சினிமா

லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வெளியாகி வரும் மிகப்பெரிய படங்களின் பெரிய பெரிய அறிவிப்புகளுக்கு மத்தியில், ஒரு ஆச்சர்யமான கூட்டணி மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமாவின் மிக பிரமாண்டமான மற்றும் பெருமைமிகு தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் சினிமாஸ், லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை வாங்கியிருக்கிறது.
இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இது குறித்து கூறும்போது, ‘ஏஜிஎஸ் சினிமாஸ் எங்கள் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றிருப்பது எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம். தொடர்ச்சியாக பெரிய பட்ஜெட்டில் படங்கள் தயாரிப்பது, பெரிய படங்களை ரிலீஸ் செய்வதற்கு பெயர் போன ஏஜிஎஸ், எங்களை போன்ற சிறிய பட்ஜெட்டில் உருவான படத்தை ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டியிருப்பது உற்சாகத்தை அளிக்கிறது. இது எங்கள் குழுவினருக்கு மட்டும் கிடைத்த வெற்றி என்று நான் கூற விரும்பவில்லை, நல்ல கதைகளை கொண்ட படங்களுக்கு பெரிய கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறது என்று தான் கூறுவேன்’ என்றார்.
படத்தை பற்றி லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் கூறுகையில், “படம் மனித உறவுகளை பற்றி பேசுவதோடு, ஒரு அழகான காதல் கதையையும் கொண்டிருக்கிறது. எளிய மற்றும் யதார்த்தமான படமான இதை பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என நான் நம்புகிறேன்” என்றார்.
லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் எழுதி இயக்க, பசங்க கிஷோர் மற்றும் லவ்லின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தை மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைக்க, கிருஷ்ணா சேகர் டி.எஸ். ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *