சிறுகதை

‘லாக்டவுன் காதல்…’ | ராஜா செல்லமுத்து

ராகினியைப் பார்த்துப் பேசி இன்றோடு இரண்டு மாத காலங்களுக்கு மேல் ஆகிவிட்டது. எப்படியும் அவளைப் பார்த்து விட வேண்டுமேன்ற வைராக்கியத்தில் இருந்தான் ஹரிஷ்.

தினமும் வாட்ஸ் அப், மெசன்ஜரில் விடிய விடியப் பேசி எந்த பிரயோசனமும் இல்லை. இன்று எப்படியாவது நேரடியாக மீட் செய்ய வேண்டுமென்ற ஆசை, ஹரிஷுக்கு மேலோங்கி நின்றது. அன்று செல்போனில் பேசி விஷயத்தைச் சொன்னான்.

ராகினி இன்னைக்கு எப்படியாவது ஒன்ன நான் பாக்கணும்? என்னோட கண்ணுக்குள்ளயே உருண்டுட்டு இருக்க.

ஒன்னைய பாக்காம என்னால இருக்க முடியாது ப்ளீஸ், கண்டிப்பா ஒன்ன நான் மீட் பண்ணியே ஆகணும்’’ என்று அடம் பிடித்தான் ஹரிஷ்.

‘ஏய், ஹவ் இஸ் பாஸிபில் நீ பையன். நீ எப்பிடியாவது வெளிய வந்திடலாம். பட், நான் அப்படியில்ல. ஹவ் கேன் ஐ லீவ் ப்ரம் மை ஹவுஸ்.

டெபனட்டா முடியாது! ராகினி சொல்வதற்குள்–

‘ப்ளீஸ், ஏதாவது சொல்லிட்டு வாயேன். ஒன்னைய பாக்கணும் போல இருக்கு ராகினி! அடம் பிடித்தான், ஹரிஷ்.

‘‘ஆர் யூ மேட்?’ புரியாம பேசிட்டு இருக்க? ஆபீஸ் இல்ல. ஒர்க் பிரம் ஹோம்னு சொல்லிட்டாங்க. அதவிட ஆபிஸ் மேனேஜர் எங்க அப்பாவுக்கு க்ளோஸ் பிரண்ட். என்ன சொல்லிட்டு நான் வெளிய வராது. அதுவும் எல்லாத்துக்கும் எங்க வீட்டுல ஆள் இருக்காங்க. நத்திங், என்னால வீட்ட விட்டு வெளியே வரவே முடியாது! தன் பக்கமுள்ள நியாயத்தைச் சொன்னாள் ராகினி.

ஆனால் ஹரிஷ் தன் பிடியைக் கொஞ்சங் கூட தளர்த்தவில்லை. தன் வாதத்திலிருந்து கொஞ்சங்கூட நழுவாமலே இருந்தான்.

‘‘இல்லை ஒன்ன நான் எப்படியாவது பாக்கணும்’’

‘அதான் சொல்றேன். எப்படி?’ முன்னை விட ராகினியின் பேச்சில் கொஞ்சம் கோபம் கொப்பளித்தது…

‘ஏதாவது சாக்கு போக்கு சொல்லிட்டு வாயேன்’

‘முடியாது’ போனை கட் செய்தாள் ராகினி.

எவ்வளவு திமிர் இருந்தா, பேசிட்டு இருக்கும் போதே போன கட் செய்வே?

திரும்பவும் ராகினியின் போனுக்கு டயல் செய்தான் ஹரிஷ்.

‘ச்சே, இவனோட பெரிய ரோதனையா போச்சு. டேய் ஒனக்கு என்னாடா வேணும்? கொஞ்சம் கோபமாகவே கேட்டாள் ராகினி.

‘ஒன்ன நான் பாக்கணும்? குழந்தையாகவே கொஞ்சினான்.

‘உண்மையிலேயே நீ முட்டாள் தான். அதான் தெனமும் வீடியோ கால்ல என்னைய பாத்து பேசிட்டு தானே இருக்க? இதுல புதுசா என்ன பாக்கப் போற? என்னால வீட்ட விட்டு வெளியே வர முடியாது.

அப்பா, அம்மா ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பாங்க. என்னால வீட்ட விட்டு ஒரு அடி கூட வெளிய வர முடியாது. எல்லாம் நார்மல் ஆகட்டும். அதுக்கப்பறம் பாக்கலாம்.

அது வரைக்கும் அடங்கி வீட்டுலயே இரு’’ ராகினி சொன்னாள்.

‘புரிஞ்சுக்க ராகினி ஒன்ன நான் நேர்ல பாத்தே ஆகணும்?

நேர்ல பாத்து நேர்முகத்தேர்வு வைக்கப் போறியா? போன வச்சிட்டு வேற வேலையப் பாரு!

