போஸ்டர் செய்தி

ரூ.547 கோடி செலவில் திறன்மிகு மையம்: எடப்பாடி பழனிசாமி துவக்கினார்

சென்னை, அக்.11–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 10–ந் தேதி அன்று தலைமைச் செயலகத்தில், 546 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குரோம்பேட்டை, அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி. வளாகத்தில், பொறியியல் மற்றும் பல்தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு உலக தரத்திலான உயர் தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள திறன்மிகு மையத்தை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் – அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், வேலூர் – தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரி, தரமணி – மத்திய பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஆவடி – முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார்துறை கூட்டமைப்பு திட்டத்தின்கீழ் சீமென்ஸ் மற்றும் டிசைன்டெக் லிமிடெட் உடன் இணைந்து ஒரு திறன்மிகு மையம் (Centre of Excellence) மற்றும் அதனுடன் ஐந்து தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்கள் (T-SDIs – Technical Skill Development Institutes) அமைக்கப்படும் என்று புரட்சித் தலைவி அம்மா கடந்த 20.9.2016 அன்று அறிவித்தார்.

அதன்படி, பொறியியல் மற்றும் பல்தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு உலக தரத்திலான உயர் தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்குவதற்காக சீமென்ஸ் மற்றும் டிசைன்டெக் நிறுவனத்துடன் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டம், குரோம்பேட்டை, அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி. வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திறன்மிகு மையத்தை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.

உலகத் தரத்தில்….

இத்திறன்மிகு மையம், இன்றைய தொழில் நிறுவனங்களின் தேவைகளுக்கேற்ப தொழில்நுட்ப மாணவர்களின் திறனை அதிகரித்து உலக தரத்திலான உயர் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குவதற்காகவும், அதன் மூலம் அவர்களுக்கான வேலைவாய்ப்பை பெருக்குவதற்காகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வடிவமைப்பு, தானியங்கி, ரோபோடிக்ஸ் போன்ற உயர்பயிற்சிகள் அண்ணா பல்கலைக்கழகத்தை மையமாகக் கொண்டு, அண்ணா பல்கலைக்கழக மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும்.

மேலும், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இடங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், வேலூரில் உள்ள தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரி, தரமணியிலுள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஆவடியில் உள்ள முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்களை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி துவக்கி வைத்தார்.

ஜெர்மனி நாட்டை சேர்ந்த….

இந்த தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்களில் படிக்கும் மாணவ மாணவியரோடு, மற்ற கல்லூரி மாணவ, மாணவியருக்கும் உயர்மட்ட திறன் பயிற்சிகள் வழங்கப்படும். ஜெர்மனி நாட்டை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான சீமென்ஸ் நிறுவனத்தால் நேரடியாக உலகதரத்திலான பயிற்சி கருவிகளும், இயந்திரங்களும், தளவாடங்களும் இம்மையங்களில் நிறுவப்பட்டுள்ளன.

சீமென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டிசைன்டெக் நிறுவனம் நேரடியாக மாணவ மாணவியருக்கு பயிற்சிகளை வழங்க உள்ளது. நாளுக்கு நாள் மாறிவரும் திறன் தேவைகளுக்கேற்ப உயர்மட்ட திறன் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதால், இப்பயிற்சியை பெறும் மாணவ, மாணவியர் தங்களது வேலைபெறும் தகுதியை பன்மடங்கு உயர்த்திக் கொள்வதோடு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் தகுதிமிகு வேலை வாய்ப்புகளைப் பெற இயலும்.

மொத்தம் 546 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இத்திறன்மிகு மையம் மற்றும் அதனுடன் இணைந்த 5 தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்களில், தமிழ்நாடு அரசின் பங்குத் தொகை 54 கோடியே 68 லட்சம் ரூபாய் ஆகும்.

இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா, தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர் சுனீல் பாலீவால், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் பா.ஜோதி நிர்மலாசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *