சிறுகதை

லஞ்ச் – ராஜா செல்லமுத்து

ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த செந்தில் அங்கே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியே தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தான். இப்போதெல்லாம் உடல் வேர்க்க வேலை செய்வது. நாள் முழுக்க கால்கடுக்க நின்று வேலை செய்வது. மூளையை கசக்குவது என்று எதுவும் தேவையில்லை.

ஒரு செல்போன் இருந்தால் போதும். அதில் தேவையில்லாதவற்றை எல்லாம் பதிவேற்றி பணம் சம்பாதிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறார்கள் இப்போதுள்ள சிலர்.

அது சிலருக்கு ஆரோக்கியமான வாழ்க்கை வழிகளை வகுத்துக் கொடுக்கிறது. சிலர் அதுவே கதி; அதோ கதி என்று கிடக்கிறார்கள். ஒரு சில நபர்களுக்கு அந்த பதிவுகள் வாழ்க்கையை வழிகாட்டுகின்றன. சிலர் வாழ்க்கையில் வழுக்கி விடுகின்றனர்.

ஆனால் செந்தில் அப்படியல்ல ஏற்கனவே ஒரு நிறுவனத்தில் பணி செய்ததால் அந்த அனுபவத்தில் தனியாக ஒரு யூடியூப் சேனல் தொடங்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதற்கு பெரிய முதலீடு எதுவும் தேவை இல்லை.

இருந்தாலும் தான் எடுக்கும் நிகழ்ச்சிகளை படப் பதிவு செய்வது எடிட்டிங் செய்வது என்று சின்னச் சின்ன வேலைகள் அதுவும் டெக்னிக்கலாக தெரிந்த நபர்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டான் செந்தில்.

அதற்காக ஒரு சிறிய அலுவலகம், இரண்டு சேர்கள், டேபிள் என்று ஏதோ ஒரு முதல் மாடியில் இருந்த அவன் அலுவலகம் இயங்க ஆரம்பித்தது.

பையிலிருக்கும் பணத்தை கையில் எடுத்துப் பார்த்தால் கூட கரைந்து போகும் என்று நினைக்கும் சுபாவம் உடையவன் செந்தில்.

பணத்தை அடிக்கடி அடி மடியில் வைத்து இறுக்கி கொள்வதும் அடுத்தவர்களுக்கு ஒரு காபி வாங்கிக் கொடுப்பது கூட கஷ்டம் என்று நினைப்பதும் அவன் அகராதியில் எழுதப்படாத உண்மை.

அதனால் தான் முன்பு வேலை செய்த இடத்தில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு இடம் வாங்கிப் போட்டிருந்தான். அந்த இடம் இப்போது அவன் வாங்கிய தொகையை விட ஆயிரம் மடங்கு மேல் பல்கிப் பெருகி இருந்தது.

அதனால் பண விஷயத்தில் அவன் கறார் பேர்வழி என்பது அவனை சுற்றி இருப்பவர்கள் அறிந்த உண்மை.

அப்போது தன்னுடைய யூடியூப் சேனலுக்கு புதிது புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்தான் செந்தில். அதன்படியே தன்னுடன் பயின்ற ஜூனியர் பாக்கியம் என்ற ஒரு நபரை அழைத்தான்.

பாக்கியத்தை விலாவாரியாகப் பேசினான்.

தன் ஆரம்பித்த யூடியூப் சேனல் அதன் தன்மை அதில் வரும் வருமானம் தன் பார்ட்னர் என்று அத்தனையும் அவனிடம் சொல்லிவிட்டு பாக்கியத்தை சில பெரிய மனிதர்களிடம் இன்டர்வியூ பண்ண சொன்னான். அதற்கு சம்மதித்தான் பாக்கியம்.

போன நேரம் மதியம் என்பதால் பசி வயிற்றைக் கிள்ளியது. இருந்தாலும் அவன் தன்மானம் செந்திலிடம் சாப்பாடு பணம் கேட்கவில்லை. எப்படியும் செந்திலும் சாப்பிடவேண்டும்; நமக்கும் சாப்பாடு தந்து விடுவார் என்று நினைத்தான் பாக்கியம்.

ஆனால் அது சாப்பாடு இடைவேளையை மணி நகர்ந்து கொண்டிருந்தது.

இப்போது சொல்வான்; பிறகு சொல்வான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் பாக்கியம்.

ஆனால் செந்தில் கொஞ்சம் கூட சி விசாரிப்பதாக தெரியவில்லை. சாப்பிடலாமா? இல்லை சாப்பிட்டாயா? என்று மருந்துக்குக் கூட அவன் கேட்கவில்லை.

