வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு
மும்பை, ஏப். 9–
ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு உள்ளது.
ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். ரெப்போ விகிதம் கடந்த 5 ஆண்டுகளாக 6.50% ஆக இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி 7ம் தேதி 0.25% குறைக்கப்பட்டு, 6.25% ஆக இருந்தது.
இந்நிலையில், இரண்டு மாதங்களில் அது மேலும் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 6% ஆக மாற்றப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2025–26ம் நிதியாண்டுக்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5% ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் அதே நிதியாண்டுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு பணவீக்கம் 4 சதவீதமாக ஆகக் கணிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா நடப்பு நிதியாண்டின் முதல் இருமாத பணவியல் கொள்கையில் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பரஸ்பர கட்டணங்கள் அமலுக்கு வரும் நாளில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவின் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.