செய்திகள்

ரெயிலில் டிக்கெட் இல்லா பயணம்: பயணிகளிடம் ரூ.1.70 கோடி அபராதம் வசூலித்து டிக்கெட் பரிசோதகர் சாதனை

டெல்லி, மார்ச் 15–

டிக்கெட் இல்லாத ரெயில் பயணிகளிடம் இருந்து மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த டிக்கெட் பரிசோதகர் ஒரு ஆண்டில் மட்டும் ரூ.1 கோடியே 70 லட்சம் அபராதம் வசூலித்து சாதனை படைத்துள்ளார்.

மேற்கு மத்திய ரயில்வேயின் ஜபல்பூர் கோட்டத்தின் தலைமை டிக்கெட் பரிசோதகர் ஆஷிஷ் யாதவ் நடப்பு நிதியாண்டில் மட்டும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த பயணிகளிடம் இருந்து ரூ.1 கோடியே 70 லட்சம் அபராதம் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சாதனை வசூல்

ஆஷிஷ் யாதவ் உட்பட 16 டிக்கெட் பரிசோதகர்கள் டிக்கெட் இல்லாத பயணிகளிடம் இருந்து தனித்தனியாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் வசூலித்துள்ளதுள்ளனர். ஆனால், தலைமை டிக்கெட் பரிசோதகர் ஆஷிஷ் யாதவ் 2021 ஏப்ரல் 1 ந்தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் 9 ந்தேதி வரை 20,600 பயணிகளிடமிருந்து 1 கோடியே 70 லட்ச ரூபாய் அபராதம் வசூலித்துள்ளார். தனியொரு நபராக அபராதம் வசூலித்ததில் இந்த தொகை அதிக வசூலாக இருக்கும் என ஜபல்பூர் கோட்ட வணிக மேலாளர் விஸ்வ ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டில், யாதவ் உட்பட 42 பேர் கொண்ட பறக்கும் படையினர், பல்வேறு ரயில்களில் பயணித்த பயணிகளிடம் இருந்து ரூ.71 கோடி அபராதம் வசூலித்துள்ளதாகவும் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.