செய்திகள்

ரூ.45 லட்சம் கையாடல் விவகாரம்: விஷால் அலுவலகப் பெண் ஊழியர் மீது வழக்குப்பதிவு

சென்னை, ஜூலை 8–

ரூ.45 லட்சம் மோசடி தொடர்பாக நடிகர் விஷால் அலுவலகப் பெண் ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

விஷால் பிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடிகர் விஷால் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலம் பல படங்களைத் தயாரித்துள்ளார். இந்நிறுவனம் தொழிலாளர்களுக்குக் கட்டவேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் டிடிஎஸ் தொகையைக் கட்டவில்லை என விஷால் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரங்களைக் கவனித்து வந்த பெண் கணக்காளர் ரம்யா, தொழிலாளர் டிடிஎஸ் தொகையில் ரூ.45 லட்சத்தை முறைகேடாக தனது உறவினர் வங்கிக்கணக்கில் மாற்றிக்கொண்டு தலைமறைவானதாகப் புகார் எழுந்தது.

இதுகுறித்து விஷால் பிலிம் ஃபேக்டரி தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் கடந்த 3-ம் தேதி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரில் கணக்காளர் ரம்யா பணம் கையாடல் செய்ததாகத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஷால் அலுவலக ஊழியர்கள், சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலாளர் அளித்த ஆவணங்கள், இ-மெயில் உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து தலைமறைவான ரம்யாவைத் தேடி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *