அறிவியல் அறிவோம்
சூரிய சக்தியில் இயங்கும் பேட்டரி சைக்கிளை தெலங்கானா மாநிலம் வாராங்கல் அடுத்த கோபாலபுரத்தைச் சேர்ந்த 30 வயதான முப்பராஜு கண்டுபிடித்துள்ளார். இவர் சிறிய மெக்கானிக் கடை வைத்திருக்கிறார்.
தினமும் 20 கி.மீ. பயணித்து கடைக்குச் சென்று கொண்டிருந்தார். பெட்ரோல் விலை ஏறிக் கொண்டிருந்ததால் அவரால் சமாளிக்க முடியவில்லை.
சூரிய சக்தி மற்றும் பேட்டரி சைக்கிளைப் பயன்படுத்தி தன் கனவுக்கு உருவம் கொடுத்தார்.
அவரது புதிய கண்டுபிடிப்புக்கு வழக்கமாக அவர் பயன்படுத்தும் சைக்கிளையே பயன்படுத்தினார்.
ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த சைக்கிளை 20 கி.மீ வரை இயக்க முடியும். இதற்கு 9 ஆயிரம் ரூபாய் செலவானது. பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு சோலார் பேனலை பயன்படுத்துகிறார்.
சார்ஜே இறங்கிவிட்டாலும் பெடல் செய்து கொண்டே சைக்கிளை ஓட்டிச் செல்லலாம். என் தந்தை எலெக்ட்ரீசியன். அவர் அளித்த ஊக்கத்தால்தான் இந்த சோலார் சைக்கிளைக் கண்டுபிடித்தேன் என்கிறார் அவர்..
என் சைக்கிளைப் பார்த்துப் பிரமித்துப்போன எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பலரும் தங்கள் வாகனங்களுக்கும் சோலார் பேனல் மற்றும் பேட்டரி அமைத்துத் தரக் கேட்கின்றனர். ஒரு சைக்கிளுக்கு ரூ.10 ஆயிரம் வரை கட்டணம் விதிக்கிறேன். இதில், ஒரு சைக்கிளுக்கு எனக்கு ரூ. 1,000 கிடைக்கும்.
இவர் தெரு விளக்குகளை இருந்த இடத்திலிருந்து ஆன் செய்யும் ஆஃப் செய்யும் சென்ஸார் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார். இந்த சென்ஸார் முறை வாராங்கல்லில் உள்ள 100 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு, செல்போன்களை சூரிய சக்தி மூலம் சார்ஜ் செய்யும் பேனல்களையும் கண்டுபிடித்தேன். இதைப் பல ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன” என்றார்.