அறிவியல் அறிவோம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த கண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எபினேசர் (வயது 29). இவர் தமிழ் வழி மூலம் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்.
மேலும் விமான பைலட் இன்ஜினீயரிங் படிப்பை அமெரிக்காவில் படித்து முடித்த நிலையில் தற்போது தனியார் விமான பைலட்டாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நடுத்தர குடும்பத்தினரும் சொந்தமாக விமானத்தை வாங்கும் வகையில் சிறிய வகை விமானத்தைக் கண்டுபிடித்து விரைவில் அதைச் சோதனை ஓட்டமாக காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் பயன்பாடின்றி கிடக்கும் விமான ஓடுதளத்தில் இயக்க முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து எபினேசர், “கார் வாங்கும் நடுத்தர மக்கள் அதே விலையில் குட்டி விமானத்தை வாங்கும் வகையில் தற்போது இந்த சிறிய இலகுரக விமானத்தைக் கண்டுபிடித்துள்ளேன். இந்த விமானம் எடை குறைவான அலுமினியத்தால் செய்யப்பட்டது.
இதில் 3 வகையான டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. ஒன்றில் உப்பு தண்ணீரிலிருந்து ஹைட்ரஜனை பிரித்துப் பயன்படுத்துவது, மற்றொரு டேங்கில் பாக்டீரியாவிலிருந்து ஹைட்ரஜனை பிரித்துப் பயன்படுத்துவது, இறுதியாக உள்ளதில் சாதாரண பெட்ரோலை பயன்படுத்தி இயக்குவது என உருவாக்கியுள்ளேன்.
தற்போது ஒருவர் அல்லது 2 பேர் அமர்ந்து பயணம் செய்யும் விமானத்தை உருவாக்கியுள்ளேன். இந்த விமானம், 11 ஆயிரம் அடி உயரத்தில் 5 மணி நேரம் தொடர்ந்து பறக்கும்.
ஒரு மணி நேரத்தில் 100 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கலாம். 314 சி.சி.யுடன் 34 குதிரைத் திறன் கொண்ட இன்ஜின் உள்ளது. இன்ஜின் நின்றாலும் மீண்டும் பறக்கும் வகையில் தயார் செய்துள்ளேன். இந்த விமானத்தை இயக்க 100 மீட்டர் ஓடுதளம் போதுமானதாகும்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமான பாகங்களைப் பயன்படுத்தி இருக்கிறேன். ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையில் இந்த விமானத்தை வாங்கலாம். இதே விமானம் வெளிநாட்டில் ரூ.40 முதல் 60 லட்சம் வரை இருக்கும்.
இந்த இலகு ரக விமானத்தை காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பயன்படுத்தப்பட்ட விமான ஓடுதளத்தில் சோதனை ஓட்டம் நடத்த மத்திய அரசின் விமான போக்குவரத்து துறையிடமும் உச்சிப்புளியில் உள்ள இந்திய விமானப் படைத் தளத்திலும் அனுமதி பெற்றுள்ளேன்.
விரைவில் காவல் துறை அதிகாரிகளிடமும் அனுமதி பெற்று விமான ஓடுதளத்தில் இந்த விமானத்தை இயக்கி சோதனை ஓட்டம் நடத்த உள்ளேன்’’ என்றார்.