செய்திகள்

ரூ.4073 கோடி ஜிஜிஎஸ்டி தொகையை உடனே வழங்குங்கள்

2017–18ம் ஆண்டுக்கு தமிழகத்துக்கு வரவேண்டிய

ரூ.4073 கோடி ஜிஜிஎஸ்டி தொகையை உடனே வழங்குங்கள்:

மத்திய அரசிடம் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

‘2018, 2019 ஆண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.1654 கோடி நிலுவைத் தொகையையும் வழங்குங்கள்’

 

புதுடெல்லி, ஜூன் 12–

2017–2018ம் ஆண்டிற்கு தமிழகத்திற்கு வரப்பெற வேண்டிய ஐஜிஎஸ்டி தொகை ரூபாய் 4073 கோடியினை விரைந்து வழங்கிட வேண்டும்; 2018–2019ம் ஆண்டிற்கு நிலுவையாக உள்ள ரூபாய் 553.01 கோடி மற்றும் 2019–2020ம் ஆண்டிற்கு நிலுவையாக உள்ள ரூபாய் 1101.61 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையினை மத்திய அரசு விரைந்து வழங்கிட வேண்டும் என அமைச்சர் டி.ஜெயக்குமார் மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.

40வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற கூட்டமானது இன்று காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. முதலமைச்சரின் ஆணைப்படி, மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் கலந்து கொண்டார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு), முதன்மைச் செயலாளர், வணிகவரி ஆணையரும் கலந்து கொண்டார்கள்.

இன்றைய கூட்டத்தில், ஜிஎஸ்டி நடைமுறைகளை எளிமைபடுத்துவதற்கான மற்றும் வணிகர்களுக்கு பயனளிக்கக் கூடிய சட்டக்குழுவின் பல்வேறு பரிந்துரைகள் விரிவான விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

உணவு தானியங்களை விற்பனை செய்யும் வணிகர்கள் உறுதிமொழி பத்திரத்தினை காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் நேர்வுகளில், அவ்வாறான காலதாமதத்தினை பொறுத்தருள வேண்டி மன்றத்தின் பரிசீலினைக்காக அமைச்சர் ஏற்கனவே ஒரு கருத்துருவினை முன்வைத்துள்ளார். வணிகர்களின் நலன் கருதி அதன் மீது சாதகமான முடிவினை விரைந்து எடுக்குமாறு அமைச்சர் இன்றைய கூட்டத்தில் வலியுறுத்தினார்.

ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் ஜவுளி, காலணி, செல்பேசி, உரங்கள் போன்ற பொருட்கள் தலைகீழான வரி கட்டமைப்பு கொண்டுள்ளன. இதனால் தொழில் புரிவோர்களுக்கு இடர்பாடுகள் ஏற்படுவதுடன் வரி திருப்புத் தொகையும் வழங்கப்பட வேண்டியுள்ளது. இதனை சீர் செய்யும் விதமாக fitment committee பரிந்துரைகள் இன்றைய கூட்டத்தில் மீண்டும் விவாதிக்கப்பட்டன. இந்த கருத்துருக்களில் துணி மற்றும் ஆயத்த ஆடை மீதான வரியானது 5%லிருந்து 12% ஆக உயர்த்துவது ஏற்புடையது அல்ல என அமைச்சர் தனது கருத்தினை முன்வைத்தார்.

உரங்கள் மீதான வரி உயர்வு

உரங்கள் மீதான வரியினை 5%லிருந்து 12% ஆக உயர்த்துவது குறித்த கருத்துருவும் விவாதிக்கப்பட்டது. ஆனால் வரி உயர்வினால் உரங்கள் மீதான விலை அதிகரிக்கும் என்பதால் இந்த கருத்துரு முற்றிலும் ஏற்புடையதாக இல்லை என தனது எதிர்ப்பினை அமைச்சர் பதிவு செய்தார்.