என்ன செய்வது? என்று யோசித்தான் பாக்கியம். விடைபெற்று விடலாமா என்று நினைத்தான்.

அப்போது செந்தில் தான் கொண்டு வந்த தோள் பையை எடுத்தான். அதில் அவன் கொண்டுவந்த லஞ்ச் டிபன் கேரியர் அவன் சொல்லாமலே வாசனையை காட்டிக் கொடுத்தது.

‘‘சாப்பிடலாம்’’ என்று சொன்னான் செந்தில்.

ஆஹா இப்போவாவது சொன்னானே என்று அவன் பாக்கியத்திற்கு நாக்கில் எச்சில் ஊறியது.

சரி சாப்பிடலாம் என்று முடிவெடுத்து சாப்பிட போகும் நேரம் சரி வேண்டாம். எனக்கு டைம் ஆச்சு நான் வீட்டுக்கு போகனும் என்றான் செந்தில்.

அடடா வாய்க்கு வந்த உணவு இப்படி வழிதவறி போய்விட்டது என்று கவலைப்பட்டான் பாக்கியம்.

அப்போதும் பாக்கியத்தையும் கூட்டிக் கொண்டு அவன் நேரக் கூடிய பேருந்து நிலையத்திற்கு வந்தான்.

மணி 3 தொட்டு நின்றது அவன் கைக்கடிகாரம்.

அவன் பையிலிருந்த லஞ்ச் பாக்ஸ் திறந்தால் பகிர்ந்து தர வேண்டும். சாப்பிடு என்று சொன்னால் அவனுக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும். என்ன செய்வது? என்று செந்திலும் சாப்பிடாமல் பாக்கியத்திற்கும் கொடுக்காமல், பேருந்து நிலையம் வந்தார்கள் இருவரும்.

பாக்கியத்திற்கு லஞ்ச் பாக்ஸின் மணமே நின்று கொண்டு இருந்தது.

இவர்கள் வந்து நின்ற சற்று நேரத்திற்கெல்லாம் செந்தில் போகும் இடத்திற்கான பேருந்து வந்து நின்றது.

‘‘நான் வர்றேன்’’ என்று பேருந்தில் ஏறினான் செந்தில்.

பாக்கியத்திற்கு முன்பை விட இப்போது பசி அதிகமாக எடுத்தது.

அடப்பாவி. இப்படியும் ஒரு மனிதனா? உடன் இருப்பவனை சாப்பிடு என்று சொல்லாமலும் தான் கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிடாமலும் திரும்பி வீட்டுக்கு கொண்டு போகிறான். இவனெல்லாம் ஒரு மனிதப் பிறவியா? இவன் மூன்று மணிக்கு பஸ்ஸில் இருக்கிறான். அவன் இருக்கும் இடம் ஒரு மணி நேரத்திற்கு 2 மணி நேரத்திற்கு மேலாகும்; எப்படியும் நான்கு மணிக்கு மேல் ஆகிவிடும்.

எப்படி சாப்பிடுவான்? இதுபோன்ற மனிதர்களிடம் இருந்து விலகி இருப்பது மேல் என்று முடிவு செய்தான் பாக்கியம்.

அன்று செந்திலின் நடவடிக்கை பாக்கியத்திற்கு ரொம்பவே மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இனிமேல் அவன் அழைத்தால் போகக் கூடாது என்று முடிவு செய்தான்.

மறுநாள் வழக்கம் போல காலையில் போன் செய்தான் செந்தில்.

‘‘என்ன பாக்கியம் ஆபீஸ் வரீங்களா?’’ என்று கேட்டான்.

எதிர் திசையில் இருந்த பாக்கியத்திற்கு செந்தில் நேற்று செய்த செயல்கள் அவன் கண்முன் விரிந்து நின்றன.

‘‘இல்ல எனக்கு வேலை இருக்கு. நான் ஓய்வு இருக்கும்போது வரேன்’’ என்றான் .

‘‘சரி வாங்க பேசலாம்’’ என்றான் செந்தில்.

அவன் போனைக் கட் செய்தபோது, ‘‘இன்றும் நம்மை அழைத்து நேற்று நடந்தது போலவே செய்வான். எதற்கு வேண்டாம். அவன் நட்பு தேவை இல்லை’’ என்று மனதுக்குள் நினைத்தான்.

எப்படியும் மறுநாள் அலுவலகத்திற்கு பாக்கியம் வருவான் என்று செந்தில் நினைத்தான்.

ஆனால் அவன் நடவடிக்கைகளை கவனித்த பாக்கியம் இனி அவன் அலுவலகத்திற்கு செல்வதே இல்லை என்று முடிவு செய்தான்.

செந்திலுக்குஅது தெரியாத ஒரு உண்மையாகவே இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *