விரிந்து பரந்த உலகத்தில் அந்தக் காதல் பறவைகளுக்கு கிடைத்தது ஒரு சிறு கூண்டு . நான்கு பக்கம் கம்பிகளடைக்கப்பட்ட அந்தச் சிறைக்குள் அங்குமிங்கும் ஓடி ஆடி தன் வானத்தை அதற்குள்ளே அடக்கிக் கொண்டது. சாப்பிடுவதற்கு உணவு. குடிப்பதற்கு தண்ணீர். விளையாடுவதற்கு உடன் இருக்கும் ஜோடி என்று அந்தக் காதல் பறவைகள் தம் உலகத்தை வீட்டுக்குள் இருக்கும் அடைக்கப்பட்ட சிறைக்குள்ளே தன் நீள அகலத்தை வரையறுத்துக் கொண்டன.
மனோஜ் அந்தக் காதல் பறவைகளின் காதலன் .அந்தப் பறவைகளுக்கு உணவு கொடுப்பது. அவற்றைப் பார்த்துக் கொள்வது. அதைப் பராமரிப்பது. பறவை மொழியில் பேசி அதைப் பரவசப்படுத்துவது
என்று அந்தக் காதல் ஜோடிகளுடன் கலந்துரையாடுவான் .
“மாம்ஸ் அந்தப் பறவைகள் என்ன சாப்பிடும் ?
என்று மனோஜின் மாமா முத்து கேட்டால்
“அது திணை சாப்பிடும் .கொத்தமல்லி தலை சாப்பிடும் மாம்ஸ் “என்பான் மனோஜ்.
“சிக்கன் ,மட்டன் சாப்பிடாதா ?
என்று முத்து கேட்டதும் கடகடவென சிரித்தான் மனோஜ்
“அது என்ன அசைவ பட்சியா மாம்ஸ். அதெல்லாம் சாப்பிடாது; ஒன்லி சைவம் மட்டும் தான் சாப்பிடும் “
என்று அதன் உணவு வகைகளை அப்படியே ஒப்பிப்பான் மனோஜ்.
” சரி எப்பவும் அது கத்திகிட்டே இருக்குமே அதுக்கு என்ன பண்ணுவ ? என்று கேட்டால்
“அது அப்படித்தான் மாம்ஸ் கத்தும். நான் வந்ததும் சத்தத்த நிறுத்திரும் “
” அப்படியா ?”
“ஆமா மாம்ஸ். இந்தக் காதல் பறவைகள எதுக்கு கூண்டில அடைச்சு வைக்கணும்?”
“அடைச்சு வைக்காட்டி பறந்து போயிருமே” என்று தத்துவம் சொல்வான் மனோஜ்
” சரி நீ வீட்டுக்குள்ள இருப்பியா மாம்ஸ்?
“நான் இருக்க மாட்டேன்”
“ஏன்?”
“நான் சுதந்திரமா இருக்கணும். வெளில போகணும். ஸ்கூலுக்கு போகணும். ஃபிரண்ட்ஸ் கூட பேசி சிரிக்கணும். வீட்டுக்குள்ள எப்படி இருக்கிறது போரடிக்கும் இல்ல மாம்ஸ்.
” அப்படியா ஏன் போர் அடிக்குது?”
” வீட்டுக்குள்ளே எப்படி இருக்கிறது? ஒரு மாதிரி இருக்கும்ல்ல “
” அப்படின்னா அந்தப் பறவைகள் ?”
” அது ஓடிப் போயிரும் .அத அடைச்சு வச்சிருக்கோம் .நான் வீட்டுக்கு திரும்பி வந்துருவேன். அது திரும்பி வராதே ? “
என்று பறவைகளின் உண்மை சொன்னான் மனோஜ்
“சரி நீ சுதந்திரமா இருக்கணும். அந்தப் பறவைகள் அடைபட்டு கிடக்கணுமா?”
“அதுக்கு என்ன செய்றது மாம்ஸ்? பறவைகளையும் விலங்குகளையும் அடைச்சு வச்சுத் தான் வளக்கணும். ஒரு சில பறவைகள விலங்குகளை விடலாம். அடச்சு வைக்க அவசியம் இல்ல”
என்று தன் பங்குக்குச் சொன்னான் மனோஜ்.
” ம் “
” ஓகே நன்றி மாம்ஸ் “
என்று முத்துவின் பேச்சைக் கட் பண்ணி விட்டான் மனாேஜ்.
அன்று இரவு முடிந்து, மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது ,அந்தக் காதல் பறவைகள் கூண்டில் இல்லை
” எங்கடா பறவைகள காணாம் ?”
என்று மனோஜ் அம்மா கேட்க
” தெரியலையே ” என்றான்.
” பறவைகள காணாமே? மனாேஜின் அப்பாவும் கேட்க
” தெரியல” என்ற பதிலை மட்டுமே சொன்னான் மனாேஜ்.
” அடச்சு வச்சிருந்த பறவைகள் எப்படி பறந்து போச்சு. தெரியலையே? “
என்ற பதிலை மட்டுமே ஒப்பித்தான் மனோஜ்
” இவ்வளவு நாளா வீட்ல இருந்த காதல் பறவைகள் காணாம போச்சே?”
வருத்தப்பட்டார் மனோஜின் அப்பா
“சரி ஆனது ஆகிப்போச்சு. வேற பறவைகள் வாங்கலாம் “
என்று மனோஜின் அப்பா சொல்ல
” வேண்டாம்பா .நமக்கு பறவைகளே வேண்டாம் . ?”
“ஏன்டா என்ன ஆச்சு உனக்கு? “
” எதுக்குப்பா அதுக சுதந்திரமா இருக்கட்டும். அப்ப நீ தான் ஏதோ பண்ணி இருக்க?
என்று மனோஜ் அப்பா கேட்க
” அந்த நேரம் பார்த்து மனோஜின் மாமா முத்து போன் செய்திருந்தான்.
” என்ன மனோஜ் பறவைகள் எப்படி இருக்கு?”
“அது வானத்தில சுதந்திரமா பறந்திட்டு இருக்கு மாம்ஸ் .நாம எப்படி சுதந்திரமா இருக்கணும்னு நினைக்கிறோமோ? அப்படித்தான அந்தப் பறவைகளும் இருக்கும். இப்ப சந்தோஷமா வானத்தில பறந்துக்கிட்டு இருக்குக”
என்று மனோஜ் சொல்ல, எங்கோ வானத்தில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தன, அந்தப் பறவைகள். கூண்டிலிருந்த ஊஞ்சல் காற்றில் ஆடிக் கொண்டிருந்தது .
––––––––––––