வணிகப் பிரதிநிதிகள், வணிக சங்கங்கள் மற்றும் பிற வணிக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு தொடர்பான நிலுவையில் உள்ள கோரிக்கைகளான கைத்தறி பொருட்கள்; கொள்கலனில் அடைக்கப்பட்டு வணிகச் சின்னம் இடப்பட்ட அரிசி மற்றும் இதர உணவு தானியங்கள்; ஜவ்வரிசி; ஊறுகாய்; வெண்ணெய்; நெய்; விவசாயக் கருவிகள்; ஜவுளித் தொழிலில் பயன்படும் யந்திர பாகங்கள்; பம்ப் செட்டுகள்; மீன்பிடி தொழிலுக்கான உபகரணங்கள்; மரவள்ளிக் கிழங்கு ஸ்டார்ச்; வணிக சின்னமிடப்படாத நொறுக்கு தீனிகள்; பேக்கரி பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள்; பல்வேறு வகையான வத்தல்கள்;

பிஸ்கட்டுகள்; உரம், நுண் ஊட்டச் சத்துகள், பூச்சி கொல்லிகள் மற்றும் பூஞ்சை கொல்லிகள்; கற்பூரம்; காய்ந்த மிளகாய், வெந்தயம், தனியா, மஞ்சள் போன்றவை மற்றும் அதன் பொடிகள்; சீயக்காய்; கடித உறை, அட்டைகள், டயரிகள் பயிற்சி குறிப்பு மற்றும் கணக்கு புத்தகம் போன்ற காகிதப் பொருட்கள்; காதிப் பொருட்கள்; வெளுப்பதற்கான திரவம்; பவானி தரைவிரிப்பு; மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்; வேப்பம் பிண்ணாக்கு; அரிசி தவிடு மீது வரி விலக்கு அல்லது எதிரிடை கட்டணமாக மாற்றல்; வெள்ளி மெட்டி, தாலி போன்றவை; அலுமினிய பாத்திரங்கள் மற்றும் அலுமினிய கழிவுகள்; பட்டு நூல் மற்றும் சரிகை; தேங்காய் நார் பொருட்கள்;

இரப்பர் கலந்த நாரினால் செய்யப்பட்ட மெத்தைகள்; பேக்கரியில் பயன்படும் ஈஸ்ட்; சுருட்டு; கொள்கலனில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள்; கோவில்களில் உபயோகிக்கப்படும் வாகனம், தேர், திருவட்சி ஆகியவை; மொறுமொறுப்பான ரொட்டித்துண்டு (ரஸ்க்); நன்னாரி சர்பத்; பனஞ்சர்க்கரை; பப்பாளி மிட்டாய்; காலர் துணி; சாம்பிராணி; பனைநார் மற்றும் மட்டைகள்; கோரைப் பாய்; பயோ டீசல்; சல்லா துணி மற்றும் கட்டு போடும் துணி; துணி பை; மெழுகுவர்த்திகள்; சங்கு மற்றும் கடல் சிப்பியாலான கைவினைப் பொருட்கள்; கையால் செய்யப்பட்ட இரும்பு பெட்டி; கையால் செய்யப்பட்ட பூட்டு; விவசாய நடவடிக்கைகள் தொடர்பான சேவைகளுக்கு வரி விலக்களித்தல்;

மாநில மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு விலக்களித்தல்; சிட் நிதி தொடர்பான சேவைகளுக்கு மற்றும் ஆயுள் இன்சுரன்ஸ் பிரிமியம் மீது விலக்களித்தல்; நெல் குற்றுகை சேவைகளுக்கு வரி விலக்களித்தல்; நுண்நீர் பாசன கருவிகளுக்கு வரிவிலக்கு; மற்றும் பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றிற்கு வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு ஆகியவை வழங்கப்பட வேண்டுமென இன்றைய கூட்டத்தில் அமைச்சர் டி. ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

மேலும், ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர்களின் வரி குறைப்பு தொடர்பான கோரிக்கையினையும் பரிசீலிக்க வேண்டுமென அமைச்சர் கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *