சட்டசபையில் நிதி அமைச்சர் அறிவிப்பு
சென்னை, மார்ச் 20–
சென்னை தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே ரூ.621 கோடியில் 4 வழி மேம்பாலம் கட்டப்படும் என்று நிதி அமைச்சர் தெரிவித்தார்.
சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:–
தமிழ்நாடு ஒரு வளர்ச்சி பெற்ற மாநிலமாகத் திகழ்ந்தாலும் சமூக, பொருளாதாரக் குறியீடுகளின் அடிப்படையில், சில வட்டாரங்கள் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. இப்பகுதிகளும் வளர்ச்சியடையும் வகையில், பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இலக்குகளை எட்டுவதற்காக ‘வளமிகு வட்டாரங்கள் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை அரசு தொடங்கும். இத்திட்டத்தின் கீழ், மலைப்பகுதிகள் உட்பட மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய 50 வட்டாரங்கள் கண்டறியப்பட்டு, ஒவ்வொன்றிலும் தலா ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
ரூ.1000 கோடியில்
வடசென்னை வளர்ச்சி திட்டம்
நாட்டிலேயே வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான, சென்னை, பல்வேறு நிறுவனங்களால் வெளியிடப்பட்ட ‘வாழ உகந்த நகரங்கள் பட்டியலில்’ முன்வரிசையில் உள்ளது. இருப்பினும், நகரத்தின் சில பகுதிகளில், குறிப்பாக வடசென்னையில், போதிய அளவில் அடிப்படை வசதிகளும் கட்டமைப்புகளும் இல்லா நிலை உள்ளது. சென்னையில் சீரான, சமமான வளர்ச்சியை உறுதி செய்ய “வடசென்னை வளர்ச்சி திட்டம்” என்ற திட்டத்தை 1,000 கோடி ரூபாய் செலவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசு செயல்படுத்தும். இத்திட்டத்தில், கட்டமைப்பு பற்றாக்குறைகளையும் வளர்ச்சிக் குறியீடுகளின் குறைபாடுகளையும் கண்டறிந்து, அவற்றைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிதியையும் நடைமுறையிலுள்ள திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும்.
நெடுஞ்சாலைகள்
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பெருக்க, சாலைக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அரசு அதிக முன்னுரிமை அளிக்கின்றது. முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 1,407 கோடி ரூபாய் செலவில் 148 கி.மீ., சாலைகளை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகளும், 524 கி.மீ., சாலைகளை 803 கோடி ரூபாய் மதிப்பில் இருவழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேனாம்பேட்டை – சைதை
4 வழி மேம்பாலம்
வரும் ஆண்டில், 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணாசாலையில் நான்கு வழி மேம்பாலம் கட்டப்படும். பன்னாட்டுப் பொறியியல் நிபுணர்களின் ஆலோசனைகள் பெற்று சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகளுக்கு மேல் கட்டப்பட உள்ள இந்த மேம்பாலம் ஒரு நவீன பொறியியல் சாதனையாக அமையும். இப்பணிகள் நிறைவுற்றவுடன், பல முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்து, சாலைப் பாதுகாப்பும் மேம்படும்.
உயர்மட்ட பாலம்
பருவமழை மற்றும் வெள்ளக் காலங்களின்போது, போக்குவரத்து துண்டிக்கப்படாமல் இருக்க, 996 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 215 தரைப்பாலங்களுக்கு பதிலாக உயர்மட்டப் பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை புறவட்டச் சாலை திட்டத்திற்காக 1,847 கோடி ரூபாயும், சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டத்திற்கு 1,500 கோடி ரூபாயும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம்-II க்கு 645 கோடி ரூபாயும் வரவு-செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இம்மதிப்பீடுகளில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு 19,465 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.