லட்சுமியின் வாழ்க்கை இப்படி ஆயிருக்கக் கூடாது. எவ்வளவு வசதியாக வாழ்ந்தவள். எத்தனை செல்லம் . அம்மா செல்லம். அப்பா செல்லம் .பிள்ளைகள் செல்லம் கணவன் செல்லம் என்று குழந்தைகள் பெற்றாலும் ஒரு குழந்தையைப் போல் சிணுங்கித் திரிந்தவள்.
இன்று ஒரு பணக்காரக் கிழவனைப் பார்க்கும் வேலையில் அமர்த்தபட்டாள்.
இரவு நேர வேலை. அந்த வயதான கிழவனுக்குப் பணிவிடைகள் செய்வதுதான் லட்சுமிக்கு இட்ட வேலை . வசதியான குடும்பத்தை சேர்ந்த அந்தக் கிழவன் தனியாக வாழ்ந்து வந்தார்.
பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில் குடியிருக்க இந்தக் கிழவன் மட்டும்தான் சென்னையில்.
அவரைப் பார்ப்பதற்கு ஒரு ஆள் வேண்டும் என்று நண்பனிடம் கேட்டபோது லட்சுமியை அந்த நண்பர் பரிந்துரை செய்துள்ளார்.
நல்ல பெண்ணா? சரியாக இருப்பாளா? இப்பெல்லாம் எந்த வேலைக்காரங்களையும் நம்ப முடியல .முதலாளியையே அடிச்சு போட்டுட்டு இருக்கிற பொருள் எல்லாம் எடுத்துட்டு போறத பேப்பர் டிவி நியூஸ் பாத்துட்டுத் தான் இருக்கேன். நல்ல பொண்ணா இருந்தா அனுப்புங்க என்று அந்தக் கிழவர் சொன்னபோது
அத்தனை லட்சணங்களும் பொருந்தியிருந்தாள் லட்சுமி. பேருக்கு மட்டுமல்ல அவள் நடவடிக்கையே அப்படி இருந்ததால் அந்தக் கிழவர் எந்த ஒரு வார்த்தையும் சொல்லாமல் லட்சுமியை ஏற்றுக்கொண்டார்.
தினமும் இரவு 7 மணிக்கு எல்லாம் வந்து விட வேண்டும் அவருக்கு இரவு டிபன் செய்து கொடுப்பது மாத்திரை கொடுப்பது சன்னமாக இருமினால் கூட என்ன வேண்டும் என்று ஓடிப் போய் கேட்க வேண்டும். மொத்தத்தில் அந்த வீட்டில் அடகு வைக்கப்பட்ட ஒரு பணிப்பெண்ணாகவே இருந்தாள் லட்சுமி
யார் இவர் ? எதற்காக நாம் இவருக்குப் பணிவிடைகள் செய்ய வேண்டும்? அற்ப் பணத்திற்காகவா? இந்தப் பணம்தான் என் வாழ்க்கையை இந்த நிலைக்கு கொண்டு வந்ததா? கடவுளே என் கணவன் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் இந்த நிலை எனக்கு வந்திருக்குமா ? படிக்கும் மகள். வீட்டு வாடகை சொற்ப வருமானத்தில் வேலை பார்க்கும் மகன். இதை எல்லாம் வைத்து இந்த நகரத்தில் வாழ்க்கையைத் தள்ளுவது சிரமம் என்று அவள் உறங்காத இரவுகளே அதிகம்.
அந்த பணக்காரக் கிழவன் தூங்கி இருந்தால் கூட லட்சுமி இரவு முழுவதும் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டே இருப்பாள். அறிமுகம் இல்லாத நபருக்கு அந்நியோன் யமாகப் பணிவிடைகள் செய்வது அவளுக்கு ஏதோ ஒரு வருத்தத்தை ஏற்படுத்தினாலும் அதை வெளிக்காட்டாமல் இருந்தாள். காரணம் பணம்.
ஒவ்வொரு மாதமும் 5 தேதிக்குள் வாடகை கட்ட வேண்டும் என்ன செய்வது? யாரிடமும் பாேய் பணம் கேட்டால் நம்மை தவறான இடத்திற்குத் தான் கொண்டு போவார்கள்.