‘‘இல்ல ராகினி முடியாது!

‘டேய், நீ என்னைய நேர்ல பாத்து என்ன பண்ணப் போற?

அதெல்லாம் சொல்ல முடியாது. நீ நேர்ல வா சொல்றேன். அதான் தினந்தோறும் வீடியோ கால்லதானே பேசிட்டு இருக்க. பெறகு எதுக்கு நேரில பாக்கணும்.

ஒனக்கு எதுவும் புரியாது ராகினி. என்னோட பீலிங்க புரிஞ்சுக்கோ. ஒன்ன நான் நேர்ல பாத்தே ஆகணும்.

‘அதான் கேக்குறேன். நேர்ல பாத்து என்ன பண்ணப் போற?

‘ம்ம்ம்’ சொல்லித்தான் ஆகணுமா?’

‘ஆமா’

இல்லை ராகினி. ஒன்ன பக்கத்தில ஒக்கார வச்சு, ஒன்னோட கைய புடிச்சிட்டு அவன் சொல்லும் போதே குரலில் ஒரு இரக்கம் இருந்தது.

‘ம்ம், மேல சொல்லு,’

‘ஏய், என்னைய உசுப்பேத்துறியா? நேராவா சொல்றேன்.

‘நீ சொல்லு நான் வாரேன்’

‘வேண்டாம் ராகினி’

இல்ல நீ சொன்னா தான் வருவேன்; சொன்னா ஒரு மாதிரி இருக்கு ராகினி.

நீ சொல்லு, நீ சொல்லணுன்னு சொன்னா எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. மேல சொல்லு’ என்று ஹரிஷை உசுப்பி விட்டாள் ராகினி .

‘சொல்லித்தான் ஆகணுமா?’

‘ஆமா’

‘சரி, நீ என் பக்கத்தில வந்து ஒக்காருவ.

‘ம்ம்’

அப்படியே நான் ஒன்னோட கைப் பிடிச்சு, தொட்டு தொட்டு, அதற்கு மேல் வார்த்தை வராமல் ஹரிஷின் உதடுகள் தந்தியடித்தன.

‘மேல சொல்லு,’ என்று ராகினி அடம் பிடித்தாள்.

‘ம்ம் சொல்லு,’

‘இல்ல இதுக்கு மேல போன்ல சொல்லக் கூடாது.

‘ஏன்? சொல்லலாம். நீ சொல்லு. வேண்டாம் ராகினி. நீ நேர்ல வா சொல்றேன். ஹரிஷ் அதற்கு மேல் பேசாமல் அடம் பிடித்தான்.

நீ என்ன பண்ணுவன்னு சொன்னா தான் வருவேன்’ என்று ராகினி சொல்ல,

‘இல்ல நான் நேர்ல சொல்றனே’ என்று ஹரிஷ் சொல்ல இருவருக்கும் ஒரு வார்த்தை போராட்டமே நடந்து கொண்டிருந்தது.

அதற்குள் ராகினியின் அப்பா வர

‘‘யாரிடமா பேசிட்டு இருக்க? என்று கேட்டதும் எதுவும் புரியாமல் விழித்த ராகினி ஸோ போடோவுல பிரியாணி. ஆர்டர் பண்ணியிருந்தேன்பா அதான், அட்ரஸ் கேட்டுட்டு இருந்தாரு, சொல்லிட்டு இருந்தேன் என்று’ ராகினி சொல்ல,

என்ன சொல்றான். அட்ரஸ் கரைக்டா அவனுக்கு தெரியுதா? இல்லையா? என்கிட்ட போன குடும்மா நான் சொல்றேன்’ என்று போனை ராகினியின் அப்பா கேட்க

‘இல்லப்பா வேண்டாம்’ என்று ராகினி சமாளித்து பாத்தாள்.

‘இங்க குடும்மா அட்ரஸ் நான்–

சரியா சொல்றேன்’ என்று ராகினியின் செல்போனைப் பிடுங்கிய அப்பா.

‘ஹலோ, என்னோட பொண்ணு சொன்ன அட்ரஸ் ஒங்களுக்கு தெரியுதா? என்று கொஞ்சம் உரத்த குரலில் அவர் சொல்ல’ எதிர் திசையில் திடீரென ஆண்குரல் கேட்டுத் திகைத்துப் போனான் ஹரிஷ்,

‘ஆமா சார், அட்ரஸ் சரி,’ என்று உளறினான்,

‘பிரியாணி ஆறுறதுக்குள்ள கொண்டு வாய்யா’ என்று அப்பா சொல்ல,

‘சரிங்க’ என்று உளறினான் ஹரிஷ்.

இரண்டு பேர் பேசுவதையும் பார்த்த ராகினி அவளுக்குள்ளேயே சிரித்துக் கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *