மதுரை, ஜூலை 11–
சோதனை ஓட்டம் சென்ற ரெயில் என்ஜின் மோதி, 2 வட மாநில இளைஞர்கள் பலியானார்கள்.
மதுரை மாவட்டம் சிலைமான் அருகே புளியங்குளம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் ஃகட்டுமான பணிகள் நடக்கின்றன. இங்கு டைல்ஸ் கற்கள் பதிக்கும் பணிக்காக உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூர் பகுதியை சேர்ந்த 6 தொழிலாளர்கள் வந்து பள்ளி வளாகத்திலேயே தங்கி வேலை செய்தனர். இவர்களில் 2 பேர் நேற்று விடுமுறையில் இருந்ததனால், புளியங்குளம் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றனர்.
2 பேர் பலி
அப்போது, மதுரையில் இருந்து மானாமதுரை வரை தண்டவாள ஆய்வுக்காக ரெயில் என்ஜினின் சோதனை ஓட்டம் இயக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் தண்டவாளத்தில் இருவர் நடந்து சென்று கொண்டிருந்ததை அறிந்த என்ஜின் ஓட்டுநர், ஒலி எழுப்பியுள்ளார். இதைக்கேட்டு அவர்கள் இருவரும் நகர்வதற்குள் 2 பேர் மீதும் ரெயில் என்ஜின் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து என்ஜின் ஓட்டுநர் அளித்த தகவலின் அடிப்படையில் மதுரை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், என்ஜின் மோதி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.