” எல்லா இடமும் பார்த்தாச்சா? இன்னும் பார்க்க வேண்டிய இடம் என்னென்ன இருக்கு? சென்னை தமிழ்நாட்டினுடைய தலைநகர் தமிழ்நாடு மாதிரி விரிஞ்சு பரந்து கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் கடல் இருக்கு இந்தச் சென்னை. தி.நகர் போயாச்சு. வண்டலூர் மிருகக்காட்சிச் சாலை போயாச்சு. கிஷ்கிந்தா போயாச்சு. விஜிபி போயாச்சு. இப்படி எல்லா இடமும் போயாச்சு. அரசு அருங்காட்சியகம் போயாச்சு. கன்னிமாரா நூலகமும் போயாச்சு. வேற எங்க போகணும் சொல்லுங்க?” என்று வெளியூரில் இருந்து சென்னைக்குச் சுற்றுலா வந்த அன்பு வளவன் குடும்பத்தார்க்கு வழிகாட்டியாக வந்த ராஜாவிடம் அன்புவளவன் கேட்டார்.
“ராஜா நீங்களே சொல்லுங்க இவ்வளவு இடங்கள் சுற்றிப் பார்த்துட்டோம் . சென்னையில வேற எந்த இடத்துக்கு போனா நல்லா இருக்கும் ” அன்பு கேட்க,
” உங்களுக்கு மதம், சாதி இதில் நம்பிக்கை இருக்கா? “
“அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. என்னன்னு சொல்லுங்க”
என்று அன்பு கொஞ்சம் கோபமாகச் சொல்ல,
” லஸ் சர்ச் சாலைக்குப் போகலாமா?
” ஓ… சரி போகலாமே? ” என்று மொத்தச் சுற்றுலா பயணிகளும் தலையாட்டினார்கள்.
” சரி கார லஸ் சாலைக்கு விடுங்க” என்று ராஜா கட்டளையிட,
” சென்னையின் பிரதான சாலையில் நின்று கொண்டிருந்த கார் லஸ் சர்ச் சாலை நோக்கி விரைந்தது.
“லஸ் சர்ச் சாலைன்னா என்ன? அங்க அப்படி என்ன விசேஷம் இருக்கு?” என்று அன்புவளவன் கேட்க
” லஸ் சர்ச் சாலை சென்னையோட மயிலாப்பூர் பகுதியில் இருக்குது. இந்தச் சாலைக்கும் போர்த்துக்கீசியர்களுக்கும் பெரிய தொடர்பு இருக்கு. ஏசு கிருஸ்துவின் பனிரெண்டு சீடர்களின் ஒருவரான தூய தோமாவின் இணைப்பும் இந்தச் சாலையில ஒட்டியிருக்கு. லஸ் தேவாலயம் கி.பி.1516 ல செயிண்ட் பிரான்சிஸ் கட்டளைப்படி, பீட்ரோங்கிற துறவியால கட்டப்பட்டது.
ஆனா இதுல கொஞ்சம் சந்தேகம் இருக்கு. 17 ஆம் நூற்றாண்டுல ஏற்பட்ட போரால இந்தப் பேராலயம் சேதப்படுத்தப்பட்டு அப்புறம் திருத்தி அமைச்சிருக்காங்க. இது ஐரோப்பியக் கட்டிடக்கலைக்கு சான்றா இருக்கு. காேதிக், பாரோக் ரெண்டும் கலந்த முறையில் கட்டப்பட்டத்தோடு நல்ல ஓவியங்களும் வரையப்பட்டிருக்கு “
” இவ்வளவு விசயங்கள் அந்த லஸ் சர்ச் சாலையில இருக்கா?”
“ஆமா. இன்னும் நிறைய விசயங்கள் இந்த சர்ச்சுக்குள்ள ஒளிஞ்சிருக்கு. இந்த சர்ச் காட்டுக் காேயில்ன்னும் சொல்லி இருக்காங்க. அந்த இடம் முழுவதும் அடர்ந்த காடும், மரங்களும், பின்னால கடலும் இருந்திருக்கு. 16ம் நூற்றாண்டுல எட்டு துறவிகள் லிஸ்பன்ல இருந்து இந்தியாவுக்கு வந்திருக்காங்க. அவங்க கோழிக்காேடு, கொச்சிக்குப் போய்ட்டு, தெக்க வந்த போது, வங்காள விரிகுடா ரொம்பவே கொந்தளிச்சிருக்கு.
அப்ப அவங்களுக்கு ஒரு பிரகாசமான ஒளி அவர்களுக்கு வழிகாட்டியிருக்கு. அந்த ஒளியின் வழியே போனவங்கள, மைலாப்பூர்ல புனித தோமையார் தங்கியிருந்த எடத்துக்குக் கூட்டிப் போயிருக்கு. மறுபடியும் அந்த ஒளி அங்க இருந்து அவங்கள காட்டுப் பகுதியில இருக்கிற ஒரு இடத்துக்குக் கூட்டிப் போயிருக்கு. அவங்களுக்கு ஏதோ தோன்றி அந்த இடத்தில ஒரு சின்னத் தேவாலயத்தக் கட்டியிருக்காங்க. அதுக்கு நொஸா சென்யோரா டாலஸ் – லஸ் தேவாலயம்னு பேர் வச்சிருக்காங்க. லஸ்ன்னா போர்த்துக்கீசிய மொழியில ஒளின்னு அர்த்தம். அது தான் காட்டுக் கோயில்னு சொல்லப்பட்டு இருக்கு “
என்று ராஜா சொல்லச் சொல்ல, சுற்றுலா வந்தவர்களுக்குத் தலையே சுற்றியது.
