செய்திகள்

லட்சத்தீவு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நிறுத்திவைப்பு: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

புதுடெல்லி, ஜன.31–

லட்சத்தீவு எம்.பி.க்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால், அந்த தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் கமிஷன் நிறுத்தி வைத்துள்ளது.

லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் உள்ள லட்சத்தீவு மக்களவை தொகுதி எம்.பி.யாக இருப்பவர் முகமது பைசல். இவர் மீது கொலை முயற்சி வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது.

கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில், முன்னாள் மத்திய மந்திரி பி.எம்.சயீதின் மருமகன் முகமது சாலியை கொலை செய்ய முயன்றதாக முகமது பைசல் உள்பட 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில், எம்.பி. உள்பட 4 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த 11ந்தேதி லட்சத்தீவில் கவரட்டியில் உள்ள செசன்சு கோர்ட் உத்தரவிட்டது. தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலே சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதி பதவி இழப்பார். அந்த அடிப்படையில், முகமது பைசல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது.

மேலும், லட்சத்தீவு தொகுதி காலியாக இருப்பதாக அறிவித்தது. அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, தனது தகுதி நீக்கத்தை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் முகமது பைசல் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த ஐகோர்ட், முகமது பைசல் மீதான குற்ற நிரூபணத்தையும், சிறைத்தண்டனையையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில், லட்சத்தீவுக்கான இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்படுவதாக தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது.

தேர்தல் அறிவிக்கை வெளியிடுவதையும் தள்ளி வைப்பதாக கூறியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *