சிறுகதை

ரேடியோ ஜாக்கி

சிறுகதை ராஜா செல்லமுத்து

 

சாமிக்கு அதிகாலை என்பது நிலா ரேடியோவின் குரலிலேயே விடியும். அவன் நினைவலைகளில் அறுந்து போகாமல் அப்படியே உலா வரும். எழுந்து முகம் கழுவுகிறானோ இல்லையோ நிலா ரேடியோவின் ஸ்விட்சை ஆன் செய்து விட்டு தான் வேறு வேலை பார்ப்பான்.
“ஹலோ நிலா ரேடியோ நேயர்களே, உங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமைய உங்கள் எல்லோரையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக. நிகழ்ச்சியின் முதல் தொடக்கமாக பக்திப்பாடல் என்று நிலா ரேடியோவின் ஆர்ஜே அபிநயா பேசும் போது சாமிக்கு சாமி வந்து ஆடுவது போல் இருக்கும். இன்னும் கொஞ்சம் கண்ணை மூடலாம் என்றால் அபிநயாவின் குரல் அவனைத் தூங்க விடாது. செவிகளில் விழுந்து உயிரில் கரையும்.
“என்ன பாடல் கேட்டீங்களா? எப்படி இருக்கு அடுத்த பாடல் உங்கள் காதுகளில் பூந்தோட்டம் அமைக்கப்போகிறது என்று அபிநயா பேசும் போது புரண்டு புரண்டு படுப்பான் சாமி
” ஐயய்யோ …… யார்ரா இவ. கடவுள் ஒவ்வொருக்கும் மனுசங்களுக்கும் ஒவ்வொன்னு ஒரு திறமைய குடுப்பான் போல. இவளுக்கு குரல் என்ன மாதிரி இருக்குன்னு பாரு . ச்சே …. தேன்ல பலாச்சுளைய ஊற வச்சு சாப்பிடுறது மாதிரி இருக்கே என்று சாமி தனக்குள் அவளின் குரலை ஊற வைத்துக் கொண்டே புரண்டு படுப்பான்.
அப்போது காலை மணி ஏழு இருபதில் தான் இருக்கும். ஏழு இருபது தான ஆகுது இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமே என்று அவன் மனது சொன்னாலும் அபிநயாவின் குரல் அவனைத் தூங்க விடுவதில்லை.
பாடல் முடிந்து அவள் கொடுக்கும் வர்ணனையே சாமியை வதைக்கும்
“ம்….என்ன தூக்கமா?
சீக்கிரமா எழும்புங்க. ஆபீஸ் போக வேணாமா? இப்படி தூங்கிட்டு இருந்தா எப்பிடி? ரோடு புல்லா டிராப்பிக் இருக்குன்னு சொல்றாங்க. ரோட்ல போகும் போது, ஹெல்மெட் போடுங்க . உங்களோட உசுர நீங்க தான் பாத்துக்கிரணும். ஓ.கே சீக்கிரமா எழுந்திருங்க என்று அவள் ரேடியோவில் பேசுவது என்னமோ சாமியை அவள் எழுப்புவது போல இருக்கும். என்ன இவ நம்மள தான் எழுப்புறாளா? இப்பிடி பேசுறாளே. இந்தா எந்திரிச்சிட்டேன். இப்ப கிளம்புறேன். இந்தா இப்பவே என்ற சாமி. ரேடியோவில் பேசுவதை தன்னிடம் சொல்வது போலவே நினைத்து எழுவான்.
கடகடவென பல் துலக்குவான். ஏழுமணியிலிருந்து எட்டுவரை அதிகாலைப் பாடல்களை ஔிபரப்புவாள். அதன் இடையே புடோஸ்கோப் என்ற உணவுகளைப் பற்றிச் சொல்லும், ஆளை அறிமுகப்படுத்துவாள். பேசும் போது, நகரும் நேரங்களை அவள் சொல்வதே இல்லை.
அவள் புடோஸ்கோப் சொன்னாள். ஏழுமணி அரை மணி நேரம். “ஆகா” என்று சொன்னால் எட்டு மணி. டேக் ஆப் பிரண்ட் என்ற நிகழ்ச்சியில் அவள் நினைத்துக் கொள்ள வேண்டியது தான்.
அவள் குரலே சாமிக்கு புதிய சக்தியைத்தரும் எத்தனையோ எப்எம்கள் இருந்தாலும் அவன் நிலா ரேடியோவை விட்டு வேறு எந்த ஸ்டேசனையும் வைப்பதில்லை. கேட்பதில்லை, விடிந்து எழுந்து அவன் அலுவலகம் கிளம்பும்வரை, அவன் காதுகளில் அபிநயாவின் குரலே கூடு கட்டும். அவள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவன் செவிகளில் விழுந்து உயிரில் உறையும் அவனின் ஒலிக்கடிகாரம் அபிநயாவின் குரல் தான். அவளின் குரல் கேட்டே சாமியின் காலை அலுவல்கள் நகரும் டேக் ஆப் பிரண்ட், என்று அவள் பேசிக்கலாய்க்கும் போது ஆகா, இவள் எப்படித்தான் பேசுகிறாளோ? இவள் குரலே இப்படி இருந்தால் ஆள் எப்படி இருப்பாள் என்று சாமி தன் மனதிற்குள்ளேயே அவளைப்பற்றி வரைந்து கொள்வான்.
ஒரு நாள் நிலா ரேடியோ ஸ்டேசனுக்கு போயி அபிநயா எப்படி இருக்கான்னு பாத்திர வேண்டியது தான்.
