சிறுகதை

லட்சுமி – ஆவடி ரமேஷ்குமார்

தினமும் அலுவலகம் முடிந்த தும் கவிநயாவும் சுப்ரியாவும் மார்க்கெட் வழியாக வீட்டுக்கு செல்வது வழக்கம்.

அப்படியே மார்க்கெட்டிற்குள் சென்று காய்கறி வாங்கிச் செல்வதும் உண்டு.

மார்க்கெட்டு்க்குள் சென்றால் சுப்ரியா பெரிய கடையாய் பார்த்து பேரம் பேசி வாங்குவாள்.ஒரே கடையில் தொடர்ந்து வாங்கமாட்டாள்.

ஆனால் கவிநயா மார்க்கெட்டுக்கு வெளியே நடைபாதையில் சாக்கை விரித்து அதில் காய்கறிகளை பரப்பி விற்கும் லட்சுமியிடம் மட்டும் வாங்குவாள். அவளிடம் பேரம் பேசமாட்டாள். ஆறு மாதங்களாய் இப்படித்தான் அவளிடம் வாங்கிக் கொண்டிருக்கிறாள்.

அதற்கு முன் சுப்ரியா எங்கு வாங்குகிறாளோ அங்கு தான் கவிநயாவும் வாங்கிக் கொண்டிருந்தாள்.

அன்று அதே போல் மார்க்கெட்டில் காய்கறி வாங்கிக் கொண்டிருந்த போது, தான் வாங்கிய கடையிலேயே கவிநயாவையும் வாங்கச் சொன்னாள் சுப்ரியா.

” இல்ல இல்ல. நான் வழக்கமா வாங்கற நடைபாதை கடையிலேயே வாங்கிக்கிறேன்” என்றாள் கவி.

” நானும் கேட்கனும் கேட்கனும்னு நினைப்பேன்.

அப்புறம் மறந்திடுவேன். ஆமா நீ ஏன் அந்த நடைபாதை கடை லட்சுமிகிட்டயே போய் வாங்கற? அவ உனக்கு எடைக்கு மேல அதிகமாக தருகிறாளா? இல்லே வேற ஏதாவது விசேசமான காரணமா? எனக்கு ஏனோ அவளைப் பிடிக்கிறதில்ல” சொன்னாள் சுப்ரியா.

அவளுக்கு கவிநயா சற்று தயங்கியபடி பதில் சொன்னாள்.

‘ நீயும் நாளையிலிருந்து அந்த லட்சுமிகிட்டயே வாங்கினீனா

நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்.காரணம் என்னன்னா அந்த லட்சுமி

நான் குடியிருக்கிற வீதியில பிச்சை எடுத்திட்டிருந்தவள்.

ஒரு நாள் அவள் என்கிட்ட பிச்சை கேட்டு வந்த போது,

‘ கையும் காலும் நல்லாத்தானே இருக்கு; உழைச்சு பிழைக்கக்கூடாதா’ னு கேட்டேன். அதுக்கு அவ,

‘ காய்கறி வியாபாரம் பண்ணி பிழைக்க ஆசைதாம்மா. முதலீடு போட பணம் இல்லம்மா’ னு பரிதாபமா சொன்னாள். என் மனசு ரொம்ப பாதிச்சிடுச்சு.

நான் உடனே என் வீட்டு சாமி உண்டியலை உடைச்சு ரெண்டாயிரம் ரூபாயை எடுத்து கொடுத்து’ இதை வச்சு பொழச்சுக்கோ’னு சொன்னேன். சில நல்ல பழைய புடவைகளையும் கொடுத்தேன். என்னால ஒரு பிச்சைக்காரி ஆறுமாசமா வியாபாரியா மெல்ல மெல்ல உயர்ந்திட்டு வர்றாளேனு எனக்கு ரொம்ப சந்தோஷம்! அவளுக்கு மேலும் உதவத்தான் அவகிட்டயே அப்பப்ப காய்கறி வாங்கறேன்”என்றாள்

இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட சுப்ரியா,

“நீ ஏன் இதை எனக்கு முன்னமே சொல்லல? உனக்காகவாவது நானும் என்னை மாத்திக்கிட்டு லட்சுமிகிட்டயே வாங்கியிருப்பேனே..!

சரி இனிமேல் நானும் அவகிட்டயே காய்கறி வாங்கறேன்.

சந்தோஷமா?” என்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *