற்றிக்கொண்டிருந்தாள்.

கணவன், குழந்தைகள், அத்தை, மாமா, நாத்தனார், கொளுந்தன் என்று அமலாவின் வீடு ஒரு கூட்டுக்குடும்பம். இந்த குடும்பத்தின் அத்தனை பேருக்கும் அமலா தான் சமையல் தாங்கி . அதிகாரத் தொனியில் பேசும் அத்தனை பேருக்கும் அமலா அன்போடு தான் பதில் சொல்வாள். அவள் முகத்தில் துளியும் கோபம் குடிகொள்ளாது.

‘‘அமலா..’’

‘‘சொல்லுங்க..மாமா..’’

‘‘எனக்கு சுகர் இல்லாம காபி..’’

‘‘சரி மாமா..’’ என்று பதில் சொல்லிவிட்டுப் பட்டென்று திரும்பும் அமலாவை அத்தை உடனே கூப்பிடுவாள்.

‘‘அமலா..’’

‘‘அத்த..’’

‘‘எனக்கு சுகர் அதிகமா ஒரு ஆரஞ்சு ஜூஸ்..’’என்று அதிகாரத்தொனி அவள் பேச்சில் கொடிகட்டிப் பறக்கும்.

‘‘சரிங்கத்த..’’ என்று அடிப்படியில் வேலை செய்து கொண்டிருக்கும்போதே இன்னும் எத்தனையோ ஆர்டர்கள் பறக்கும்.

‘‘அமலா..’’

‘‘சொல்லுங்க.. அண்ணி..’’

‘‘மதியம் என்ன லஞ்ச்..?’’

‘‘சாப்பாடு.. சாம்பார்.. கூட்டுப் பொரியல் அண்ணி..’’

‘‘எப்பப்பாத்தாலும் சாம்பாரு.. கூட்டு தானா..! புதுசா.. எது வாச்சும் செய்ய வேண்டியது தானே அமலா..’’

‘‘என்ன பண்ணனும் அண்ணி..?’’ என்று பாவமாய்க் கேட்கும் அமாலாவிடம் ‘‘வெஜிடபிள் பிரியாணி வையேன்..’’ என்று கட்டளை பிறப்பிப்பாள் அண்ணி.

‘‘சரிங்க அண்ணி.. பண்ணிர்றேன்..’’ என்று தலையசைத்துவிட்டு அடுப்படியிலேயே தஞ்சம் கிடப்பாள். சிறுசுகள் செல்போன்களில் கேம் ஆடிக் கொண்டிருப்பார்கள். பெருசுகள் டிவியில் மூழ்கிக் கிடப்பார்கள். எஞ்சியவர்கள் ஏதோ விளையாட்டுகள் விளையாடுவார்கள். அமலா மட்டும் அடுப்படியில் கிடப்பாள்.

‘‘அமலா.. அமலா..’’ இப்பேது கணவன் பார்த்தசாரதி குரல் கொடுத்தான்.

‘‘எனக்கு இஞ்சி டீ..’’ என்று கேரம் போர்டில் கவனம் செலுத்திக்கொண்டே மனைவியிடம் ஆர்டர் கொடுப்பான்.

‘‘சரிங்க..’’ என்று அந்த ஆர்டரை வாங்குவதற்குள் அவனை மூழ்கடித்து வீடும் அளவிற்கு வீடே அவள் மீது மொத்தச் சுமையையும் இறக்கி வைத்துவிட்டு அவரவர் ஜாலியாக வேலைகளில் விளையாட்டுகளில் கவனம் செலுத்துவர். அடுப்படியில் கிடக்கும் அமலாவிற்கு விடுதலை என்பதே கிடையாது. இடையில் தன் குழந்தைகளுக்கும் பணிவிடை செய்ய வேண்டும். லாக்டவுன் என்று அத்தனை பேரும் வீட்டில் இருந்ததால் மொத்தப்பாரமும் அவள் தலையில் விழுந்தது. அவள் ஒருத்தி மட்டும் தான் வீட்டில் மருமகள் என்பதால் அத்தனை பேரும் ஆதிக்கம் செலுத்தினர். கேரம் போர்டு காய்ன் பட்டுத்தெறிக்கு சத்தம் அமலாவின் காதில் விழும் போது தாமும் அவர்களுடன் சேர்ந்து கேரம் போர்டு ஆட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நின்றாலும் யார் அவளைக்கூப்பிட்டு விளையாடுவார்கள். அவள் தானே இப்போது எல்லோருக்கும் சமையல் செய்து தரும் அமுதசுரபி. சம்பளம் இல்லாத வீட்டு வேலைக்காரி. மனைவி என்ற பெயரில் ஓர் அடிமை – என்ற அத்தனை பேரையும் தனக்கு இந்த வீடு வைத்திருக்கிறது என்று அமாலா கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது. அவள் கண்களிலிருந்து வழியும் நீரில் அவளின் வீட்டு ஞாபகம் வந்தது.

