செய்யாறு, ஜூன் 20–-
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கீழ்நெல்லி வேளாண் அறிவியல் மையத்தில் வாரணாசியில் பிரதமர் மோடி விவசாயிகளுக்கான கவுரவ நிதி வழங்கும் நிகழ்ச்சி நேரலை ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன், உதவி ஆட்சியர் பல்லவிவர்மா, வேளாண் அறிவியல் மையத்தலைவர் ரமேஷ், அறிவியல் விஞ்ஞானி சுரேஷ் மற்றும் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சி.ஹரக்குமார் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
3வது முறையாக பிரதமர் பொறுப்பேற்று விவசாயம், மகளிர் நலன், இளைஞர் நலன், ஏழ்மையைப் போக்குதல் உள்ளிட்ட 4 திட்டங்களுக்கு அளித்து முன்னுரிமை வருகிறார். அதிலும் பிரதமராக பொறுப்பேற்று முதல் நிகழ்ச்சியாக 9.28 கோடி விவசாயிகளுக்கு 17 தவணை உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று விவசாயிகளுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இத்தொகை விவசாய சாகுபடி கூலி, உரம், பூச்சி மருந்து செலவுகளுக்கு உதவியாக அமையும். இதன் மூலம் தனியாரிடம் விவசாயிகள் கடன் பட்டு அவதிப்படுவதை தவிர்க்க முடியும். டிரோன் டெக்னாலஜி மூலம் உரந்தெளித்தல், பூச்சி மருந்து அடித்தல் உள்ளிட்ட பயிற்சி அளிக் கப்படுகிறது. வேளாண் பொருட்களை கூட்ட மதிப்பு மூலம் விவசாயிகளுக்கு உரிய வழிகாட்டல் அளிக்கப்படுகிறது. சிறுதானியங்கள் தற்போது ஏற்றுமதி செய்கின்ற அளவிற்கு உற்பத்தி அதிகரித்து வருகிறது. சாகுபடி பெருகி வரும் அதே வேளையில் சிறுதானிய பயன்பாடும் இந்தியாவில் அதிகரிக்கின்ற வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் ரேஷன் கடைகளில் சிறுதானியம் இலவசமாக வழங்கிட மத்திய வேளாண் துறை அமைச்சருடன் பரிசீலித்து பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவான முயற்சிகளை மேற்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் போளூர் சி.ஏழுமலை, நகரத் தலைவர் வெங்கட்ராமன், கோட்ட அமைப்பாளர் ராமன், ஓபிசி அணி மோகனம், தேசிய செயற்குழு உறுப்பினர் பாஸ்கரன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் பூங்காவனம், அருள், ஜெகன் உள்ளிட்ட திரளான பா.ஜ.க.வினர் இணை அமைச்சர் எல்.முருகனை வரவேற்றனர்.