ஒரு பெண் மற்றொருவரிடம் பணம் கேட்பது அவ்வளவு உசிதமல்ல. மானமும் மரியாதையும் முக்கியம். அதனால் தான் இந்த வேலையை நான் செய்கிறேன் .என் தாய் தந்தைக்குக் கூட இந்தப் பணிவிடைகளை நான் செய்ததில்லை.
யார் இந்தக் கிழவன் இவருக்கேன் நான் இத்தனை பணிவிடைகள் செய்ய வேண்டும். சில நேரங்களில் அவிழ்ந்து விடும் வேட்டியைக் கூட கட்ட வேண்டும் . பாத்ரூம் கூட்டிச் செல்ல வேண்டும். இரவு நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் அவர் கூப்பிடலாம். இந்தெக் தூக்கத்தை அவருக்குத் தான் நான் எழுதிக் கொடுத்திருக்கிறேனா என்ன?
இது என்ன வாழ்க்கை ? என்று ஒவ்வொரு நொடியும் அவள் மனது ரணத்திலேயே கிடக்கும். லட்சுமி பெயர்தான் அப்படி வைத்திருக்கிறார்களேயாெழிய ஒன்றும் இல்லை.
இந்த இரவு அந்த பணக்காரக்கிழவனுடன் தான் .எப்போதும் போல புலம்பல். தூக்கம் இல்லாத இரவு .
தினம் தினம் எத்தனை நாளைக்கு தான் இந்த ரண வேதனையை அனுபவிப்பது.
சொந்த பந்தங்கள் கேட்டால் என்ன சொல்வது ? இந்த வயதில் ஒரு பணக்காரக் கிழவனுக்கு பணிவிடைகள் செய்யப் போகிறாயா? என்று கேவலமாக நினைக்க மாட்டார்களா?
கடவுளே இந்தப் பணம் எப்போது நமக்கு வரும்.எப்பாேது நிம்மதியைத் தரும்.
ஒரு நாள் என்னிடமும் அந்தப் பணம் வரும். ஆனால் இந்தப் பணக்காரக் கிழவனை ஒதுக்கித் தள்ளிய சொந்தங்களைப் போல் நான் யாரையும் ஒதுக்கித் தள்ள மாட்டேன். உறவுகளோடு தான் வாழ்வேன். பணம் இருந்து என்ன பயன்? உறவுகள் இல்லையே? என்று எதையெதையோ நினைத்துக் கொண்டிருக்கும் பாேது
லட்சுமி….. லட்சுமி…. என்ற அந்தப் பணக்காரக் கிழவனின் குரல் கேட்டது
என்னமோ தாலி கட்டுன புருஷன் மாதிரி பேரச் சொல்லிக் கூப்பிடறான் என்று மைத்துக்குள் நினைத்துக் கொண்ட லட்சுமி.
இந்தா வாரேன்யா என்று அந்தக் கிழவனை நோக்கிப் போனாள்.
அந்தத் தண்ணிய எடு என்று கட்டளையிட்டார் அந்தக் கிழவன். அதில் ஒரு அதிகாரத் தாெனி இருந்தது . சம்பளம் தருகிறோம் என்று திமிர் அதில் அடங்கி இருந்தது.
இங்க இருக்கிற தண்ணிய எடுத்து குடிக்கக் கூடாதா? தூங்கிட்டு இருக்கிறவள எழுப்பி தண்ணி கேக்கணுமா? என்று நினைத்துக் கொண்டே தண்ணியை எடுத்துக் கொடுத்துவிட்டுப் படுக்கைக்குச் சென்றாள்.
மறுபடியும் மறுபடியும் கிழவனின் இருமல் சத்தம் கேட்டது.
ஐயா என்று குரல் கொடுத்தாள் லட்சுமி .
ஒன்னுமில்ல. நீ படு தேவைப்பட்டா. நான் கூப்பிடுறேன் என்றார் அந்தப் பணக்காரக் கிழவன்.
நீதான் எனக்கு சம்பளம் கொடுக்கிறயே தூங்க விடுவியா? ஒனக்கும் தூக்கம் வராது. என்னையும் தூங்க விடமாட்ட ஏன்னா நீ எனக்கு சம்பளம் கொடுக்குற ஆளாச்சே என்று விழித்துக் கொண்டு படுக்கையில் விழுந்தாள் லட்சுமி
அவளின் வானம் முழுவதும் விண்மீன்கள் முளைத்திருந்தன.