திருநெல்வேலி, பிப்.7-
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் ரூ.3,800 கோடியில் ‘சோலார் பேனல்’ தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி அருகே உள்ள கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு டாடா பவர் சோலார் நிறுவனம் சார்பில் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்வதற்கான தகடுகள் (சோலார் பேனல்) மற்றும் உபகரணங்கள் (மாடுல்) ஆகியவற்றை தயாரிக்கும் தொழிற்சாலை ரூ.3,800 கோடி முதலீட்டில் 380 ஏக்கரில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு 4 தொழிற்சாலை வளாகங்களில் 4.3 ஜிகாவாட் மின்உற்பத்தி செய்வதற்கு தேவையான உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த தொழிற்சாலையின் உற்பத்தி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. சோலார் நிறுவன மேலாண்மை இயக்குனர் பிரவீர் சின்ஹா வரவேற்று பேசினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேடையில் வைக்கப்பட்டிருந்த ரத்தன் டாடா உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து பொத்தானை அழுத்தி கல்வெட்டை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் தொழிற்சாலை வளாகத்துக்கு சென்று அங்குள்ள பொத்தானை அழுத்தி உற்பத்தியை தொடங்கி வைத்தார். மேலும் ஆலை வளாகம் முழுவதும் சுற்றிப்பார்த்தார். அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்களிடம் பேசிய முதலமைச்சர், அவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.அங்கு உற்பத்தி செய்யப்பட்ட ஒரு சூரிய ஒளி மின் உற்பத்தி தகட்டில் ‘வாழ்த்துகள்’ என்று எழுதி தனது கையெழுத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்தார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இந்த விழாவில் டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் காணொலி காட்சி மூலமாக பேசினார். அப்போது அவர், ‘இந்தியாவிலேயே ஒரே இடத்தில் அமைக்கப்பட்டு உள்ள மிகப்பெரிய சோலார் பேனல் தொழிற்சாலை இதுதான். இது 80 சதவீதம் பெண்களை கொண்டு இயங்குகிறது. முற்றிலும் நவீன தொழில்நுட்பத்தை கொண்டு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல உதவிகளை செய்து உள்ளார். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்’ என்றார்.
இந்த நிகழ்ச்சிகளில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி.ராஜா, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.66 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட்டை திறந்து வைத்தார். தொடர்ந்து நேருஜி கலையரங்கத்தில் கட்சி நிர்வாகிகளுடான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
––––
விக்ரம் சோலார் தொழிற்சாலைக்கு அடிக்கல்
கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் விக்ரம் சோலார் நிறுவனம் சார்பில் மேலும் ஒரு சோலார் பேனல் உற்பத்தி தொழிற்சாலை அமைகிறது. ரூ.2,574 கோடி முதலீட்டில் 2,500 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய சூரிய ஒளி மின்சக்தி தகடு மற்றும் உபகரணங்கள் தயாரிக்கும் ஆலையாக இது அமைய உள்ளது. இதற்கான அடிக்கல்லை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். இங்கு 3 ஜிகாவாட் மின்உற்பத்திக்கு தேவையான தகடுகளும், 6 ஜிகாவாட் உற்பத்திக்கு தேவையான உபகரணங்களும் தயாரிக்கப்பட உள்ளது.