சிறுகதை

ரோஷம் – ஆவடி ரமேஷ்குமார்

வீடு சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான வேலையை அரசு அலுவலகத்தில் முடிக்க வேண்டி அங்கு போயிருந்தார் ராமலிங்கம்.

வேலை இன்று முடியுமா முடியாதா என்ற குழப்பத்துடன் போனவரை அன்புடன் வரவேற்று அக்கறையாக விசாரித்து மளமளவென்று தானே அது சம்பந்தப்பட்ட பைல்களை தேடி எடுத்து, திருத்தி மேலதிகாரியிடம் சென்று விவாதித்து அவரின் கையெழுத்தை பெற்று வந்து அழகிய கவரில் போட்டுக்கொடுத்தார் ஏ.ஓ.சுந்தரம்.

மனம் நெகிழ்ந்து போன ராமலிங்கம், ஆயிரம் ரூபாயை எடுத்து அவரின் பக்கத்தில் நெருங்கி ரகசியமாக,” இதை வச்சிக்குங்க சார்.ரொம்ப நன்றிங்க” என்று நீட்டினார்.

” ஸாரிங்க. நான் லஞ்சம் வாங்கறதில்ல”

சொன்ன ஏ.ஓ.வைப்பார்த்து மிகுந்த மரியாதையோடு கை கூப்பி வணங்கிவிட்டு வெளியேறினார் ராமலிங்கம்.

வீட்டுக்கு வந்ததும் மனைவி புவனாவிடம் அந்த ஏ.ஓ.வை பற்றி விரிவாக விளக்கி புகழ்ந்து தள்ளினார்.

அப்போது புவனாவின் செல்போன் ஒலிக்கவே, எழுந்து வெளியே சென்று பேசிவிட்டு வந்தாள்.

” யாரு போன்ல?”

“சாந்தி”

சட்டென்று முகம் சிவந்தார் ராமலிங்கம்.

” அந்த ஓடு காலியைத்தான் நான் தலை முழுகிட்டேனே…நீ ஏன் இன்னும் அவ கூட தொடர்பு வச்சிட்டிருக்கே?”

” என்னால உங்களை மாதிரி இருக்க முடியாதுங்க. நான் பத்து மாதம் சுமந்து பெத்தவளுங்க!”

சந்தோஷமான சூழ்நிலை இப்போது எதிர்ப்பதமாக மாற ஆரம்பித்தது.

” அரசு உத்தியோகம் பார்க்கிற அவளுக்கு மாசம் பல லட்சம் சம்பாதிக்கிற ஒரு என்ஜினீயர் மாப்பிள்ளையை பார்த்து பேசி வச்சிருந்தேன்….திடீர்னு ‘ எங்க ஆபீஸ்ல வேலை பாரக்கிற ப்யூன் ஒருத்தரை நான் விரும்பறேன். அவரும் என்னை விரும்பறார். அவர் ரொம்ப ரொம்ப நல்லவரு. அவரையே எனக்கு கட்டி வைங்க’ னு கோரிக்கை வச்சா….

…’ அடி செருப்பால…வீட்டை விட்டு வெளியே போடீ நாயே’ ன்னு கத்தினேன்….

….கழுதை சொன்னபடியே அந்த ப்யூனை கட்டிட்டு வந்து வாசல்ல மாலையும் கழுத்துமா ஆசிர்வாதம் வாங்க நின்னுது….

….பெட்ரூமில் இருந்த நான்,

‘வெளியே வரமாட்டேன்.என் கண்ணுல படாம அப்படியே ஓடிப்போகச் சொல்லு. இல்லேனா இங்கே ஒரு கொலை விழும்’னு உன்கிட்ட சொன்னேன்.’

அவளும் திரும்பிப் போயி பத்து வருஷமாச்சு.

நான் உறவை கட் பண்ணினது பண்ணினது தான்.

ஆனா நீ தான் இன்னும் எனக்கு தெரியாம போன்லயும் நேர்லயும் தொடர்பு வச்சிட்டிருக்கே. எனக்கு தெரியாம போய் பேரன் பேத்தியை பார்த்து கொஞ்சிட்டு வர்றே…ச்சை!”

” சரி சரி டென்ஷனாகாதீங்க’’.

இப்ப நீங்க புகழ்ந்து பேசினீங்களே…ஒரு ஏ.ஓ…!அதாவது அட்மினிஸ்ட்ரேசன் ஆபீஸர் சுந்தரம்…அவர் யாருனு நெனச்சீங்க.அவர் தாங்க நம்ம மாப்பிள்ளை!”

அதிர்ந்தார் ராமலிங்கம்.

” என்னடி சொல்ற…அந்த ஏ.ஓ தான் நம்ம மாப்பிள்ளையா?!

சாந்தி ஒரு ப்யூனையில்ல கல்யாணம் பண்ணினாள்?”

” ஆமாங்க.நம்ம பொண்ணு ரோஷக்காரி.அதுவும் உங்களைவிட ரோஷக்காரி! தன் புருஷனை ப்யூனுனு கேவலமா பேசி அவமானப்படுத்தின உங்களுக்காகவே பதிலடி கொடுக்க இன்னிக்கு ‘ ஏ.ஓ’ வா மாப்பிள்ளை உயர்ரதுக்கு அவரை பத்தாவது பாஸ் பண்ண வச்சு,டிகிரி பி.ஜியெல்லாம் பண்ணவச்சு ஆபீஸ்ல டிபார்ட்மென்ட் எக்ஜாம் எல்லாத்தையும் எழுத வச்சு ஸ்டெப் பை ஸ்டெப்பா பதவி உயர்வு அடைய வச்சு சாதிச்சுக்காட்டிட்டாளே…சாந்தியா கொக்கா..!”

புதிய செய்தியால் அப்படியே அரைமணி நேரம் அதிர்ச்சியில் அமுங்கிப்போனார் ராமலிங்கம்.

பிறகு மெதுவாக,” புவனா நீ நம்ம சாந்திகிட்ட போன் பண்ணி சொல்லிடு. நாளைக்கு நாம அவங்க வீட்டுக்கு போய் சாந்தியை சமாதானப்படுத்திட்டு நம்ம வீட்டுக்கு அவங்களை அழைச்சிட்டு வந்து நாம செய்யாம விட்ட சீர் வகைகளை மனசார செஞ்சு ஆசீர்வாதம் பண்ணிடலாம்.என்ன ஓ.கே.வா?” என்று கேட்டார்.

மிகுந்த உற்சாகத்தோடு புவனா , ” டபுள் ஓ.கே.ங்க” என்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *