செய்திகள்

ரெயில்வே துறையில் ஏற்கனவே துவங்கப்பட்ட பணிகள் தொடரும்: பதவி ஏற்றபின் பியூஸ் கோயல் அறிவிப்பு

புதுடெல்லி,ஏப்.1–

ரெயில்வே துறையில் ஏற்கனவே தொடங்கப்பட்ட பணிகள் அனைத்தும் தொடரும் என அந்த துறையின் அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற பியூஸ் கோயல் தெரிவித்தார்.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ரெயில்வே அமைச்சர் பதவி பியூஸ் கோயலுக்கே மீண்டும் வழங்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று அவர் ரெயில்வே அமைச்சகத்தில் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரெயில்வே அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:–-

ரெயில்வே அமைச்சராக மீண்டும் என்னையே பிரதமர் மோடி தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ரெயில்வேயில் ஏற்கனவே நாங்கள் தொடங்கி இருக்கும் பல பணிகள் தொடரப்படும். ரெயில் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதுடன், அதிக சரக்குகளையும் கையாள முடியும் என நம்புகிறேன்.

ரெயில்வேயில் விபத்து இல்லா நிலையை உருவாக்குவதே எனது குறிக்கோள் ஆகும். அனைவரும் இணைந்து ரெயில்வேயை புதிய உச்சத்துக்கு எடுத்து செல்ல முடியும். ரெயில் சேவையில் அதிக வேகம் மற்றும் பயணிகள் வசதியில் துரித வேகம் போன்றவை இணைந்த ஒரு கலவையான ரெயில்வேத்துறையை உருவாக்குவதற்கு அடுத்த 5 ஆண்டுகளில் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

இவ்வாறு பியூஸ் கோயல் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *