ராமேசுவரம், ஆக.5-
பாம்பன் கடலில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள ரெயில் தூக்குப்பாலம் வழியாக ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.
பாம்பன் கடலில் ரூ.545 கோடி நிதியில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ரெயில் பாலத்துக்காக பாம்பன் கடலில் 333 தூண்கள் அமைக்கப்பட்டன. அதன் மீது இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டன.
அதே போல பாலத்தின் மையப்பகுதியில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட மேல்நோக்கி திறந்து மூடும் வகையிலான செங்குத்து தூக்குப்பாலம் பொருத்தும் பணிகள் கடந்த 26-ந்தேதி அன்று நள்ளிரவில் நடந்தது.
அப்போது கடல் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூண்கள் மீது தூக்குப்பாலம் கிரேன் மூலம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் மெல்ல மெல்ல கிரேன் அகற்றி, தூக்குப்பாலத்தை அங்கு அமைக்கப்பட்டு இருந்த தூண்களில் பொருத்தி இணைக்கும் பணிகள் கடந்த 4 நாட்களாக நடந்தன. அதே நேரம், தூக்குப்பாலத்தில் சிலிப்பர் கம்பிகள் அமைத்து தண்டவாளம் அமைக்கும் பணிகளும் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக நடந்தன. அந்த பணிகளும் நேற்று முழுமையாக முடிந்தன.
இதனால் பாம்பன் கடலில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள 2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ரெயில் பாலத்தில் ஆய்வு என்ஜினை இயக்கி சோதனை நடத்துவது என முடிவானது.
அதன்படி முதல்முறையாக நேற்று ஆய்வு என்ஜின் ஒன்றின் மூலம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதற்காக நேற்று மாலை 6 மணி அளவில் மண்டபத்தில் இருந்து ரெயில்வே ஆய்வு என்ஜின் புறப்பட்டு, பாம்பன் ரெயில்வே பாலத்தில் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டது. தொடர்ந்து தூக்குப்பாலத்தின் நுழைவுப் பகுதிக்கு முன்பாக ஆய்வு என்ஜின் நிறுத்தி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
தொடர்ந்து ரெயில்வே ஆய்வு என்ஜின் கடலுக்குள் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு உள்ள 650 டன் எடை கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலத்தில் மெதுவாக இயக்கப்பட்டு வெற்றிகரமாக கடந்தது.
தூக்குப்பாலத்தை மெதுவாக கடந்த ஆய்வு என்ஜின், கடல் பாலத்தில் முழுமையாக பயணித்து, பாம்பன் ரெயில் நிலையத்தை அடைந்தது. இதுவரை புதிய ரெயில் பாலத்தில் பகுதி, பகுதியாக மட்டுமே ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதேபோல சரக்கு ரெயில் பெட்டிகளுடன் இயக்கி சோதனை செய்யப்பட்டது.
ஆனால் நேற்று முதல் முறையாக புதிய ரெயில் பாலத்தின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனை வரை வெற்றிகரமாக ரெயில் ஆய்வு என்ஜின் இயக்கப்பட்டு, சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை பாம்பன் ரோடு கடல் மேம்பாலத்தில் இருந்து பார்வையிட்ட சுற்றுலா பயணிகள் கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அடுத்த கட்டமாக மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தை திறந்து மூடுவதற்கான பணிகள் நடக்க உள்ளன என்று ஆர்.வி.என்.எல். அதிகாரிகள் தெரிவித்தனர்.