லண்டன், மார்ச் 21–
லண்டன் ஹீத்ரோ விமான நிலையம், அருகிலுள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, 24 மணி நேரத்திற்கு மேலாக மூடப்பட்டிருக்கும் என்றும் எப்போது செயல்பட துவங்கும் என தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் நேற்று இரவு 11:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, ஹீத்ரோவில் கடுமையான மின் தடை ஏற்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மார்ச் 21 ஆம் தேதி நள்ளிரவு வரை ஹீத்ரோ மூடப்படும். பயணிகள் விமான நிலையத்திற்கு வருவதை தவிர்க்கவும், தங்கள் விமான நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என ஹீத்ரோ விமான நிலையம் அறிவித்தது.
திரும்பிய 120 விமானங்கள்
ஐரோப்பாவின் பரபரப்பான விமான நிலையமாக உள்ள ஹீத்ரோவின் செயல்பாடுகள் எப்போது மீண்டும் தொடங்கும் என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை என்று செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். விமான நிலையத்தின் மூடல் காரணமாக, ஹீத்ரோவுக்கு செல்லவிருந்த 120 க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்படும் என பிளைட் டிரேடர் (flightradar ) இணையதளம் தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்தால் மேற்கு லண்டனில் ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளன. “இந்த தீ விபத்து ஏராளமான வீடுகள் மற்றும் உள்ளூர் வணிகங்களை பாதித்துள்ளது. இடையூறுகளை குறைக்க அனைத்து துறைகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்,” என்று லண்டன் தீயணைப்பு படையின் உதவி ஆணையர் பாட் கோல்பர்ன் கூறினார்.
இந்தியாவிலிருந்து ஹீத்ரோ செல்லும் விமானங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மும்பையிலிருந்து லண்டன் ஹீத்ரோ செல்லும் ஏர் இந்தியா விமானம் மும்பைக்கே திரும்புகிறது. டெல்லியிலிருந்து லண்டன் செல்லும் மற்றொரு விமானம் ஜெர்மனியின் பிராங்பர்ட்டுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. மார்ச் 21 ஆம் தேதி லண்டன் ஹீத்ரோ செல்லும் மற்ற அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு செல்லும் விமானங்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.