” நீங்க சொல்றது ஏதோ புது உலகத்துக்குப் போறது மாதிரி இருக்கு. இன்னும் லஸ் சர்ச் சாலையப் பத்தி வரலாறு இருக்கா?”
என்று சுற்றுலா வந்த பூரணி கேட்க
” இன்னும் நிறைய இருக்கு. சென்னையில இருக்கிற ஒவ்வொரு சாலைக்கும் பெரிய வரலாறு இருக்கு. லஸ் சர்ச் சாலைக்கு இப்படியொரு உண்மை இருக்கு ” என்று ராஜா சொன்ன போது, ஆழ்வார்பேட்டையை நெருங்கியிருந்தது , கார்,
“நான் கைடா இருக்கிறதுனால சென்னையினுடைய நிறைய விஷயங்களைப் படிச்சிருக்கேன். சென்னையின் போர்த்துக்கீசியருடைய வரலாற்றையும் படிக்கும் போது தான் இதெல்லாம்தெரிஞ்சுக்கிட்டேன்.
இந்த லஸ் தேவாலயம் முதல்ல ஒரு சிறிய பிரார்த்தனைத் தலமாக இருந்தது.1662, 1673 இடையில கூல் ஹோண்டா படைகளின் ஆக்கிரமிப்பின் போது சேதம் ஏற்பட்டுச்சு. 1880, 1882 க்கு இடையில ஹைதர் அலியின் ஆக்கிரமிப்பின் போது, கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகள் நிறைய இடங்களை ஆக்கிரமிச்ச போதும், தேவாலயம் தப்பிச்சு பொழச்சது. 1516-ல் கட்டப்பட்ட அவர் லேடி ஆப் சர்ச் புதுப்பிக்கப்பட்டு அதனால் அசல் வடிவத்துக்கு மீட்கப்பட்டது.
” இந்தத் தேவாலயம் ஒரு ஆன்மீகச் சொர்க்கம் மட்டுமல்ல. கட்டிடக்கலைக்குப் பெயர் போனது. மண்டபத்தை உள்ளடக்கிய பெரிய வளைந்த கல்ல வச்சு உருவாக்கி இருக்காங்க. சிறிய மரப் படிக்கட்டு வழியா போனா நுழைவாயிலுக்கு மேல சிறிய கேலரிக்கு போகலாம். முகப்புல நுழைவாயிலுக்கு மேல சமச்சீர் வடிவமைப்பிற்கு நெடு வரிசைகள்ல அலங்கார வளைவுகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கு. தெய்வீக வழிகாட்டுதல், பாதுகாப்பு சக்தி வாய்ந்த இடமா இந்த தேவாலயம் இருக்கு.
மைய பலிபீடத்தில மேரி மாதா உருவம் அழகா வடிவமைக்கப்பட்டு, குழந்தை இயேசுவைத் தாங்கி இருக்கும் கன்னி மரியாளைச் சித்தரிக்கிறது. மரியாளின் அமைதியான முக பாவமும் அவர் குழந்தையின் மீது மென்மையாகப் பார்க்கும் அன்பான பார்வையும் சிலையில வெளிப்படுது. இந்த உருவம் பெரும்பாலும் சிக்கலான ஆடைகள் மற்றும் கிரீடத்தில் அலங்கரிக்கப்பட்டு இருக்கு. இந்தத் தேவாலயத்தில ரோமன் கத்தோலிக்கர்கள் பெரிய அளவில் கூடுறாங்க.
முன்னால காட்டுக் கோயில், வன ஆலயம்ன்னு சொல்லப்பட்ட இந்தத் தேவாலயத்தின் கதை போர்த்துக்கீசிய பாரம்பரியமும் உள்ளூர் மரபும் கலந்து சென்னையின் வளமான கலாச்சாரத்தை பறைசாட்டிட்டு இருக்கு. லஸ் தேவலாயம் தேவ ஒளியின் கலங்கரை விளக்கமா இருக்கு. சென்னையின் இதயப் பகுதியில இந்தச் சாலை அமைஞ்சிருக்கு “
என்று லஸ் சர்ச் சாலையைப் பற்றி ராஜா விளக்கியபோது, அத்தனையும் கேட்டு மெய்மறந்து கிடந்தார்கள், சுற்றுலா பயணிகள்.
” இவ்வளவு பெரிய வரலாறும், புனிதமும் இருக்கிற இந்தத் தேவாலாயத்துக்கு முதல்லயே போயிருக்கணும். இதக் கடைசியா சொல்றீங்க. வாங்க, லஸ் சர்ச்க்குப் போகலாம். ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு . ஒரு 500 வருட வாழ்க்கையை ரொம்ப அழகா சொல்லி முடிச்சிட்டீங்க. ரொம்ப பிரமிப்பா இருக்கு “
என்று அன்பு வளவன் சொல்லி முடிக்க, எதுவும் பேசாமல் சிரித்துக் கொண்டான், ராஜா. லஸ் சர்ச் சாலையைத் தொட்டு, லஸ் சர்சை நோக்கிச் சென்று கொண்டிருந்தது, சுற்றுலா கார்.
![]()