நிச்சயம் அழகா தான் இருப்பா இவள கடவுள் பேசுறதுக்குன்னே படச்சிருப்பானோ? இப்படி பேசுறாளே. கொஞ்சங்கூட வெக்கம் பயம் நடுக்கம் எதுவும் இல்லையே, இப்படி யொரு பொண்ணு நம்மோட மனைவியா அமைச்சா எப்படி இருக்கும்? என்ற சாமி அவளின் குரலிலேயே குடியிருந்தான்.
ஒன்பது மணிக்கு அவள் பேசுவதை நிறுத்தி விட்டு, வேறு ஒருவரிடம் ரேடியோவை ஒப்படைக்கும் போது சாமிக்கு அழுகையே வந்துவிடும்.
ஏய் அபிநயா நீ எப்படி இருப்ப? எப்படி இருக்க? எப்படியெல்லாம் பயமில்லாம இவ்வளவு அழகா பேசுறியே ஒன்ன நான் ஒருநாள் பாக்கணும் அபிநயா. ஒரு தடவ ஒன்கூட பேசணும்னு நம்பர் போட்டேன். கனைக்ட் ஆகலையே, இப்படி ஒவ்வொரு நாளும் நீ பேசிப் பேசித்தான் என்னோட இரவ விடிய வைக்கிற. யாருமில்லாத இந்த அறையில ஒன்னோட குரல் தான், எனக்கு துணையா இருக்கு. உடலா இல்லாம நீ என் கூட குரலா இருக்க அபிநயா. ஒன்ன நான் கண்டிப்பா சந்திப்பேன்; ஒன்னைய நான் பாப்பேன். ரேடியோவுல பேசுற ஒன்கூட கண்டிப்பா நான் பேசுவேன் என்ற போது…
ஓ.கே…. பாய் …. நான் கிளம்ப வேண்டிய நேரம் வந்திருச்சு. டாட்டா என்று அவள் பேசும் போது குமரியாக வளர்ந்த அபிநயா, குரலால் குழந்தையாகவே தெரிவாள்.
“அபி …. ஒன்பது மணி ஆயிருச்சு. நீயும் கிளம்பிட்ட நானும் ஆபிசுக்கு கிளம்பிட்டேன். டாட்டா என்று சாமியும் தன் பங்குக்குச் சொல்லி விட்டு, அலுவலகம் கிளம்பினான்.
அவன் மனம் முழுவதும் அபிநயாவே அப்பிக் கிடந்தாள் நாட்கள் நகர்ந்தன.
ஒரு நாள் அதிகாலை…, நிலா ரேடியோவுக்கு நேரடியாகவே சென்றான். முன் அனுமதிக்குப்பின் அனுமதிபெற்று பெற்று உள்ளே சென்றான். தினமும் வீட்டிலிருந்த எப்எம்லிலேயே அபிநயாவின் குரல் கேட்டவன், இன்று நேரடியாகவே அவள் பேசுவதைக் கேட்கப் போவதை நினைத்து நெகிழ்ந்தான்.
“ஹலோ நீங்க அபிநயாவ தான பாக்கணும்’’
“ஆமா”
“அவங்க ஒன்பது மணிக்கு, தான் புரோகிராம முடிப்பாங்க. அப்ப பாருங்க அதுவரைக்கும் அவங்க பேசுறத இதுல கேளுங்க என்று ஒருவர் சொன்னதும் அங்கிருந்த ஒரு எம்எம்பில் அபிநயா பேசிக்கொண்டிருந்தாள்.
“உயிரில் மகிழ்ச்சி நிறைத்த அபிநயாவின் குரலை உள்வாங்கிக் கொண்டிருந்தான் சாமி. காலை எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிவரை அவளின் அழகுக் குரலைக் கேட்டுக் கொண்டிருந்தவன். அங்கு ஒன்பது மணியாகவும் ஒரு உற்சாக கங்கையே அவனுள் உருக, அபிநயாவிற்காகக் காத்திருந்தான் ஆட்கள் வருவதும் போவமாய் இருந்தனர்.
“ஹலோ …. நீங்க தான் அபிநயாவ பாக்கணும்னு வந்தது
“ஆமா” என்று சாமி சொன்னபோது,
“அங்க பாருங்க அவங்க தான் அபிநயா என்று ஒருவர் காட்டிய போது அவளைப் பார்த்ததும் சாமியின் கனவு சுக்கு நூறாக உடைந்து சிதறியது. அங்கே ஒரு வீல் சேரில் வந்து கொண்டிருந்தாள் அபிநயா
வண்டியின் சக்கரங்களை அவளே உருட்டியபடியே வந்தாள்
ஹலோ சார் நான் தான் அபிநயா. என்னைய தான் பாக்கவந்தீங்களா? என்று அவள் அழகுக்குரலில் பேசிய போது சாமியின் கனவுகள் சுக்கு நூறாய் உடைந்து சிதறியது.
அவளுடன் பேசாமலே நின்றிருந்தான். ப்ரோ வாட்ஸ் ப்ராப்ளம், ஏன் என்னாச்சு, நான் தான் ஆர்ஜே அபிநயா என்று சொன்ன போது சாமிக்கு அழுகையே வந்து விட்டது.
“வாங்க செல்பி எடுத்துக்கங்க என்று அவள் ரேடியோ குரலிலேயே பேசினாள். செல்பி எடுத்த கையோடு, அவளின் குரலில் இருக்கும் அழகை கடவுள் ஏன் இவ உடல்ல வைக்கல என்ற வருத்தத்தையே அவன் முகம் சொன்னது.
செல்பிக்கு அழகாகச் சிரித்தாள் அபிநயா.
அந்த அழகிலும் ஒரு அழகு இருந்தது. சாமி அங்கிருந்து புறப்பட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *