செய்திகள் போஸ்டர் செய்தி

லடாக் சென்றார் பிரதமர் மோடி: ராணுவ வீரர்களுடன் ஆலோசனை

புதுடெல்லி, ஜூலை 3–

எந்தவித முன்னறிவிப்பு இல்லாமல் லடாக் பகுதிக்கு பிரதமர் மோடி இன்று காலை திடீரென சென்றார்.

லடாக் பகுதியின், கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் தனது ஆக்கிரமிப்பை அதிகரிக்க முயன்று வருகிறது. ஆக்கிரமிப்பை தடுக்க முயன்ற போது இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவும் அங்கு படைகளை குவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை திடீரென முன்னறிவிப்பு ஏதுமின்றி டெல்லியில் இருந்து பிரதமர் மோடி விமானம் மூலமாக லடாக் புறப்பட்டு சென்றார்.

இரு நாட்டு ராணுவத்தின் கமாண்டர்கள் அளவில் இதுவரை 3 சுற்றுகளாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எல்லையில் அமைதியாக இரு தரப்பு ராணுவ வீரர்களும இருந்தாலும் பதற்றமான சூழல் குறையவில்லை. இந்தச் சூழலில் பிரதமர் மோடி தலைமைப் பாதுகாப்பு அதிகாரி பிபின் ராவத், தரைப்படைத் தளபதி எம்எம் நரவானே ஆகியோருடன் இன்று காலை லடாக் சென்றடைந்தார்.

தரைமட்டத்திலிருந்து 11 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் லே பகுதி, நிமு பகுதிக்குச் சென்ற பிரதமர் மோடி பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கேட்டறிந்தார். அதுமட்டுமல்லாமல் நிமு பகுதியில் இருக்கும் ராணுவ வீரர்கள், விமானப்படை வீரர்கள், இந்தோ-திபெத் படை வீரர்கள் ஆகியோருடன் உரையாடிய பிரதமர் மோடி அவர்களுக்கு உற்சாகமூட்டினார்.

இந்திய எல்லை பகுதியில் செய்யப்பட்டுள்ள ராணுவ பாதுகாப்பு, வான்வெளி கண்காணிப்பு உள்ளிட்ட அனைத்தையும் பிரதமர் நேரடியாக ஆய்வு செய்தார்.

நிமு பகுதியில் பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் எல்லை பிரச்சினை மேலும் பரபரப்பு கட்டத்தை அடைந்துள்ளது. ஒரு பக்கம் ரஷ்யாவுடன் அதிநவீன ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மற்றொரு பக்கம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடன் பிரதமர் தொலைபேசியில் பேசியுள்ளார்.

இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் லடாக் செல்வதாக இருந்தது. ஆனால் நேற்று திடீரென அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு பதில் மோடியே அங்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *