செய்திகள்

ரெயில் விபத்துகளை தடுக்க 1,465 கி.மீ. பாதைகள், 139 ரெயில் என்ஜின்களில் ‘கவச்’ கருவி

ரெயில்வே துறை தகவல்

புதுடெல்லி, டிச. 10–

ரெயில் விபத்தை தடுக்க, இதுவரை நாடு முழுவதும் 1,465 கி.மீ. ரெயில் பாதைகள் மற்றும் 139 ரெயில் என்ஜின்களில் ‘கவச்’ கருவி பொருத்தப்பட்டுள்ளதாக ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.

நாட்டில் ரெயில்கள் மோதிக்கொள்ளும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதைத் தடுக்க தானியங்கி ரெயில் பாதுகாப்பு (கவச்) தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நடைமுறை கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் முறையாக பயணிகள் ரெயிலில் பொருத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

இதற்கு பலன் கிடைத்ததால் இந்தக் கருவியை தயாரிக்க கடந்த 2018-19-ம் ஆண்டு 3 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு இந்த கருவி ரெயில்வே துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இதுவரை 1465 கி.மீ. ரெயில் பாதைகள் மற்றும் தென் மத்திய ரெயில்வே பிரிவில் உள்ள 139 ரெயில் என்ஜின்களில் கவச் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக ரெயில்வே துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் டெல்லி – மும்பை மற்றும் டெல்லி – ஹவுரா வழித்தடங்களில் (சுமார் 3000 கி.மீ.) கவச் கருவியை பொருத்துவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் 6000 கி.மீ. பாதையில் கவச் கருவியை பொருத்துவது தொடர்பான ஆய்வு,திட்ட அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

கவச் தொழில்நுட்பமானது ரெயில் ஓட்டுனர்களுக்கு விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும். குறிப்பாக ஒரே மார்க்கத்தில் இரு ரெயில்கள் வந்தால் எச்சரிக்கும். அடர்த்தியான பனி மூட்டம் இருக்கும்போது எதிரே ரெயில் வந்தால் எச்சரிக்கை செய்யும். அப்போது ஓட்டுனர் வேகத்தை குறைக்கத் தவறினால், இந்க கருவி தானாகவே பிரேக்கை அப்ளை செய்து ரெயிலின் வேகத்தை மட்டுப்படுத்தி விபத்துக்கான சாத்தியத்தை குறைக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *