சிறுகதை

ரேசன் கடை அரிசி – செல்லமுத்து

வழக்கம் போல அந்த ரேசன் கடையில் அனுமார் வால் போல் நின்று கொண்டிருந்தது மக்கள் கூட்டம். தலையில் முக்காடு போட்டு இருக்கும் பெண்கள் ஒரு பக்கம். கையில் கொண்டு வந்த பைகளை வெயிலுக்கு இதமாகப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருக்கும் ஆண்கள் கூட்டம் மறு பக்கம். .குழந்தையை சுமந்து கொண்டு நிற்கும் கூட்டம். கால் வலிக்கிறது என்று முட்டியைப் பிடித்துக் கொண்டு நிற்கும் வயதானவர்கள் கூட்டம் என்று அந்த ரேசன் கடையில் கொஞ்சம் கூட நியாயம் இல்லாமல் இருந்தது.

அந்த அரிசியை வாங்கி குடும்பத்தோடு சமைத்துச் சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டு இருந்த மக்கள் ஒரு பக்கம். அந்த அரிசியில் இட்லி, தோசை, பொங்கல் செய்து சாப்பிடலாம் என்று பேசிக்கொண்டு இருந்த மக்கள் ஒரு பக்கமென்று நியாய விலைக் கடை அரிசியை நம்பி வாழ்ந்து கொண்டிருந்தார்கள் அந்த மக்கள் .

அந்தக் கூட்டத்தில் சில பேர் உண்ணும் மனிதர்களுக்கு எதிரான குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

நீங்க பேசுறது சரி இல்லைங்க. இந்த நியாய விலை கடையில தான் எங்க உசுரே இருக்குது. எங்க புள்ளைங்க உசுரு இருக்குது. இந்த ரேஷன் அரிசியச் சாப்பிட்டு தான் என்னுடைய பிள்ளைங்க காலேஜ் வரைக்கும் படிச்சுக்கிட்டு இருக்காங்க .வறுமையான மனுசங்க வாங்குற இந்த அரிசியில நீங்க பேதம் பாக்குறது கொஞ்சம் கூட நல்லா இல்லங்க. அதைவிட நீங்க பேசுற பேச்சு எங்க விலா எலும்புல குத்துறது மாதிரி வலிக்குதுங்க. நீங்க பணக்காரங்க வீட்டில வேலை செய்யலாம்; பணக்காரங்க என்னென்னமோ சொல்லி உன்கிட்ட அனுப்பலாம்; அதெல்லாம் இங்க வந்து பேசாதீங்க. ஏன்னா இந்த அரிசி தாங்க எங்களுக்கு அமிர்தம். இந்த ரேஷன் கடை தான் எங்களுக்கு கோயில். ஏழை பாழைங்க வாழுற இடத்துல வக்கத்து நிக்கிறோம்ன்னு நீங்க வசைபாடி சொல்றது நாங்க வாழ்வதற்கு தகுதி இல்லையோன்னு நினைக்கத் தோணுதுங்க என்று நெக்குருகிச் சொன்னாள் தேவி அம்மாள் .

தேவி அம்மாள் பேசியதற்கு ஆதரவு கொடுத்துப் பேசினார்கள் சுற்றிலும் இருந்த பெண்கள்.

ஒரு பெண் தன் இடுப்பில் இருந்த குழந்தையைச் சரியாக வைத்துக் கொண்டு அந்தக் குழந்தையின் மூக்கில் வழியும் சளியைத் தன் முந்தானையில் சிந்திக் கொண்டே தேவியம்மாள் பேசுவதற்கு ஆதரவாகத்தான் அவளும் பேசினாள்.

ஆமம்மா நீங்க இங்க வந்து அப்படியெல்லாம் பேசாதீங்க. எங்களுக்கும் மானம் மருவாதி இருக்குது .எங்களுக்கும் கௌரதி இருக்கு என்று நியாய விலை கடைக்கு எதிராக பேசிய வாசுகியைத் திட்டாமல் மென்மையான குரலில் அதேசமயம் வாசுகி பேசியது தவறு என்பதை சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தார்கள்.

இவர்கள் பேசியதெல்லாம் கேட்ட வாசுகி

அம்மா நான் சொன்னது தப்புதான் என்ன மன்னிச்சிடுங்க. இந்த ரேஷன் கடைசியில தான் உங்க வாழ்க்கை இருக்குன்னு எனக்கு தெரியாதும்மா. எங்க முதலாளி அம்மா என்னை எப்பவுமே இந்த ரேஷன் கடைக்கு அனுப்புவாங்க. இங்க வாங்குற அரிசி எல்லாம் நாங்க நாய்க்கு தான் சமைச்சு போடுவோம். அதைத்தான் தெரியாம சொல்லிட்டேன் ம்மா என்ன மன்னிச்சிடுங்க என்றாள் வாசுகி.

இல்லம்மா நீ சொல்றதும் சரிதான் ஏன்னா இந்த அரிசியை வாங்கிட்டு போயி என்ன பண்றாங்கன்னு தான சொன்ன. மத்தபடி நீ எதுவும் தவறா சொல்லலையே? என்று தேவி அம்மாள் முதற்கொண்டு அத்தனை பேரும் வாசுகிக்கு ஆதரவாக பேசினார்கள் .

அந்த ரேஷன் கடை அரிசி வாங்கிய மற்ற பெண்கள் விலகிப் போய்க் கொண்டிருந்தார்கள்.

வாசுகியும் அரிசியை வாங்கி அந்த கூட்டத்திலிருந்து விலகிச் சென்றாள்.

அப்போது தேவி அம்மாள் மற்றும் அங்கு கூடியிருந்த பெண்களைப் பார்த்த வாசுகி

அம்மா தப்பா நினைச்சுக்காதீங்க. இனிமே இந்த அரிசியை நான் நாய்க்கு சாப்பாடு பண்ணி போட மாட்டேன். நானே எங்க வீட்டுக்கு எடுத்துட்டு போயி என் பிள்ளைகளுக்கு சமைச்சு கொடுக்கிறேன்ம்மா .பணக்கார வீட்டு நாய்களுக்கு அவங்க வேற அரிசி வாங்கி தரட்டும். ஏன்னா நீங்க சாப்பிடுற உணவை நான் சாப்பிட்டாதான் அதனுடைய வலி என்ன? பிரச்சனை என்னன்னு எனக்குத் தெரியும் .

இனிமே இந்த ரேஷன் கடைக்கு வந்தேன்னா நாய்க்கு சமைச்சு போடுறதுக்கு இந்த அரிசியை வாங்குறேன்னு சொல்ல மாட்டேன். நாங்க சாப்பிடுவதற்கு தான் இந்த அரிசி வாங்குறேன்னு மனசார சொல்லுவேன்ம்மா. என்னை மன்னிச்சிடுங்க என்று ரேஷன் அரிசியைத் தன் தலையில் தூக்கி வைத்து நடந்து சென்றாள் வாசுகி.

அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள் தேவியம்மாளும் மற்ற பெண்களும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *