செய்திகள்

ரூ.93 கோடியே 71 லட்சம் மதிப்பில் சேமிப்பு கிடங்கு, ஆய்வகங்கள், விற்பனை நிலையங்கள்: எடப்பாடி திறந்தார்

சென்னை, பிப்.14–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், வேளாண்மைத் துறை சார்பில் 93 கோடியே 71 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண் கட்டடங்களை திறந்து வைத்தார்.

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகின்ற வேளாண் தொழிலை மேம்படுத்திடவும், வேளாண் உற்பத்தி திறனில் உள்ள இடைவெளியை உரிய பண்ணை அணுகுமுறை மூலம் குறைத்து உணவுப் பயிர்கள் உற்பத்தியைப் பெருக்குவதற்கும், வேளாண் விளைபொருட்களின் அறுவடைக்குப் பிந்தைய பதப்படுத்தும் கட்டமைப்புகளை மேம்படுத்திடவும், சந்தையிணைப்பை வேறுபடுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்து அவர்களின் வருமானத்தைப் பல மடங்காக உயர்த்திடவும், தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திடவும் அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் 45 கோடியே 39 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், விழுப்புரம் மாவட்டம் – அவலூர்பேட்டை, திருக்கோவிலூர் மற்றும் செஞ்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் – உளுந்தூர்பேட்டை, கடலூர் மாவட்டம் – விருத்தாச்சலம், குறிஞ்சிப்பாடி மற்றும் ஸ்ரீமுஷ்ணம் ஆகிய இடங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கட்டப்பட்டுள்ள 7500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு, 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு, 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு, யந்திரங்களுடன் கூடிய தரம்பிரிப்பு மற்றும் மதிப்பீட்டு கூடம், ஏலக்கூடம், விவசாயிகள் ஓய்வு அறை, வியாபாரிகள் ஓய்வு அறை, பரிவர்த்தனைக் கூடம் மற்றும் எடைமேடை;

ஆராய்ச்சி நிலையங்கள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மதுரை, கிள்ளிக்குளம், ஈச்சங்கோட்டை மற்றும் குடிமியான்மலை ஆகிய இடங்களில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் 30 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விரிவுரை அரங்கங்கள், அலுவலகக் கட்டடங்கள், ஆய்வகங்கள், நூலகங்கள், பயிற்சியாளர்கள் விடுதியுடன் கூடிய பயிற்சியாளர் அரங்கங்கள்;

வேளாண்மைத் துறை சார்பில் 9 கோடியே 76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், கிருஷ்ணகிரி மாவட்டம் – காவேரிப்பட்டிணம் மற்றும் சூளகிரி, திருநெல்வேலி மாவட்டம் – ராதாபுரம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 3 ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள்; தஞ்சாவூர் மாவட்டம் – ஆடுதுறை, தேனி மாவட்டம் – வைகை அணை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 2 பூச்சிக்கொல்லி ஆய்வகங்கள்; தஞ்சாவூர் மாவட்டம் – ஆடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம் – நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி மாவட்டம் -– சின்னசேலம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 3 மண் ஆய்வுக்கூடங்கள்; சென்னை, சேப்பாக்கம், வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் 1 கோடியே 62 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்பட்ட கூட்டரங்கம்:

பழப் பயிர்களுக்கான

மகத்துவ மையம்

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம், தளியில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் பயிலும் மாணவிகளுக்காக 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதிக் கட்டடம்;

தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் மூலம், வெப்ப மண்டல பழப்பயிர்களான மா, எலுமிச்சை, கொய்யா, பலா, பப்பாளி மற்றும் இதர பழப் பயிர்களின் சாகுபடியினை விவசாயிகளிடம் ஊக்குவிக்கும் வகையில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி வட்டாரத்தில் உள்ள கஞ்சநாயக்கன்பட்டியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வெப்ப மண்டல பழப் பயிர்களுக்கான மகத்துவ மையம்;

மலைக்காய்கறி பயிர்களான காரட், பீட்ரூட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, பீன்ஸ், அவரை வகைகள் போன்ற பயிர்களின் சாகுபடியினை விவசாயிகளிடம் ஊக்குவிக்கும் வகையில், நீலகிரி மாவட்டம், நஞ்சநாட்டில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மலைக்காய்கறி பயிர்களுக்கான மகத்துவ மையம்;

கிராமப்புற சந்தை வளாகம், தோட்டக்கலை விளைப்பொருட்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற வாடிக்கையாளர்களை சென்றடையும் நோக்கத்துடன் தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் மூலம் செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டில் 96 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கிராமப்புற சந்தை வளாகம்:

தோட்டக்கலை

விற்பனை நிலையங்கள்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்வதில் ஏற்படும் சிரமங்களை குறைப்பதற்காகவும், இடைத்தரகர்கள் மூலம் ஏற்படும் இன்னல்களை தடுக்கும் வகையிலும், நுகர்வோர்களுக்கு தேவையான தரமான பசுமையான காய்கறிகள் மற்றும் பழங்களை நியாயமான விலையில் கிடைக்கச் செய்திடும் பொருட்டும், கோயம்புத்தூர் மாவட்டம் – கோயம்புத்தூர், தடாகம் சாலை மற்றும் சென்னை மாவட்டம் – தேனாம்பேட்டை, கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்கா ஆகிய இடங்களில் 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 2 தோட்டக்கலை விற்பனை நிலையங்கள்;

வேளாண்மைப் பொறியியல் துறையின் சார்பில் தருமபுரி மாவட்டம், அரூரில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மையக் கட்டடம்;

என மொத்தம் 93 கோடியே 71 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான வேளாண்மைத் துறை கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

பணி நியமன ஆணை

மேலும், வேளாண்மை இயக்குநரகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 34 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் 4 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, வேளாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் ந.சுப்பையன், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குநர் கே.வி.முரளிதரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *