செய்திகள்

ரெயில்வே துறையில் மேலும் 1 லட்சம் பேர் நியமனம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

Makkal Kural Official

புதுடெல்லி, மார்ச்.18-–

ரெயில்வே துறையில் நிதி நிலை சிறப்பாக உள்ளது. ரெயில்வே துறையில் மேலும் 1 லட்சம் பேர் நியமிக்கப்படவுள்ளனர் என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று ரெயில்வே துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது ரெயில்வே துறை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர்.

இதற்கு பதில் அளித்து ரெயில்வே அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் பேசியதாவது:- – ரெயில்வேயில் வேலைவாய்ப்பு வழங்கவில்லை என பல உறுப்பினர்கள் தெரிவித்தனர். எப்படி இத்தகைய உண்மைக்கு மாறான தகவல்களை அவையில் கூற முடியும்?

ரெயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் 5 லட்சம் பேர் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர். மேலும் 1 லட்சம் பேரை நியமிப்பதற்கான பணிகளும் நடந்து வருகிறது. ரெயில்வே பணி நியமனங்கள் வெளிப்படையாக நடந்து வருகின்றன.

அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் ஒட்டுமொத்த ரெயில்வேயும் தானியங்கி பாதுகாப்பு தொழில்நுட்பமான கவாச் அமைப்புக்குள் கொண்டுவரப்படும்.

மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கேரளா போன்ற எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் கிடப்பில் உள்ள அல்லது தாமதமான ரெயில்வே திட்டங்களை விரைவில் முடிக்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

சிறப்பான செயல்பாடு காரணமாக ரெயில்வே தனது செலவினங்களை சொந்தமாகவே எதிர்கொள்ளும் திறன் பெற்று உள்ளது. ஒட்டுமொத்தமாக ரெயில்வேயின் நிதி நிலை சிறப்பாக உள்ளது. அண்டை நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் ரெயில் கட்டணம் குறைவாகவே உள்ளது. 350 கி.மீ. பயணத்துக்கு இந்தியாவில் ரூ.121 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் இது பாகிஸ்தானில் ரூ.400 ஆகவும், இலங்கையில் ரூ.413 ஆகவும் உள்ளது. சரக்கு போக்குவரத்தில் வருவாயை பெருக்கிக்கொண்டு, பயணிகளுக்கு சலுகை அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *