விரிவான ஆய்வு அறிக்கை: சட்டசபையில் துணை முதல்வர் தகவல்
2000 மின்சார பேருந்துகள் கொள்முதல்
சென்னை, பிப்.23
ரூ.6,683 கோடி செலவில் கோவை மெட்ரோ ரெயில் முதல் கட்டப்பணிகள் அமைப்பதற்கான விரிவான ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று இன்று சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
அவர் மேலும் பேசியதாவது:
போக்குவரத்துத் துறை
குறைந்த விலையில் தரமான பேருந்து போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கு, இந்த அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. 2011ஆம் ஆண்டிலிருந்து 14,489 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு, பேருந்துகளின் சராசரியான ஆயுட்காலம் 6.38 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2010 11ஆம் ஆண்டில் எரிபொருள் இயக்கத் திறன் ஒரு லிட்டருக்கு 5.25 கிலோமீட்டரில் இருந்து, 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு லிட்டருக்கு 5.40 கிலோமீட்டராக உயர்ந்துள்ளது. மாநிலப் போக்குவரத்துக் கழகங்களில், விபத்து விகிதம் ஒரு இலட்சம் கிலோமீட்டர் இயக்கத்திற்கு 0.09 என்ற அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக, 2020 21ஆம் ஆண்டு பேருந்து போக்குவரத்துக் கழகங்களுக்கு மிகவும் கடினமான ஆண்டாக இருந்தது. 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 3,717.36 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தங்களது செலவினங்களை மேற்கொள்வதற்காக, அரசு உத்தரவாதத்தின் அடிப்படையில் 3,739 கோடி ரூபாய் கடன்களைப் பெறுவதற்கு அரசு அனுமதித்துள்ளது. மேலும், போக்குவரத்துக் கழகங்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பேருந்து இயக்குவதற்கான கட்டணங்கள், மாணவர்களுக்கான இலவசப் பேருந்துப் பயணக் கட்டணம் மற்றும் ஏனைய மானியங்களாக 2,914.44 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. மேலும், 526.47 கோடி ரூபாய் குறுகியகாலக் கடனும், டீசல் மானியமாக 135.87 கோடி ரூபாயும் அரசு வழங்கியது.
தூய்மையான மற்றும் பசுமையான எரிபொருளை பயன்படுத்துவதில் உறுதியாக இருப்பதை எடுத்துக்காட்டும் வகையில் உலக C40 தூய்மை பேருந்து உறுதிமொழியில் கையெழுத்திட்டதில், நாட்டின் முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. அடுத்த சில ஆண்டுகளில், 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். அவற்றில் 2,000 பேருந்துகள் மின்சாரப் பேருந்துகளாக இருக்கும். முதல் கட்டத்தில், ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன், 1,580 கோடி ரூபாய் செலவில் 2,200 BS VI பேருந்துகளும், 500 மின்சாரப் பேருந்துகளும் கொள்முதல் செய்யப்படும். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக, 2021-22ஆம் ஆண்டின் இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 623.59 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் 9 கிலோமீட்டர் நீளமுள்ள சென்னை மெட்ரோ இரயில் முதற்கட்ட விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்துடன், மொத்தம் 54.1 கிலோமீட்டர் நீளமுள்ள சென்னை மெட்ரோ இரயிலின் முதற்கட்ட திட்டம் தற்போது முழுமையாகச் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், 61,843 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 118.90 கிலோமீட்டர் நீளத்திலான மூன்று வழித்தடங்கள் அடங்கிய, சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான நிதியில், மத்திய அரசு தனது பங்கை வழங்கும் என்று மத்திய நிதியமைச்சர் தனது வரவு-செலவுத் திட்ட உரையில் தெரிவித்துள்ளதை நான் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறேன். இத்துடன் இத்திட்டத்திற்கான மொத்த நிதியாதாரம் இறுதி செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் வழியாக விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலான மெட்ரோ இரயில் நீட்டிப்பிற்கான விரிவான திட்ட அறிக்கையும், தாம்பரத்திலிருந்து வேளச்சேரி வரையிலான திட்டத்திற் கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையும் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 6,683 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 44 கிலோமீட்டர் நீளமுள்ள கோயம்புத்தூர் மெட்ரோ இரயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.