செய்திகள்

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: 6.5 சதவீதமாகவே தொடர்கிறது

Makkal Kural Official

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

மும்பை, டிச. 6–

‘வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகித்தில் மாற்றமில்லை. 6.5 சதவீதம் ஆகவே தொடரும்’ என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

ரெப்போ விகிதம் என்பது மற்ற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ரெப்போ வட்டி விகிதத்தில், 11வது முறையாக மாற்றம் செய்யப்படவில்லை.

இது குறித்து மும்பையில் செய்தியாளர்கள் சந்திப்பில் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:–

கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் ஆரோக்கியமான முறையில் வளர்ந்து வருகிறது. ஆர்பிஐ மற்றும் நிதிக் கொள்கைக் குழுவின் முடிவுகள் முறையாக பின்பற்றப்படுவதே இதற்குக் காரணம்.

உயர் பணவீக்கம் மற்றும் ஜிடிபி சரிவுக்கு மத்தியில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவீதமாக வைத்துள்ளது. கொள்கையின் நடுநிலை நிலைப்பாட்டைத் தொடரவும், பணவீக்கம் மற்றும் வளர்ச்சியைப் பற்றிய கண்ணோட்டத்தைக் கண்காணிக்கவும் வட்டி விகிதம் மாறாமல் வைக்கப்பட்டுள்ளது. கடைசியாக 2023 பிப்ரவரியில் ரெப்போ விகிதங்களை 6.5% ஆக எம்பிசி உயர்த்தியது.

வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேளையில் பணவீக்கம் 4% என்ற அளவில் இருப்பதில் கவனம் செலுத்தவும் நிதிக் கொள்கை குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளது. வளர்ச்சி வேகத்தில் சமீபத்திய மந்த நிலையை கவனத்தில் கொண்டுள்ளது. இந்த ஆண்டின் 2ம் பாதியிலும், அடுத்த ஆண்டும் வளர்ச்சி மீள்தன்மையுடன் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆர்பிஐ சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நெகிழ்வான பணவீக்க இலக்கு கட்டமைப்பைப் பின்பற்றுவதே எங்கள் நோக்கம். வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேளையில் விலை ஸ்திரத்தன்மையைப் பேணுவதே ஆர்பிஐயின் திட்டம். பொருளாதாரத்தின் ஒவ்வொரு பிரிவிற்கும் விலை நிலைத்தன்மை முக்கியமானது. அதே நேரத்தில் வளர்ச்சியும் மிக முக்கியமானது.

இந்தியாவில் வளர்ச்சி மற்றும் பணவீக்கப் பாதைகளில் சமீபத்தில் சில பிறழ்வுகள் இருந்தபோதிலும், பொருளாதாரம் முன்னேற்றத்தை நோக்கி நிலையான மற்றும் சீரான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.

பணவீக்க விகிதம் உயர்வு, பொருளாதார வளர்ச்சி குறைந்தது போன்ற காரணங்களால் 11வது முறையாக வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *