தொடர்ச்சியாக கொள்ளையடித்த பணத்தில் ரூ.4 1/2 கோடியில் ஸ்பின்னிங் மில் வாங்கியதும் அம்பலம்
கோவை, ஜூலை 11–
4 ஆண்டுகளாக தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த ராட்மேன் என்ற கொள்ளையனை கைது செய்த போலீசால், கொள்ளையடித்த பணத்தில் ஸ்பின்னிங் மில் நடத்துவதையும் கண்டுபிடித்துள்ளனர்.
கோவையில் கடந்த 2 ஆண்டுகளாக ரயில்வே தண்டவாளங்களை ஒட்டிய பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தது. இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையரின் உத்தவிரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு 3 மாதங்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த வழக்குகளில் ராட்மேன் (எ) மூர்த்தி மற்றும் அம்சராஜ் ஆகிய இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதில் ராட்மேன் என்கிற மூர்த்தி கோவை மாநகரத்தில் மட்டும் 18 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 68 க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் அவர் ஈடுபட்டுள்ளார்.
இவர் தனியாக திருட செல்லும்போது முகத்தை முழுவதுமாக மறைத்துக் கொண்டும், முழுக்கை சட்டை அணிந்தும் ரயில்வே டிராக் வழியாக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பூட்டியிருக்கும் வீட்டினை நோட்டமிட்டு இரும்பு கம்பியை பயன்படுத்தி பூட்டினை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்திருந்தது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது.
ஸ்பின்னிங் மில்
மூர்த்தி தனித்தனியாகவும், கூட்டாகவும் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்ததும், தனியாக கொள்ளையடிக்கும் நகைகளை சந்திரசேகரன், பெருமாள், காளிதாஸ் மற்றும் ஒரு பெண் ஆகிய 4 பேரிடம் கொடுத்து பணமாக மாற்றியதும் தெரியவந்தது. மேலும் கொள்ளையடித்த பணத்தில் ராஜபாளையத்தில் சுமார் 4.5 கோடி மதிப்பிலான ஸ்பின்னிங் மில் வாங்கியதும் தெரியவந்தது. இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தங்கநகைகள், பணம், விலையுயர்ந்த பைக்குகள், கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யபட்டுள்ளன. இவ்வழக்கு தொடர்பாக வேறொரு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள மனோஜ்குமார், சுதாகர், ராம்பிரகாஷ், பிரகாஷ் ஆகியோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், ‘மூர்த்தி தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.கடந்த 2020-ல் முதல் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால் இதுவரை கைது செய்யப்படவில்லை. இப்போது முதல்முறையாக கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளை சம்பவத்திற்கு ராட் மற்றும் ஒரே மாதிரியான சட்டை பயன்படுத்துவதால் ராட்மேன் என்ப்படுகிறார். ரயில்வே தண்டவாளத்தில் நடந்து வந்து வாகனங்கள் குறைவாக உள்ள வீடுகள் மற்றும் ஆள் இல்லாத வீடுகளில் கொள்ளைடித்துள்ளார். ஏழு நபர்கள் இவரது கூட்டத்தில் உள்ளனர். இக்கும்பலுக்கு மூளையாக செயல்பட்டவர் மூர்த்தி.
பிடிபட்டது எப்படி?
ரூ. 4.5 கோடி மதிப்பில் ராஜலட்சுமி ஸ்பின்னிங் மில் ஒன்றை கொள்ளையடித்த பணத்தில் வாங்கி நடத்தி வருகிறார். மனைவி மற்றும் கூட்டாளியையும் ராஜபாளையம் காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிங்காநல்லூர் பீளமேடு, ராமநாதபுரம், துடியாலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதாவது ரயில்வே ட்ராக்கை ஒட்டி வரும் பகுதிகளில் கொள்ளையடித்துள்ளனர். கட்டிப் போடும் இடங்களில் வெவ்வேறு மொழிகள் மற்றும் சைன் லாங்குவேஜ் மூலம் கொள்ளையடிக்கும் போது பயன்படுத்துவார்கள்.
மூர்த்தியின் மனைவி மற்றும் சுரேஷ் என்பவரை ராஜபாளையம் காவல் துறையினர் பிடித்து விசாரித்து வருகிறார்கள். இன்னும் 4 பேரை கைது செய்ய வேண்டும். சிசிடிவியில் பதிவான கண் மற்றும் அவரது உடல் மொழிகளை வைத்து குற்றவாளியை கண்டுபிடித்தோம். 2 கார்கள், கவாசி பைக் உள்பட 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தோராயமாக 1500 சவரன் கொள்ளையடித்துள்ளனர். அதில் கோவை மாநகரில் மட்டும் 376 சவரன் நகைகளை கொள்ளையடித்துள்ளனர். 1.76 கோடி ரூபாய் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது விருதுநகரில் 20 வழக்குகளும், மதுரை 14 வழக்குகளும் திருப்பூர் மற்றும் திண்டுக்கல் 16 வழக்குள் பதிவாகி உள்ளது’ எனத் தெரிவித்தனர்.