‘‘அமலா.. அமலா.. பதினோரு மணி ஆகுது.. இன்னும் ஏன்..? எந்திரிக்காம இருக்க..? எந்திரிடி..’’ என்று அமலாவின் அம்மா கீதா எழுப்பியும்

‘‘இரும்மா.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கிரேனே..!’’ என்று முடங்கிக்கிடந்தவளின் முதுகில் செல்லமாகத் தொட்டார் அப்பா.

‘‘டேய்.. அமலா.. அமலா..’’ என்று அப்பா சேகர் சன்னமாய்த் தடவ

‘‘என்னப்பா..’’ என்று சலிப்புடன் அமலா எழ

‘‘ரொம்ப நேரமாச்சுடா..டிபன் சாப்பிட்டுட்டு படுடா.. கண்ணு..’’ என்று அப்பா அமலாவிடம் செல்லமாய் பேச

‘‘ம்ம்.. அப்பாவும் மகளும் இப்படி கோஞ்சிட்டு இருக்கீங்க.. கல்யாணம் பண்ணப் போற வயசாச்சு.. வீட்டுல எந்திருச்சு.. வேல வெட்டி பாத்தாத் தானே.. போற எடத்தில நல்ல பேரு வாங்க முடியும்.. இவ என்னடான்னா.. விடிய விடிய தூங்கிட்டு இருக்கா.. அவளுக்கு நீங்க வேற சப்போர்ட் பண்ணிட்டு இருக்கீங்க..’’ என்று கீதா கோப்படவும்

‘‘சரி..சரி.. போ.. எப்பப்பாத்தாலும் கல்யாணம் காதுகுத்துன்னு அவள் போட்டு டார்ச்சர் பண்ணிட்டு இருக்க..’’ என்று சேகர் சொல்வார்.

‘‘இப்ப நான் சொல்றது உங்குளுக்கு எரிச்சலாத் தான் இருக்கும்.. நாளைக்கு இன்னொருத்தவங்க வீட்டுக்கு போகும் போது தான் இந்த அம்மாவோட அருமை தெரியும்.. இங்க வேணும்னா நீ.. தூங்கலாம் ;பாடலாம்; ஆடலாம்; ஆனா.. நீ கல்யாணம் பண்ணிட்டா.. இப்பிடியெல்லாம் இருக்க முடியாது. அங்க நீ.. தான் அத்தனையும் செய்யணும்..’’ என்று அம்மா என்றோ சொன்னது ஞாபகப்பிடரியில் அறைந்தது.

‘‘அமலா.. அமலா.. இன்னுமா ஜூஸ் போடுற சீக்கிரம் வா..’’ என்று அத்தை கூப்பிட்டார்.

‘‘இந்தா.. வாரேன் அத்த..’’ என்று குரல் கொடுத்தாள்.

அதோடு அத்தனை பேருக்கும் பணிவிடைகள் செய்து கொண்டே இருந்தாள். மதிய உணவை தயார் செய்து கொண்டிருந்தாள். மற்றவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

‘‘டக்..டக்..’’ என்று கேரம் போர்டு காய்ன் சத்தம் கேட்கக் கேட்க அமலாவின் கண்களிலிருந்து கண்ணீர் கசிந்தது.

லாக்டவன் நேரத்திலும் அவளுக்கு மட்டும் ஓய்வு என்பதே இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *