புதுடெல்லி, செப்.11-
டெல்லி நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் லண்டன் புறப்பட்டு சென்றார்.
ஜி–20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் இந்தியா வந்துள்ளார். நேற்று முன்தினம் மாநாட்டின் முதல் நாள் கூட்டத்தில் பங்கேற்ற ரிஷி சுனக், பின்னர் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மாநாட்டின் 2-வது நாளான நேற்று மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அதற்கு முன்பாக ரிஷி சுனக் மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோவிலுக்கு சென்றார். அங்கு அவர்களுக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் கோவிலில் ரிஷி சுனக்கும், அக்ஷதா மூர்த்தியும் சாமிக்கு அபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டி பூஜை செய்தனர். அதை தொடர்ந்து கோவில் முழுவதையும் சுற்றிப்பார்த்த ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி கோவிலின் கட்டிடக்கலை மற்றும் அதன் வரலாறு குறித்து கோவில் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தனர். அதன் பின்னர் இருவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலின் மாதிரி, பளிங்கு கல்லால் செய்யப்பட்ட யானை மற்றும் மயில் சிலைகள் நினைவு பரிசாக வழங்கப்பட்டன.
அதன் பின்னர் ரிஷி சுனக் வெளியிட்ட அறிக்கையில், “அக்ஷர்தாம் கோவிலில் தரிசனம் மற்றும் பூஜை செய்ததில் மகிழ்ச்சியடைந்தோம். உலக அமைதி, முன்னேற்றம் மற்றும் நல்லிணக்கத்திற்காக நாங்கள் பிரார்த்தனை செய்தோம்” என தெரிவித்தார்.
இந்த நிலையில் டெல்லி நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இ்ங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அவரது மனைவி அக்ஷதா விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு சென்றார்.