சென்னை, அக். 15–
தமிழ்நாட்டில் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தொடந்து தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு நாளேட்டில் வந்த செய்திக்கும் அரசியல் முகவரியற்ற சிலரின் தவறான கூற்றிற்கும் பதிலளித்து உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள், குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சிறப்புப் பொது விநியோகத் திட்டப் பொருட்களான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கடுமையான நிதி நெருக்கடியிலும் விலை மாற்றம் ஏதுமின்றி துவரம் பருப்பு கிலோ ரூ.30 மற்றும் பாமாயில் பாக்கெட் ஒன்றிற்கு ரூ.25 – என்ற விலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிட இத்திட்டத்தினை நீட்டித்து முதலமைச்சரால் கடந்த ஜூலை மாதத்தில் ஆணையிடப்பட்டது.
அதன்படி, அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்குத் தேவையான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் எண்ணெய் பாக்கெட்டுகள் ஆகியவற்றைத் திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி மூலம் கொள்முதல் செய்வதற்காக 10.9.2024 அன்று ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குத் தேவையான 51,000 டன் கனடா மஞ்சள் துவரம் பருப்பு குறைந்த விலைப்புள்ளி அளித்த 5 ஒப்பந்ததாரர்களுக்கும் 6 கோடி பாமாயில் பாக்கெட்களுக்கு குறைந்த விலைப்புள்ளி அளித்த 4 ஒப்பந்ததாரர்களுக்கும் 16.9.2024 அன்று கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டன. அவர்களிடமிருந்து பருப்பும் பாமாயிலும் பெறப்பட்டுக் கிடங்குகளுக்குத் தொடர்ந்து நகர்வு செய்யப்பட்டு வருகிறது.
கனடா மஞ்சள் பருப்பானது 2012–ம் ஆண்டு முதல் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இப்பருப்பில் புரதச்சத்து மற்றும் ஊட்டச்சத்து மற்ற இதர பருப்புகளைவிட கூடுதலாகத்தான் உள்ளது என ஆய்வில் வேளாண்மை பல்கலைக்கழகத்தால் கண்டறியப்பட்டுள்ளது.
தனியர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி, மஞ்சள் பருப்பு அல்லது துவரம் பருப்பை வாங்கலாம் என்று அவர்கள் கூறியபோது, டெண்டரை அழைத்த குழுவிற்கு வாய்ப்பை வழங்கியது.
அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய 3 மாதங்களுக்குத் தேவையான கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்ட நிலையில் அக்டோபர் 1ந் தேதியில் கிடங்கில் 9,324 டன் துவரம் பருப்பும் நியாய விலைக் கடைகளில் இருப்பு 6,044 டன் துவரம் பருப்பும் இருப்பு இருந்தன. அக்டோபர் மாத ஆரம்பத்தில் இருந்த மொத்தக் கையிருப்பு பருப்பு 15,368 டன் ஆகும்.
அக்டோபர் மாதத்திற்கு மொத்த ஒதுக்கீடு 20,750 டன் ஆகும்.
உயர் அலுவலர்களால்
நடத்தப்படும் ஆய்வு
மொத்த ஒதுக்கீட்டில் 7,679 டன் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுவிட்டது. 14ந் தேதியில் நியாய விலைக் கடைகளில் இருப்புள்ள 8,065 டன் துவரம் பருப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, கிடங்குகளில் இருப்பு உள்ள 5,115 டன் துவரம் பருப்பு கடைகளுக்கு நகர்வு செய்யப்பட்டு வருகிறது.
எனவே, அக்டோபர் மாதத்திற்கான மொத்த ஒதுக்கீட்டில் விநியோகம் செய்யப்பட்ட 8,065 டன் போக கிடங்கு மற்றும் நியாயவிலைக் கடைகளில் உள்ள 13,180 டன் இருப்பானது மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப் போதுமானதாக உள்ளது.
மேலும், நவம்பர் மாதத்திற்கான துவரம் பருப்பு விநியோகத்தினைத் துரிதப்படுத்த தினமும் துவரம் பருப்பு ஒப்பந்ததாரர்களிடம் ஆய்வுக் கூட்டமும் கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட ஒப்பந்ததாரர்களின் ஆலைகள் மற்றும் கிடங்குகளிலும் ஆய்வுகள் உயர் அலுவலர்களால் நடத்தப்பட்டும் வருகின்றன.
ஆதலால், நாளேடு ஒன்றில் குறிப்பிட்டிருப்பது போன்று துவரம் பருப்பு விநியோகத்தில் எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை. அரசியலில் முகவரியில்லாமல் இருக்கும் சிலர் தங்கள் இருப்பைக் காண்பிக்கக் கூறும் தேவையில்லாத கருத்துகளில் உண்மை ஏதும் இல்லை என்பது துவரம் பருப்பினைப் பெற்று வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நன்றாகத் தெரியும்.
தீபாவளிக்கு மட்டுமல்ல வருகின்ற மாதங்களிலும் குடும்ப அட்டைதாரர்கள் எவ்விதச் சிரமமுமின்றி துவரம் பருப்பு மற்றும் பாமாயிலைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் அர.சக்கரபாணி கூறியுள்ளார்.