செய்திகள்

லடாக்கில் இந்திய – சீன வீரர்கள் மோதல்: இருதரப்பு கூட்டத்திற்கு பிறகு பிரச்சினைக்கு தீர்வு

Spread the love

புதுடெல்லி, செப். 12

லடாக் ஏரி பகுதியில் இந்திய சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இருதரப்பு கூட்டத்திற்கு பிறகு பிரச்சினை ஓய்ந்தது என தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த மாதம் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது பிரிவை இந்தியா ரத்து செய்ததையடுத்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் பதட்டமாக உள்ளது.

லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கு குறிப்பாக, சீனா ஆட்சேபனை தெரிவித்து வருகிறது.

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் த்சோ ஏரி அருகே இந்திய மற்றும் சீன வீரர்கள் நேற்று நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர்.

பங்கோங் த்சோ அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவக் குழு ஒன்று சீனத் தரப்பினரால் தடுக்கப்பட்டது. அவர்களைக் கண்ட சீன ராணுவத்தினர், அங்கிருந்து வெளியேறும்படி கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்து, இந்திய எல்லைக்குட்பட்ட பகுதியிலேயே தாங்கள் இருப்பதாக, இந்திய ராணுவத்தினர் கூறி உள்ளனர்.

இதைத்தொடர்ந்து சுசூலில் எல்லை பணியாளர் தூதுக்குழு கூட்டம் உடனடியாக கூட்டப்பட்டது. அதன் பின்னர் பிரச்சினை தீர்க்கப்பட்டது என ஆதாரங்கள் தெரிவித்து உள்ளன.

கடந்த ஆண்டு மோடி, சீன அதிபர் ஜின்பிங்கிற்கு இடையிலான வுஹான் முறைசாரா உச்சிமாநாட்டில், ஒவ்வொரு தரப்பினரும் தங்கள் உரிமைக்கோரல்களைச் செயல்படுத்த நடத்துகின்ற ரோந்துப் பணிகளின் போது முகம் சுளிப்பதைத் தவிர்க்குமாறு ராணுவத்திடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக ராணுவ வட்டாரங்கள் முன்னர் தெரிவித்து இருந்தன.

அதன்படி, ரோந்துப் பணிகளின் போது எதிரெதிரே சந்தித்து கொள்ளக்கூடாது என்பதற்காக பரவலாக நேரம் ஒதுக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *