இருளைப் பொருத்திய வானம் இடியை இறக்கி கொண்டிருந்தது. இயல்பாயிருந்த மனித வாழ்க்கை சிரமத்திற்கு தள்ளப்பட்டது. கடலைச் சுற்றிய ஊர்கள் எல்லாம் ரெட் அலர்ட் என்று அறிக்கை சொல்லப்பட்டு மக்கள் எல்லாம் அன்றைக்கு பலசரக் கடைகளுக்கு போய் பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டார்கள். எல்லா மளிகைக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. பால், பாக்கெட் பவுடர் ,எண்ணெய், அரிசி என்று சமையல் சாமான்கள் வாங்கி அடுக்கிக் கொண்டு வீட்டிற்கு விரைந்து கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள் கௌரி. பாலத்துக்கு கீழே நனைந்தும் நனையாமலும் ஒண்டி அமர்ந்து கொண்டிருந்தனர் கௌரியும் அவளது இரண்டு குழந்தைகளும். திக்கற்றுத் திசை தெரியாமல் திரிந்த இந்த அனாதைகள் அந்தப் பாலத்தின் கீழேதான் இவ்வளவு நாள் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தார்கள்.
கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு ,அந்தப் பாலத்தின் அருகே தங்கிக் கொள்வார்கள். இரவில் கௌரி ஒரு நாள் கூட தூங்குவதில்லை .காரணம் காமுகக் கயவர்கள் அவளைச் சுற்றி சுற்றி வருவதால் அவளால் நிம்மதியாக ஒரு நாள் கூட தூங்க முடியவில்லை .பகல் பொழுதில் தான் தூங்கிக் கொள்வாள். அப்போதும் கூட யாரோ அவர்களை சீண்டுவது போல் இருக்கும்.
கௌரியையும் இரண்டு குழந்தையையும் விட்டுச் சென்ற கணவன் இதுவரை எங்கே இருக்கிறான் என்ற தகவல் இல்லை .கௌரி நினைத்திருந்தால் யாரையாவது திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளை அனாதையாக விட்டு சென்று இருக்கலாம் .ஆனால் அப்படி செய்யவில்லை. அந்த மழைப் பொழுதில் பாலத்தின் கீழே அமர்ந்து கொண்டு விரையும் வாகனங்களையும் குறைவாக அடித்துக் கொண்டிருக்கும் மழையையும் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தார்கள்.
” அம்மா பசிக்குது” என்று ஒரு குழந்தை சொல்ல, அதற்கு பதில் சொல்ல முடியாமல் அந்த குழந்தையின் தலையைத் தடவினாள் கௌரி இன்னொரு குழந்தையும் கௌரியின் மடியில் சாய்ந்து கொண்டது. தூரம் பார்த்தாள். இடைவிடாத மழை. இன்னும் சற்று நேரத்தில் இந்தச் சாலை தண்ணீரால் நிரம்பிவிடும் அவர்கள் படுத்திருக்கும் இடத்திற்கும் தண்ணீர் வந்துவிடும். அவள் கட்டி வைத்திருக்கும் துணி மூட்டையை எங்கே வைப்பது ? என்ன செய்வது? என்று வானத்தை பார்ப்பதும் சாலை நெடுந்தூரம் பார்ப்பதுமாக இருந்தாள். வெளுத்து வாங்கிய மழையின் வெள்ளம் வடியாமல் சாலை வழியே வந்து கொண்டே இருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் நாம் அமர்ந்திருக்கும் இடம் தண்ணீர் நிரம்பி விடும். எங்கே செல்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தாள். ஒரு பக்கம் பசி. மறுபக்கம் இடமில்லை. என்ன செய்வது நனைந்தும் நனையாமல் இருக்கும் உடை. பசியால் வாடும் குழந்தைகள். அவளுக்கு செத்து விடலாம் போல இருந்தது.
இருந்தாலும் இந்த பூமியில் வாழ்ந்து தான் காட்டலாம் என்று வைராக்கியத்தோடு வாழ்ந்து கொண்டிருந்த கௌரிக்கு இன்று மிகவும் வருத்தமாக இருந்தது. எதற்காக இந்த பூமியில் நாம் பிறந்தோம் ?எதற்காக இங்கு வந்தோம் ? இந்த வாழ்க்கை சந்தோஷம் தரவில்லையே ?என்று அவள் தாரை தாரையாக அழுது கொண்டிருந்தாள் .கொஞ்சம் கொஞ்சமாக வந்த தண்ணீர் அவள் இருக்கும் இடத்தை நிறைத்தது. ரெண்டு குழந்தையையும் தூக்கிக் கொண்டு, தலையில் துணி மூட்டையை வைத்துக்கொண்டு நனைந்து கொண்டே சாலை வழியே நடந்தாள். மக்கள் எல்லாம் இன்னும் மூன்று நாட்களுக்கு மழை இருக்கிறது என்று அவரவர் வாழ்க்கைக்கு தேவையான சமையல் சாமான்களை வாங்கிக் கொண்டு விரைந்து ஓடிக் கொண்டிருந்தார்கள் .கௌரி தன் இரண்டு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு பசியோடு எங்கே செல்வதென்று தெரியாமல் அலைந்து போய்க் கொண்டிருந்தாள்.
அந்த நகரம் அவளுக்கு ஆதரவு தரவே இல்லை. எங்கே போகலாம்? எங்கே இருக்கலாம் ? இந்த இரவு எங்கே கழிப்பது ? இந்த பசி எங்கே போக்குவது ?அவளுக்கு இதெல்லாம் நடக்கும்போது கண்ணைக் கட்டி விட்டது போல இருந்தது .ஒன்றும் தெரியவில்லை நடந்து கொண்டே இருந்தாள். இன்னும் ஒன்று நாட்களுக்கு மழை இருக்கிறது. ரெட் அலர்ட் போட்டு இருக்கிறார்கள் என்று பேசிய மனிதர்கள் அவரவர் வீடுகளுக்கு விரைந்து கொண்டு இருந்தார்கள். கௌரி இரண்டு குழந்தைகளும் ரொம்ப நனைந்து இருந்தார்கள்
” ஏம்மா இப்படி குழந்தைகள மழையில கூட்டிட்டு போறியே ? காய்ச்சல் வந்தா என்ன செய்வ இப்படி வாம்மா ? “
என்று ஒரு பெண் கௌரியைக் கூப்பிட்டாள். அனிச்சையாகத் திரும்பிய கௌரி அந்த அம்மாவின் குரலை கேட்டு அவளிடம் வந்தாள்.
” இப்படி ஓரமா நில்லு. ஏன் இப்படி மழையில் நனைஞ்சிக்கிட்டு போறே? உடம்பு சரி இல்லாம போனா என்ன ஆகும்? “
என்று கரிசனையாகப் பேசிய அந்த தாய் சாப்பிட்டியா என்று கேட்டாள்.
இல்லை என்பது போல் தலையாட்டினாள் கௌரி
” சரி சாப்பிடு “என்று கௌரிக்கும் இரண்டு குழந்தைக்கும் சாப்பாடு கொடுத்தாள். கௌரியால் சாப்பிட முடியவில்லை. அழுது கொண்டே இருந்தாள்.
“ஏன் இப்படி அழுகுற ? எல்லாமே இங்க ஒன்னு தான். உனக்கு வீடு வாசல் இல்ல .சாப்பாட்டுக்கு வழியில்லை ” இங்கே வீடு வாசல் இருந்தாலும் இல்லனாலும் எல்லா மனுஷங்களும் ஒன்னுதான் இதே மழை பத்து நாளைக்கு தொடர்ந்து அடிச்சா மாடியில் குடி இருக்கிறவன் கூட வீடு இல்லாதவன் ஆயிடுவான். இங்க எதுவும் நிரந்தரம் இல்லை. நீ சாப்பிடு” என்று ஆறுதலாகப் பேசினாள் அந்தத் தாய். தூரம் பார்த்தாள் கௌரி . வானம் கொஞ்சம் மழையை விட்டிருந்தது. சாலையிலும் தண்ணீர் குறைந்திருந்தது. எப்படியும் நாம் இருப்பிடத்திற்கு சென்று விடலாம் அங்கு தண்ணீர் வழிந்திருக்கும் ” என்று மனதிற்குள் சந்தோசப்பட்டாள் கௌரி.
வாபஸ் வாங்கப்படாமல் இருந்தது ரெட் அலர்ட் .