சினிமா செய்திகள்

ரோகிணி, பசுபதி நடிப்புப் பசிக்கு சரியான தீனி: இயக்குனர் ராம் சங்கையா, சபாஷ்!

‘‘கோளாறு வாய்க் கிழவி” முத்தம்மா

அடி, ஆத்தாடீ… ஊரையே கூட்டும் நடிப்பு!

‘‘கோளாறு வாய்க் கிழவி” கதாபாத்திரத்தில் அதிகபட்சம் ஆறு ஏழு காட்சிகளில் மட்டுமே நடித்திருக்கும் முத்தம்மா என்னும் கிழவியை நாள் முழுக்க பாராட்டிக் கொண்டே இருக்கலாம். என்னமாய் ஒரு நடிப்பு?! எதார்த்தம்… எதார்த்தம்!

அடி ஆத்தாடி…, முத்தம்மாவை உட்கார வைத்து திருஷ்டி சுற்றிப் போட வேண்டும், கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாதே…?!

உசிலம்பட்டி- ஆண்டிப்பட்டி- தேனி வட்டார பாஷையைப் பேசுகிற விதம் என்ன…? ‘பாடி லாங்குவேஜ்’ தான் என்ன?! முழிக்கிற முழி, வாயைத் திறந்தாலே உதிர்க்கிற அந்தப் பழமொழி தான் என்ன…என்ன? முத்தம்மா கிழவிக்காகவே படத்தை பார்த்து விடலாம்.

போலீஸ்காரன் பசுபதியின் தொப்பியையே சாவு வீட்டில் ஆட்டையாப் போட்டுவிட்டு அப்பிராணி போல முழிக்கிற காட்சியில் ஆரம்பித்து … தலை காட்டுகிற ஒவ்வொரு பிரேமிலும் தியேட்டரில் கலகலப்பு. முத்தம்மா ஜிந்தாபாத், எழுப்பலாம், கோஷம் சத்தமா!

கம்பன் வீட்டுக் கட்டுத் தெரியும் கவி பாடும் என்பர்களே, அதுபோலத்தான். கமல்ஹாசனிடம் நேரடி பயிற்சி பெற்ற நடிப்பு அனுபவத்தில் ரோகிணியும், பசுபதியும்- தங்கப் பொண்ணு – சுப்பிரமணியனாக வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள்.

‘‘தண்டட்டி’’ ஓடத் துவங்கி 30-–35வது நிமிடம் ரோகிணி இறந்துவிட அதிலிருந்து நகரும் கதை கிளைமாக்ஸ் வரை நடுக்கூடத்தில் பிணத்தை போட்டு விட்டு சோகத்தில் இருக்கும் அந்த வீட்டைச் சுற்றித் தான் 80 நிமிடத்திற்கு, கதை ஓட்டம். எழவு வீட்டிலேயே அத்தனை கதாபாத்திரங்களையும் முடக்கிப் போட்டு விட்டு திரைக்கதையை நகர்த்துவது லேசுப்பட்டக் காரியமா?

வித்தியாசமான கோணத்தில் சிந்தித்தவர், முழுக்க முழுக்க மண்வாசனைக் கதையை ஓட விட்டவர், தேனி- ஆண்டிப்பட்டி -உசிலம்பட்டி கிராமத்து மக்களையே நடிக்க வைத்தவர்: இந்த மூன்று அம்சங்களுக்காகவே மனம் திறந்து பாராட்ட வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ராம் சங்கையா. சிம்பு (தேவன் உள்ளிட்ட பலரிடம் இயக்கத்தில் அனுபவம் பெற்றவர்)

“ஏய். தங்கப் பொண்ணு நில்லு… நில்லு…” என்று போலீஸ்காரன் சுப்பிரமணி பசுபதி குரல் கொடுத்து, ரோகிணியின் கையை படக்கென்று பிடித்து இழுக்க, கடைசி 20 நிமிடம். பிளாஷ்பேக். ரோகிணி பசுபதி இளமைக் காதல், ஜா“தீ’’யில் கருகிய காதலின் உணர்வுகள், வெள்ளித்திரையில்.

ரோகிணியும் பசுபதியும் உள்ளத்தை உருக்கி- இல்லை உலுக்கி விடுகிறார்கள், பார்வையாளர்களை. இருவரின் நடிப்புப் பசிக்கு விருந்து படைத்திருக்கும் ‘நளபாக’ சமையல்காரராக கண்ணில் தெரிகிறார் ராம் சங்கையா. ஊதலாமே வெற்றிச்சங்கை?!

தீபா சங்கர், பூவிதா, ஜானகி, செம்மலர் அன்னம்: பொன்னாத்தா, சின்னாத்தா, பூவாத்தா, விருமாயியாக உருமாறி இருப்பவர்கள். மண்வாசனை முகங்கள்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன் குமார் தயாரிப்பாளர். இணை தயாரிப்பாளர் ஏ.வெங்கடேஷ். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ‘தண்டட்டி’ அணிந்த மூதாட்டிகள் முக்கிய கதாபாத்திரங்களாக என்பது தனிச்சிறப்பு.

கே.எஸ்.சுந்தரமூர்த்தி – இசை. மகேஷ் முத்துசாமி – ஒளிப்பதிவு. படத்தொகுப்பு – சிவா நந்தீஸ்வரன். கலை – வீரமணி, நால்வர் அணி – ராம் சங்கையாவுக்கு வலிமை.

படப்பிடிப்பு – தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி உள்ளிட்ட இடங்களில் அருமையான பதிவில் காமிரா. கிழவிகள் – ஒப்பாரிக் காட்சியிலும், நகைச்சுவை கூடு கட்டுகிறதே!

ஒரு கிராமத்துப் படம் என்ற குறுகிய வட்டத்துக்குள் இசையமைக்காமல் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் வகையில் சுந்தரமூர்த்தியின் இசை. பட்டினத்தார் பாடல் – காதில் ஒலிக்கும். கவனம் ஈர்க்கும்.

ராம் சங்கையாவின்

“தண்டட்டி”:

* தமிழ்ப் பட அதிபர்கள்

பரிவட்டம் கட்டலாம்;

பல்லக்கில் தூக்கலாம்;

மண்வாசனை சித்திரம்:

ரோகிணி, பசுபதி,

‘‘கோளாறுவாய்க் கிழவி’’

முத்தம்மா

மறக்க முடியுமா?


வீ. ராம்ஜீ


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *