சென்னை, பிப்.19-–
சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் 370 சாலைகள் 71.09 கிலோ மீட்டர் நீளத்தில் ரூ.35 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த சாலைகள் அமைக்கப்படும்போது ஏற்கனவே பழுதான சாலைகளின் மேற்பரப்பு அகழ்ந்தெடுக்கப்பட்டு தார்சாலை உரிய தரத்துடன் அமைக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக அம்பத்தூர் 200 அடி சாலை முதல் கொரட்டூர் சுரங்கப்பாதை வரை நேற்று இரவு தார்சாலை அமைக்கு பணி நடந்தது.
இதேபோல் மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், ஆலந்தூர், அடையாறு மற்றும் பெருங்குடி மண்டலங்களில் சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் 3.52 கிலோ மீட்டர் நீளத்தில் ரூ.3 கோடியே 65 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் திருவொற்றியூர், மாதவரம் மற்றும் பெருங்குடி மண்டலங்களில் சாலைகளில் ஒளிரும் விளக்குகள், குறியீடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் ரூ.37.37 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து மண்டலங்களிலும் 300 சாலைகள் 51 ஆயிரத்து 367 கிலோ மீட்டர் நீளத்தில் ரூ.29 கோடியே 71 லட்சம் மதிப்பில் தார்சாலைகளாக அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மொத்தம் ரூ.65 கோடியே 7 லட்சம் மதிப்பில் 122.45 கிலோ மீட்டர் நீளத்தில் 670 சாலைகள் தார்சாலைகளாக அமைக்கும் பணிகள் நடந்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.